இதுவரை அமீஷ் எழுதிய நூல்களை எதையும் வாசித்ததே இல்லை. இந்த வருட வாசிப்புக் களத்தில் அடியேனோடு இணைந்த தமிழ்சினிமாவின் சிறந்த டப்பிங் இன்ஜினியர்களில் ஒருவரான பாரி இந்த நூலை கொடுத்து, “இதை அவசியம் வாசிங்க உங்களுக்கு நிச்சயமா பிடிக்கும்” என்றார். முதலில் ஒரு விசயம் நூலை மிகச்சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார் பவித்ரா ஸ்ரீநிவாசன்
சிவன் ஒரு சாதா மனிதனாக வாழும் எதார்த்தத்தோடு கதை துவங்குகிறது. ஒரு போர்க்குழுவை விரட்டியடித்து விட்டு, தன் காட்டு மக்களோடு மெலூஹா என்ற நகருக்குச் செல்கிறார் சிவன். அங்கு அவரது நீலநிறக் கழுத்தைக் கண்டவர்கள் இவர் நம் சூர்யவம்சிகளை காக்க வந்த நீலகண்டர் என தெளிகிறார்கள். சிவனுக்கு மரியாதையைக் கொட்டுகிறார்கள். இங்கு தான் தன் சக்திதேவியை சிவன் சந்திக்கிறார். தேவிக்கு இவர் சிவன் என தெரியவில்லை. முதல் பார்வையிலே சதி எனும் நாமம் கொண்ட சக்திதேவி மீது பித்துநிலை கொள்கிறார் சிவன். ஒரு நாட்டிய நிகழ்வு ஒன்றில் சதி ஆடுவதை ரசிக்கும் சிவன், சதியின் நாட்டியத்தில் பாவம் தவறியுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். சாதி அடையாளம் ஏதுமில்லாமல், காட்டுமிராண்டி தோற்றத்திலிருக்கும் இவனுக்கு எப்படி நடனம் பற்றித் தெரிகிறது என்று தேவி வியக்கிறாள். இந்தக் காட்சியை வாசிக்கும் போதே சிவனின் நடராஜர் தோற்றம் நம் மனதிற்குள் எழுகிறது. சிவன் தன் நடனத்தைத் துவங்குகிறார். தேவி வியந்து பார்க்கிறாள். சூரியவம்சிகளின் மன்னரான தக்ஷருக்கு சிவனின் வேர் அறிந்ததால் சிவனோடு சக்தி இணைய வேண்டும் என்றே விரும்புகிறார். ஆனால் நாட்டின் சேனாதிபதியாகிய பர்வதேஸ்வரர் இதை எதிர்க்கிறார். காரணம் சதி விகர்மா என்பதால்.
இல்லற வாழ்விற்கு தகுதியற்ற பெண்களை விகர்மா என்கிறது இராமபிரான் ஆண்ட சூர்யவம்ச தேசம்.
“சதி ஏற்கெனவே திருமணம் முடிந்த பெண். அவள் கர்ப்பமுற்று இறந்த குழந்தையைப் பெற்றெடுத்தவள். அதனால் அவளுக்கு இல்லற இன்பம் துய்க்கும் வாய்ப்பை சூர்யவம்சம் வழங்காது. மேலும் கணவனையும் இழந்தவள் என்பதால் இன்னொரு இல்லற வாய்ப்பே கிடையாது என்கிறார் பர்வேதஸ்வரர். மேலும் அவருக்கு சிவன் தான் நீலகண்டர் என்பதை ஏற்க பெரும் தயக்கம் இருக்கிறது. இராமபிரானை இறைவனாக ஏற்றவருக்கு ஒரு காட்டுவாசியை மகாதேவராக ஏற்றுக்கொள்ள பெரும் தயக்கம்.
ஆனால் ஒரு கட்டத்தில் சந்திரவம்சிகளுக்கு எதிரான போரில் சிவன் சூர்யவம்சிகளை காப்பதற்காக முன்னிற்கும் துணிவும், தியாகமும் பர்வேதஸ்வரரை ஈர்க்கிறது.
சரி சூர்யவம்சிகள் இராமபிரான் அடியவர்கள் என்றால் சந்திரவம்சிகள் யார்? அவர்கள் ஏன் கெட்டவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். மேலும் மெலூஹா மக்கள் மீது நாகர்கள் கொலை வெறியில் இருப்பதற்கான காரணம் என்ன? என்ற பல கேள்விகளோடு இந்த நாவல் தொடரும் என முடிகிறது
இன்னும் இதைத் தொடர்ந்து இரு தொகுதிகள் உள்ளன. சின்ன கேப் விட்டு அவற்றையும் வாசிக்கணும்
ஒரு சாதாரண மனிதனுக்கு தெய்வநிலையை அடையும் பேறு எப்போது கிடைக்கும்? நல்லவர்களின் கரம் பற்றி நடக்கும் போதும், நல்லவைகளின் அறம் பற்றி நடக்கும் போதும் தான். சிவன் அப்படித்தான் நடக்கிறார். சிவன் தானொரு சாதாரணன் தனக்கு ஏன் இவ்வளவு பில்டப் கொடுக்கிறார்கள் என்று உடைத்துப் பேசும் இடங்கள் எல்லாம் நாவலின் அடிப்பொலி ஏரியா💥💥
“உலகில் சாஸ்வதமானது நான் அல்ல..தர்மம் மட்டுமே” என்று சொன்ன ராமனின் மொழியை சிவன் வழிமொழியும் காட்சி ஒன்று நாவலில் வருகிறது. அட்டகாசம்.
மேலும் இராமபிரான் இயற்றி வைத்துள்ள சட்டங்கள் என்றாலும், பெண்களுக்கு எதிராக, சாதியபாகுபாடுள்ள விசயங்களை சிவன் கேள்வி கேட்பதாக கதையை அமைத்திருப்பது சூப்பர். ஆன்மிகம், தத்துவம், காதல், திரில்லர், ஆக்சன் என என மதம் சார்ந்த நாவலுக்குள் ஒரு கமர்சியல் சினிமா இருக்கிறது.
Seriously saying. வாசிச்சுப் பாருங்க

