சர்வ நிச்சயமாக ஒரு புது உலகுக்குள் சென்ற பேரனுபவம் கிடைத்தது. ஜோ டி குருஸ் எழுத்தை இந்த நூல்வழி தான் வாசித்தேன். பின்னிட்டார்
1937 வாக்கில் துவங்கும் கதை பரதவர்களின் வாழ்வோடு நம்மை அழைத்துச்செல்கிறது. கோத்ராப்பிள்ளை, தோக்களத்தா, தொம்மந்திரையார், சூசையார், சிலுவை, வசந்தா, கில்பர்ட், ஜஸ்டின், சுந்தரி டீச்சர், ரத்னசாமி நாடார், காகு சாமியார் உள்ளிட்ட இன்னும் நிறைய மனிதர்களின் எண்ணங்களும் நடத்தைகளும் கண்முன்னே காட்சிகளாகின்றன.
நிறைமாத கர்ப்பணியான ஊமையன் மனைவியை சூசையார் வலுக்கட்டாயமாக வன்புணர்கிறார். புணர்ச்சி முடித்து அவர் வெளி வரும்போது ஊமையன் மனைவி அழுதுகொண்டிருப்பார். மனதை விட்டு அகல மறுக்கிறது அந்த வேதனையான காட்சி. ஊமையன் கடலில் சாக, அவன் மனைவியும் போய்ச்சேர பிறந்த அந்தக்குழந்தையை சூசையார் வளர்க்கிறார். அவன் தான் சிலுவை. இந்தச் சிலுவை பாத்திரத்தின் வார்ப்பில் தான் எவ்வளவு பேரன்பும் பெருங்கருணையும். சூசையார் மீது இறுதிவரை அவன் வைத்திருந்த விசுவாசம் சூசையாருக்கு மன நடுக்கத்தை கொடுக்கிறது. கோத் ரா பிள்ளை தோக்களத்தா ஜோடி போல எல்லா ஜோடிகளும் அமைந்துவிட்டால் விவகாரத்து நீதிமன்றமே வேண்டாம்
இவர்களின் கதைகளினூடே அந்தந்த காலத்து அரசியல் சம்பவங்கள், நாடார்களுக்கும், பரதவர்களுக்கும் ஏற்பட்ட சண்டைகள் எல்லாம் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.
போர்ச்சுக்கீசியரின் நன்றிக்கடனுக்காக பரதவ இன மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர் என்று நாவலின் 98-ஆவது பக்கத்தில் ஒரு செய்தி. மதம் மாற ஒப்புக்கொண்ட மக்களுக்கு தாம் காலம்காலமாக வழிபட்ட இந்துமத பழக்கவழக்கங்களை முற்றாக ஒழிக்க முடியவில்லை. அதைப்பறை சாற்றுவதைப் போல நாவலில் வரும் மன்றாடி கதாப்பாத்திரமும், தொம்மந்திரை கதாப்பாத்திரமும் பேசிக்கொள்ளும்.
கிறிஸ்வத மத ஆதரவும் எதிர்ப்பும், இந்துமதம் மேலுள்ள பிடிப்பை அகற்ற முடியாத மன நிலையையும் இந்த கேரக்டர்களின் உரையாடல் வழியே அற்புதமாக உணர்த்தியிருப்பார் ஜோ.டி குருஸ்
தூத்துக்குடி ஆமந்துறை சர்ச்சில் சாமியாராக இருக்கும் காகுசாமியார் என்பவரை அந்த ஊர் பரதவர்கள் கர்த்தருக்கும் மேல் நேசிக்கிறார்கள். அதற்கான காரணத்தை காகுசாமியார் தன் வாழ்நாளில் நிறைய வைத்துள்ளார். தொம்மந்திரை மீது அவர் காட்டும் அக்கறை போல ஊர் மக்கள் எல்லோர் மீதும் அவருக்கு பெரிய அக்கறை. பிறருக்காக கையேந்தி வாழ்ந்த மெய்யேந்திய ஒரு ஆத்மாவாக காகுசாமியார் திகழ்கிறார். 15 வருடங்கள் சேவை செய்தவர் ஆமந்துறை விட்டு கிளம்பும் போது ஊர் மக்கள் அவரை பல்லக்கில் வைத்து வலம் வருகிறார்கள். கண்களில் துளி நீரை வரவைத்தது அந்தக்காட்சி
மனித வாழ்வை கீழிறக்கிச் செல்லும் அபாயம் கொண்டது துரோகம். மேம்படுத்திச்செல்லும் மகிமை கொண்டவை தியாகமும் அன்பும். நாவலை முடிக்கும் போது ஒருதுளி கண்ணீரோடு இதை உணர முடிந்தது
மகத்தான நாவல்🤍
பரிந்துரைத்த நண்பர் எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதனுக்கு நன்றி

