உன் இன்மையை நினைத்து ஏங்குகிறேன்’ -அம்பேத்கர் எழுதிய காதல் கடிதம்- நூல் விமர்சனம்!

அம்பேத்கர் எழுதிய காதல் கடிதம் என்றதும் உற்சாகமாக வாசிக்கத் துவங்கினேன்.

வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் பேசியவை பெரும் பேசுபொருளாக மாறிக்கொண்டிருந்த வேளையில் லண்டனில் இருந்துகொண்டு, உடல் நலம் சரியில்லாமல் பம்பாயில் இருக்கும் தன் மனைவிக்கு கடிதம் எழுதுகிறார் அம்பேத்கர். பெரும் புரட்சி நோக்கிப் பயணித்த அவருக்கு மனைவியின் அருகில் இருக்க முடியாமல் போவது குற்றவுணர்ச்சியாக இருக்கிறது. அதையும் வெளிப்படுத்துகிறார்

கடிதத்தில் எங்கும் பூக்களின் சாயம் இல்லை. ஆனால் அன்பின் ஈரம் இருக்கிறது. “நீ மட்டும் என் வார்த்தைகளை கேட்காத பெண்ணாக இருந்திருந்தால் நான் என்னவாகியிருப்பேன்?” என்று தனக்குள்ளே கேட்டு பதில் எழுதுகிறார்.. அந்த வரிகளை மனைவியின் உதவிக்கரம் பிடித்து லட்சிய நடை போடும் அனைவரும் சொல்வர்..

“என்னுடைய உறுதி குலைந்து போயிருக்கும். என் கனவுகள் அனைத்தும் கற்பனைக்கு எட்டாத வகையில் நொறுங்கிப் போயிருக்கும். இந்த வாழ்வில் எவற்றை எல்லாம் நான் எதிர்நோக்கி இருந்தேனோ அவை அனைத்தையும் தொலைத்திருப்பேன்” என இணைவியின் துணையில்லையேல் எனக்கு எந்தப் பாசிட்டிவ் வினையும் இல்லை என்கிறார் அம்பேத்கர்.

தன் மகன் யஷ்வந்த் மீதுள்ள அக்கறையின் பெரும்பகுதி மகனை வாசிக்க வைக்க வேண்டும் என்பதில் தான் இருக்கிறது. மனைவி ரமாவிடம் மகன் பற்றி எழுதும் போது, “இரவு நேரங்களில் அவனை எழுப்பிப் படிக்கச் செய். என் தந்தை அப்படித்தான் இரவு நேரங்களில் படிக்க வைப்பார். என்னை எழுப்பிவிட வேண்டும் என்பதற்காக அவர் தூங்காமல் இருப்பார்” என்று எழுதுகிறார். வாசிப்பின் மகத்துவம் தான் சமத்துவத்தை உண்டு பண்ணும் என்பதையும், கீழ்மை எனும் எண்ணத்தை அடியோடு ஒழிக்கும் என்பதையும் எவ்வளவு உணர்ந்திருந்தால் இப்படி எழுதியிருப்பார். கல்வி என்பதை உறுதிபட கொண்டால் தான் கடவுள் செய்யும் தவறுகளை கூட கண்டடைய முடியும்.

அறிவு மீது தீராத வேட்கை கொண்ட அம்பேத்கருக்கு மனைவியிடம் சொல்வதற்கு ஒரு வார்த்தை இருக்கிறது. அந்த வார்த்தை தான் இந்தக் கடிதத்தின் உச்ச வார்த்தை

“என்னை எப்படிப் பார்த்துக்கொள்வாயோ அதேபோல் உன்னையும் கவனித்துக்கொள்” ❤️

இந்தக் கடிதத்தை இருநாட்களுக்கு முன் வாசித்திருந்தாலும் காதலர் தினத்தன்று தான் பகிர்ந்துகொள்ள வேண்டும் என ஆசை. மேலும் இந்தச் சிறு நூல் நண்பர் Prakash D பிரகாஷ் சகோதரி அக்‌ஷயாவின் திருமணத்தில் பெற்றுக்கொண்ட நூல். அவர்கள் திருமணம் காதல் திருமணம் என்பது இனிப்புச் செய்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *