“கஞ்சிக்கு சண்ட போட்டா அது வயிறு நூந்ததும் சரியாப்பேரும். கெளரவத்துக்குச் சண்ட போட்டா அது உயிருவ போனாலும் அடங்காது” பாமாம்மா எழுதிருக்க இந்த புனைவுல கெளரவத்துக்கு வந்த சண்டைவ என்னென்ன செய்யும்னு துல்லியமா இருக்கு.
கண்டம்பட்டின்னு ஒரு ஊரு. அங்க நாயக்கரு சமூகம் உள்பட தாழ்த்தப்படாத சாதிவ குறைவாவும், பள்ளர் பறையர் உள்பட தாழ்த்தப்பட்ட சாதிவ நிறைவாவும் இருக்குது.
படிப்பு அரசியல் அறிவுன்னு லேசா உசந்து வருது பறக்குடி. இதைக்கண்டு பொச்சரிப்புல வெம்முதுவ கொறக்குடிவ. அந்தால பறயர்களுக்கு எதுரா பள்ளர்கள கொம்பு சீவி விடுதுங்க ஆதிக்கச் சாதிங்க.
ஒன்னுமண்ணா பழகுன பள்ளர்களும் பறையர்களும் வெட்டும் குத்துமா திரியிறாங்க.
மொதவெட்ட பள்ளர்க துவங்க சீரழிவு ஆரம்பிக்குது. அந்தச் சீரழிவுல சின்னாபின்னாமாகிப் போனாக எல்லாப் பொம்பளைங்களும்.
அம்பேத்கர் சிலை வைக்கணும்னு சாமிநாதன்,அந்தோணி, ஜெபராசுன்னு நிறைய பறையர் பசங்க முயற்ச எடுக்காங்க. அதுக்கான்டி பள்ளர்கள்ட கூட காசு வாங்குதாங்க. கழனி கலைக்குழுன்னு ஒன்ன ஆரம்பிச்சு அதையும் சமூகநலன் சார்ந்து இயங்க வைக்கிறாங்க. பள்ளர்க மத்தில இது பெரும் பொறாமையா வளக்கப்படுது. உடனே அவங்க இம்மானுவேல் சிலை வைக்க முடிவெடுக்காக. பொறாமை பெரும் பகையா மாறி வெட்டுங்குத்துமா, குத்குயிரும் கொல உயிருமா வன்மக்கதை வளருது
ஏசு உயிர்த்தெழுத ஈஸ்டர கொண்டாட பறக்குடி ஜனம் படுத பாடும், பள்ளர் தெருவ கடக்குமுன்ன நடக்க அல்லலும் நமக்குள்ள பெரும் பீதியக் கிளப்புது
நிறைய உயிர் போன பிறகு தான், ‘கெளரவம்ன்றது மயிறுக்கு சமானம்..வயிறு தான் உயிருக்கு ஆதாரம்’னு உணருது ஜனங்க. அந்த உணர்தலைக் கண்டு நாயக்கர் மனங்க வெம்முது. முடிவுல அறிவு ஜெயிச்சதா கதையை முடிச்சிருக்காங்க பாமாம்மா. அப்ப தான் நிம்மதியா இருந்துச்சு
ஒரு சாதிக்குள்ளயோ பிற சாதிக்குள்ளயோ இழுத்து விட்டு கூத்துப்பாக்க எப்பமும் ஒரு கூட்டம் இருக்கும். அதை உதற கத்துக்கிட்டாத் தான் உலகத்துல நிம்மதியா உலவ முடியும்
155 Page கொண்ட சிறு நூல் தான்.. But பெரிய விசயத்தைச் சொல்லித் தருது

