18வது அட்சக்கோடு – நூல் விமர்சனம்

அசோகமித்திரன் வாழ்வில் நடந்தவற்றில் அல்லது அவர் பார்த்தவற்றிலிருந்து இந்நாவல் முகிழ்த்துள்ளது. இதிலுள்ள ஒரு வராலறு மிக முக்கியமானது

நிச்சயமாக எல்லோர் வாழ்விற்குப் பின்னும் வரலாறு இருந்தே தீரும். அதை நாம் எப்படி அனுமானித்தோம் என்பதில் தான் விசயம் இருக்கிறது. 1991-ல் ராஜீவ்காந்தி இறந்தபோது எங்கள் ஊரில் தி.மு.க காரார்கள் வீடு கடைகளெல்லாம் அடித்து நொறுக்கப்பட்டது. அதில் எங்கள் டீக்கடை மொத்தமாக சூறையாடப்பட்டது. இந்த வரலாற்றில் என் வாழ்வு மட்டுமல்ல, அன்றே உயிர்போகவிருந்த என் தம்பி உள்ளிட்ட என் குடும்பத்தின் வாழ்வும் வரலாறுமுண்டு. எங்கள் கடையை, வீட்டை சூறையாடிய காங்கிரஸ் மற்றும் அதிமுக கட்சிக்காரர்களின் வரலாறும் உண்டு. இந்தச் சம்பவ வரலாற்றில் கலைஞருக்கும் இடமுண்டு. இறந்த ராஜீவ்காந்திக்கும் இடமுண்டு. அதாவது ஒரு தனி மனிதனின் வரலாறு என்பதில் சமூகச் சம்பவங்களும் இடம்பெறும் போது அது முக்கியமான பதிவாக உயிர்பெறுகிறது

ரைட்டர் அசோகமித்திரன் அவர்கள் இந்தியா சுதந்திரம் பெற்றபின்னும், ஹைதராபாத் & சிகந்திராபாத் மட்டும் நிஜாம் மன்னரின் ஆளுகையில் இருந்த காலகட்டத்தில் சந்திரசேகரன் என்ற இளைஞனின் வாழ்வில் நடந்தவற்றை நாவலாக்கியுள்ளார். சந்திரசேகரன் என்ற கேரக்டரின் பதின்மவயதுப் பருவத்தில் துவங்குகிறது நாவல். இந்திய அரசிற்கு கட்டுப்படாமல் நிஜாம் சமஸ்தானம் தனியாக இயங்குவதை வல்லபாய் பட்டேல் விரும்பவில்லை. நேரு உள்பட, இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் விரும்பவில்லை. ஏன் இந்தியாவின் கடைசி வைஸ்ராய் ஆன மெளன்பேட்டன் கூட நிஜாம் சமாஸ்தானத்தை எப்படி வழிக்கு கொண்டுவர வேண்டும் என்ற ஐடியாவை நேருவிற்கு வழங்கியதாக தகவல் உண்டு.

ஹைதராபாத் இந்திய அரசை தூற்றுவதும், இந்திய அரசாங்கம் நிஜாமை கைக்குள் கொண்டு வருவதற்காக செய்யும் விசயங்களும் சந்திரசேகரனின் வாழ்வோடு நாவலில் சொல்லப்பட்டு வருகிறது. காங்கிரஸ் வெறுப்பு கொண்ட மாநிலத்தில் இருந்துகொண்டு, காங்கிரஸின் அனுதாபியாக இருக்கிறான் இளைஞன் சந்திரசேகரன். அவன் வாழ்வில் வரும் உறவு, நட்பு, கிரிக்கெட் எல்லாவற்றையும் விட, காந்தி இறந்த அன்று அவன் அடையும் உணர்ச்சியை வாசிக்கையில் புல்லரித்தது. இந்த இடத்தில் அவன் மனது அடையும் மாற்றமும், சமூகம் உண்டாக்கி வைத்துள்ள வன்மமும் அவனுக்குள் வெளிப்படுவதை துல்லியமாக காட்டுகிறது. அசோகமித்திரன் எழுத்து.
சந்திரசேகரன் இந்துவாக இருந்தாலும் அவன் வாழ்வில் முஸ்லீம்களே நிறைந்துள்ளனர். முஸ்லீம் கிரிக்கெட் நண்பன் நாஸிம் அலிகான் தன்னை அழைப்பதைப் பெருமையாக கருதும் சந்திரசேகரனுக்கு காந்தியைக் கொன்றது முஸ்லீமாகத் தான் இருக்கும் என்று தோன்றுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அது அவன் அடிமனதில் கற்பிக்கப்பட்டுள்ளது. காந்தியின் இறப்புக்கு வருந்துவதை விட, முஸ்லீம் வெறுப்புக்கு அவன் ஆளாகிறான். நல்ல நேரம் அது சற்று நேர வன்மம் என்பதில் முடிந்து விடுகிறது.

நிஜாம் சமாஸ்தானத்தை இந்தியா தனது ராணுவ துணையோடு கையகப்படுத்தும் போது நடந்த வன்முறைகளை அசோகமித்திரன் எழுத்தில் வாசிக்கையில் மனம் பதைபதைக்கிறது. கலவரம் நடக்கும் போது சந்திரசேகரன் ஒரு முஸ்லீம் வீட்டிற்குள் சென்று மறைகிறான். அங்கு பதுங்கியுள்ள முஸ்லீம் குடும்பம் இவன் இந்து என்பதால் இவனைக் கண்டு பயப்படுகிறது. ஒருபடி மேல் சென்று ஒரு பெண் சந்திரசேகரன் அருகே “எங்களை விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சுகிறாள். சந்திரசேகரனிடம் தன் உடலைக் காட்டினாள் விட்டுவிடுவான் என்று அவள் நம்பி தன் உடைகளைக் களைகிறாள். சந்திரசேகரன் மனம் நொறுங்கிப் போய் ஓடுகிறான். நாவல் முடியும் இடமிது

வரலாற்று நாவல் என்ற தொனி துளியும் இல்லாமல் சந்திரசேகரனோடே பயணிக்க வைத்துள்ளார் அசோகமித்திரன்

காந்தி பிறந்தநாளில் இந்நூலை வாசித்து நிறைவு செய்தது தற்செயலானது தான்.
#18Vathuatchakodu

02.10.2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *