காதல் கவிதை எழுத மனம் வாய்க்க வேண்டுமானால்..
“முதலில் காதலை யாசித்திருக்க வேண்டும்.. பின் அதைப் பெற்றிருக்க வேண்டும்.. பெற்றதை வைத்து சுகித்திருக்க வேண்டும். பின் சுகித்ததை இழந்திருக்க வேண்டும்”
.. தம்பி நரேஷுக்கு இவையாவும் நடந்திருக்கும் என்றே கருதுகிறேன். இந்த நூலிலுள்ள கவிதைகளை தீரா கொதிப்போடும் காதலியின் மேல் மாறா மதிப்போடும் எழுதியுள்ளார்.
இந்த நூல் முழு ஆக்கத்தை எட்டவில்லை என்றாலும் நரேஷின் ஆர்வம் மிகுந்த கற்பனை நல்ல கவிதைகள் எழுதுவார் என்பதற்கான நம்பிக்கையைத் தருகிறது
“அவள் குற்றமற்றவள்
கவிஞனானது அவனுடைய தவறு” என்ற வரிகளை மிகவும் ரசித்தேன். நரேஷ் “இதிலுள்ள கவிதைகளை உங்களுக்குள் இருக்கும் அந்த ஒருத்தியோடு பொருத்திக்கொள்ளுங்கள்” என்றிருகிறார். நான் இந்த வரிகளை எனக்குள் பொருத்திக் கொள்கிறேன்
ஒரு மலையேற்றப் பயணத்தில் ஒரு மணிநேரம் விடாமல் நான் கவிதை சொல்ல, அன்றோடு அவள் என் நம்பரை பிளாக் செய்யும் நிலை வந்தது. இதில் அவள் மீது எந்தப் புகாருமில்லை. கவிஞனானேன் என்ற நம்பிக்கையில் கவிதை சொன்னது என் தவறுதானே?!
“காலமெல்லாம் வாழ வேண்டுமென்றில்லை..சில பொழுதேனும் காதலர்களாய் வாழ்ந்தால் போதும்” என்கிறார் நரேஷ். மனுசனோட ஏக்கம் மகத்தான சல்லித்தனம் கொண்டது😄😄
தம்பி நரேஷ்…
இன்னும் கொஞ்சம் வாசிப்பை அதிகப்படுத்தி, சொற்களை செழுமைப்படுத்தி, கற்பனையை விசாலப்படுத்து. நிச்சயமாக சிறந்த கவிஞனாவாய். உனது அவள் பெருமையுறுவாள்!

