இந்த வருடத்தின் என் வாசிப்பின் முதல் புத்தகமே செழியன் சாரின் உலகசினிமா முதல் பாகம் தான். முதல் பாகம் வாசித்து முடித்ததும் , “இந்த வருடம் முடியும் போது இரண்டாம் பாகம் வாசிக்கணும். அதுவரைக்கும் முதல்பாகத்தில் செழியன் சார் பரிந்துரைத்துள்ள படங்களைப் பார்த்திடணும்னு முடிவு செஞ்சேன்” எல்லாப் படங்களையும் பார்க்க முடியல. ஓரளவு பார்த்தேன். இனி இந்த இரண்டாம் பாகத்தில் குறிப்பிட்டுள்ள படங்களை அடுத்த வருடம் பார்க்கணும்
இந்த நூலும் வழக்கம் போல எழுத்து வழியா நம்மை உலகச் சினிமாக்களுக்கு அழைச்சுட்டுப் போகுது. இந்த நூலில் குறிப்பிட்டுள்ள படங்களைப் பார்த்தவங்களுக்கு ஒரு அனுபவத்தையும், பார்க்காதவங்களுக்கு ஒரு தேடல் மிகுந்த அனுபவத்தையும் இந்தப் புத்தகம் கொடுக்கும்
The mood for love படம் நான் லயித்து லயித்து பார்த்தபடம். அந்தப் படம் குறித்த செழியன் சார் எழுத்தும், விவரிப்பும் தரமான அனுபவமா இருந்தது
கிம் கி டுக் இயக்கிய, Spring,Summer, fall, winter and spring படம் பற்றிய அறிமுகமும் விவரிப்பும் மீண்டும் படம் பார்த்து சிலிர்த்த அனுபவத்தை கொடுத்தது. இந்தப் படத்தை 12 வருடத்துக்கு முன்னாடி பார்க்கும் போது பெரும் பாலியல் வேட்கையோட பார்த்தேன். நான்காண்டுகளுக்கு முன் பார்க்கும் போதுதான் அதிலுள்ள தத்துவ தரிசனம் சின்னதாகப் புலப்பட்டது. வாழ்க்கை எனும் சக்கரத்தை நிறுத்தவோ, அந்தச் சக்கரத்தில் சிக்குண்டுப் போகவிருப்பவரை தடுக்கவோ முடியாது என்பதை, தற்போது இப்படம் பற்றிய செழியன் சாரின் எழுத்தில் உணர முடிகிறது.
“வெறும் ஒரு சினிமா படம் அது என்ன செய்யும்?” என்று கேட்பவர்களுக்கு, இதுபோன்ற படங்கள் மூலமாக அது நிறையச் செய்யும் எனச் சொல்ல முடியும்.
காதலை, கருணையை, வரலாற்றை, துளி அன்பிற்கு ஏங்கி நிற்கும் தனிமையை, குடும்ப உறவுகளின் நெருக்கடி மற்றும் ஆறுதலை, வாழ்வின் கொண்டாட்டத்தை, சிரமங்களை என முழுக்க முழுக்க வாழ்வின் அம்சங்களை அங்கங்களாக கொண்ட படங்களை ஆகத்தரமாக பட்டிலிட்டுள்ளார் செழியன். சினிமா விரும்பிகள் குறிப்பாக உதவி இயக்குநர்கள் பொக்கிஷமாக கொள்ள வேண்டிய புத்தகம் இது

