“பெறப்பப் பெரட்டிப் போட்ட மாதிரி இருக்கணும் சாமி சாவு. பெறக்கறப்ப பெறக்குற உசுரு அழுதுக்கிட்டே வருது; இருக்குற உசுருக சிரிக்குது. சாகிறப்ப சாகிற உசுரு சிரிச்சுக்கிட்டே போகணும்; இருக்குற உசுருக அழுகணும். அதான் சாமி நல்லசாவு.” காலஞ்செத்த கருவாச்சி ஞானம் தேடி வந்த சாமியார்ட இப்படிச் சொல்லுவா. “நாலுவேர் அழுவுத மாதி சாவணுமே ஒழிய சிரிக்க மாதிரி சாவப்பிடாதுல” ம்பார் எங்க ஊர்ல ஒரு தாத்தா..
இந்த நாவல்ல வர்ற, கருவாச்சி, கட்டையன், கொண்ணவாயன், பெரியமூக்கி, அழகுசிங்கம், சடையத்தேவரு, உருமாபெருமாத் தேவரு, வளவிச் செட்டியாரு, கனகம், பவளம், திம்சு என எல்லா ஆட்களையும் நேர்ல கண்டிருக்கேன் வேறவேற பேர்ல.
எப்படி வாழணும்னு கருவாச்சிட்ட கத்துக்கலாம்…எப்படி வாழக்கூடாதுன்னு சடையத்தேவரு, கட்டையன், அழகுசிங்கம் ஆகியோர்ட கத்துக்கலாம்… கடலை வாங்கி காலுக்கடியில வச்சிக்கிட்டாலும் உடலை நீங்கி போகப்போற உசுரை எந்த வல்லானாலயும் தடுத்து நிறுத்திர முடியாது. அதனால போறவரைக்கும் புத்தியக்கடன் கொடுக்காம பொழைக்கணும். 37 வருசம் கழிச்சு கொடுமையே கடமைன்னு இருந்த கட்டையன் கருவாச்சி கால்ல விழுகும் போது இதான் தோணுச்சிது..
நிச்சயமா காவியம் என்ற பெயருக்கு 100% பொருத்தமான புத்தகம் இது. இலக்கியத்தில் இருந்து வாழ்க்கையை எடுக்கணும்னு ஒரு உதவி இயக்குநர் சொன்னார். வாழ்க்கையில இருந்து இலக்கியம் எடுக்கணும்னு நான் சொன்னேன். இது வாழ்க்கையில இருந்து எடுக்கப்பட்ட இலக்கியம். அதனால தான் ஒவ்வொரு அத்தியாத்திலும் உசுர் கரைஞ்சி ஓடுது நமக்கு. வைரமுத்து எனும் பெரும்படைப்பாளி இந்த நூலுக்கென எத்தனை உழைப்பைக் கொட்டியிருப்பார்!!
பொழப்புக்கு வழியத்த கருவாச்சி சாவுவீட்டுக்கு கூலிக்கு மாரடிக்கப் போறா ஒப்பாரி பாடுற ரங்கம்மாவோட. அப்ப கீர்த்தனை கூட்டி இவிய ஒப்பாரி பாடும்போது, சாவு ஆசை வருது இருக்குற கிழடுகளுக்கு.. இந்த இடத்துல துணுக்குற்றேன். ஒரு எழுத்தாளர் தான் எழுதுற கதைகளில் வர்ற கதை மாந்தர்களா அவர் மாறி எழுதும் போது தான் கதாப்பாத்திரம் உயிர்பெறும். இந்த நாவல்ல உயிரில்லாத பிணத்துக்கும் உயிர் கொடுத்திருப்பார் வைரமுத்து. இப்படியொரு மண்வாசனை எழுத்தை அவர் தீட்டி தந்திருப்பது வாசிப்போர் பெற்ற வரம். கதையின் ஒவ்வொரு நகர்வுக்கும் அத்தனை பொருத்தமான சொற்களும் பழைய வாழ்க்கைத் தகவல்களும் கெட்டியாக கொட்டிக்கிடக்குது புத்தகம் பூரா.
“எல்லாக் கடவுளுக்கும் புள்ள இருக்கோ இல்லியோ. எல்லாப் புள்ளைக்கும் கடவுள் இருக்கு ஆத்தா (அம்மா) ரூவத்துல” இப்படி ஒரு வரி ஒரு இடத்துல வரும். இந்த வரில இருக்குற அதிர்வு கதையிலயும் அப்படியே இருக்குது. எத்தனை புத்தகம் வாசித்து என்ன. ..? இத்தனை காலம் இதை வாசிக்கலயேன்னு ஏங்க வைத்த நூல் கருவாச்சி காவியம்❤️❤️
இப்பவோ…எப்பவோ நிச்சயமா இது ஒருசினிமாவா வரும்..வரணும்..அந்த வாய்ப்பை கவிப்பேரரசு யாருக்கு வழங்குறாரோ…பெறப்போகிறவர் நிச்சயமாக பேர்(று) பெறுவார்🔥🔥
Vairamuthu ❤️

