உப பாண்டவம்- ஒரு புத்தகம் ஒரு பார்வை

“பாரதம் படிச்சா பகை கிடையாது” என்ற எங்க ஊர் முருகர் தாத்தாவின் ஒற்றைச் சொல்லில் இருந்து தான் எனக்கு மகாபாரதம் அறிமுகமானது. முருகர் தாத்தா மகாபாரதம், கம்பராமாயணம், கந்தபுராணம் ஆகியவற்றை தெருவில் நடந்தபடியும், வீட்டு முற்றத்தில் குளித்தபடியும், ஈஸ்வரியம்மன் கோவில் கல் மண்டபத்தில் படுத்தபடியும் பாடி வருவார். எதற்காக இது நினைவுவிற்கு வந்தது என்றால் எஸ்.ரா அவர்கள் அர்ச்சுனா என்ற ஒற்றைச் சொல்லிலிருந்து தான் தனக்கு மகாபாரதம் அறிமுகமானதாகச் சொல்லியிருந்தார்

எஸ்.ரா அவர்கள் இந்நூலை எழுதியது 2000-ல். சரியாக இருபந்தைண்டு ஆண்டுகள் கழித்து இந்நூலை வாசிக்கிறேன். மகாபாரதம் என்பது பெருங்கடல். அதில் நீந்தும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுக்கும் தனித்தனி நூல் எழுதலாம். இந்த நூலையும் மகாபாரத்திலுள்ள சில கேரக்டர்களை வைத்து தனது புனைவின் துணைகொண்டு எழுதியுள்ளார் எஸ்.ரா. சந்தேகமேயில்லை மிகச்சிறந்த படைப்பு. நூலில் நான்லீனியராக கதை சொல்லப்பட்டுள்ளது. அடியேனும் எனக்கு நூலில் பிடித்தவற்றை துண்டு துண்டாக எழுதியுள்ளேன்

திருதராஷ்டிரன் சகோதரனான பாண்டுவிற்கு குந்தியும் மைத்ரியும் மனைவிகள். பாண்டு நாடு வேட்டையே முக்கியமென கருதுபவன். மனைவிகளின் தேக வேட்டைக்குள் செல்லாதவன். மைத்ரி பேரழகி. குந்திக்கு அவள் மீது பொறாமை. ஆனாலும் மைத்ரியின் மழலை ஆசையை புரிந்துகொள்கிறாள். குந்திக்கு பாண்டுவின் செயலன்றி மூன்று குழைந்தகள் பிறக்கின்றன. மைத் ரிக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. இத்தனை குழந்தைகள் பிறந்தபின் பாண்டு மைத்ரியோடு இணைகிறான். குந்தி பொறாமை கொள்கிறாள். மைத்ரி தன் இரு குழந்தைகளை குந்தியிடம் கொடுத்துவிட்டு கணவன் பாண்டுவோடு எரிகிறாள். குந்திதேவி மைத்ரி இருவரின் அக விலாசங்களை அற்புதமான எழுத்தாக்கியுள்ளார் எஸ்.ரா

(குந்திதேவி துர்வாச முனிவரிடம் பெற்ற பெருவரங்களில் ஒன்று. அவள் விரும்பிய இறை குணம் கொண்டவரை அவள் மனதில் நினைத்தால் யாரை நினைக்கிறாளோ அதே அம்சத்தில் அவளுக்கு குழந்தை பிறக்கும்.)

நூலில் ஒரு தேசாந்திரியின் பயணத்தின் நடுவே ஒவ்வொரு கேரக்டர்களும் அறிமுகமாகிறார்கள். பாஞ்சாலியின் வாழ்வும் பயணமும் அவளின் விருப்பமற்றதாக இருக்கிறது என்பதை காண முடிகிறது

துச்சலை!
100 சகோதர்களின் தங்கையாகப் பிறந்தவள். எதார்த்தம் புரிந்த பெண். அஸ்தினா புரத்தின் மனதை அறியமுடியாமல் அவள் தன் பேரனை மட்டுமாவது விடு என அர்ச்சுனனிடம் சொல்லிவிட்டுச் செல்கிறாள். சகோதரர்கள் இல்லாத நாட்டில் எந்தப் பெண் வாழ முடியும்? என்ற அவளது கேள்வி ஆழமும் அர்த்தமும். கொண்டது

துரியோதனனின் மனைவி பானுமதி கேரக்டர் வார்ப்பு அடர்த்தி மிக்கது.

திருதராஷ்டிரனுக்கு தன் தம்பி பாண்டு மீதுள்ள காண்டும், காந்தாரிக்கும் அவளின் சகோதரனான சகுனிக்கும் உள்ள பாசமும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. சகுனி நகுலனால் கொல்லப்படும் போது சகுனியின் வேதனையை எழுத்தில் உணரமுடியவில்லை. ஆனால் சகுனியின் மகன் உலோகன் கொல்லப்படும் போது சகுனியின் வேதனை புரிகிறது. துரியோதனின் மகன் அபிமன்யுவால் கொல்லப்படும் போது துரியோதனன் மனைவிக்கும் அவனுக்குமான உரையாடல் எமோஷ்னல் அம்சம் நிறைந்தது

கிருஷ்ணனின் மகன் சாம்பனின் வாழ்வு சாம்பல் தன்மை கொண்டது. தன் அழகுக்கு எந்தப் பெண்களும் நிகரில்லை என்ற கர்வம் கொண்ட சாம்பனுக்கு தகப்பனான கிருஷ்ணனே தொழுநோய்க்காரனாக மாறும் சாபத்தை கொடுக்கிறான். சாம்பன் நோயாளியாகிறான். சாம்பனுக்கு கிடைத்தது கர்வவாழ்விற்கான விடையா? இல்லை பொறாமை தந்த கொடையா? எனத்தெரியவில்லை

பின் நடப்பதை முன் அறிபவன் நிச்சயமாக மென்மனம் கொண்ட ஞானியாகவே இருக்க முடியும். கெளரவர்களான 100 சகோதரர்களில் ஒருவன் விகர்ணன். அவன் தாமரையில் ஒட்டாத தண்ணீர் போல போர்விலகியே வாழ்கிறான். பாஞ்சாலியின் துகில் உரியப்படும் போது அவனுக்கு மட்டும் அதன் பின் நிகழப்போகும் யாவும் தெரிகிறது. “ஒரு செயல் துவங்கும் போது அதன் முடிவு எழுதப்பட்ட பிறகே துவங்குகிறது” என்ற ஆன்மிக தெளிவு கொண்ட விகர்ணன் அற்புதமானவன்

யுதிஷ்ட்ரன், அர்ச்சுனன், பீமன், சகாதேவன், நகுலன் என இவர்கள் ஐவர்கூடவும் உடல் பங்கிட்டு பெற்ற பாஞ்சாலியின் ஐந்து பிள்ளைகள் மட்டுமே உப பாண்டவர்கள் என அடையாளப்படுத்தியுள்ளார் எஸ்.ரா. யுத்தம் முடிந்து துரியோதனன் இறந்தபின்பும் இந்த ஐந்து உப பாண்டவர்களும் சேப்டியாக வாழ்கிறார்கள். சாகாவரம் பெற்ற அஸ்வத்தாமன் இரவில் இந்த ஐந்துப் பிள்ளைகளையும் கொன்று விடுகிறான். துரோணாச்சிரியார் பாண்டவர்களின் குரு என்பதால் அவரின் மகனான அஸ்வாத்தமனை கொல்ல முடியாது. ஆனால் கிருஷ்ணன் அவனின் மணிமுடியை எடுத்து விடுங்கள். உலகில் வாழ்வதின் துன்பத்தை அவன் அடையட்டும் என்கிறார். மகாபாரதத்தை முடிக்க விடாமல் செய்வதில் அஸ்வத்தாமனே பெரும் பங்கு வகிக்கிறான்

அர்ச்சுனன் திருமணம் புரிந்த கிருஷ்ணனின் மகளான சுபத்ரைக்கு பிறக்கும் அபிமன்யு கொல்லப்படுகிறான். சகுனி மகன் உலோகன் அபிமன்யுவால் கொல்லப்படுகிறான். துரியோதனன் மகன் கொல்லப்படுகிறான். அஸ்வத்தமா என்ற யானையின் இறப்பை தன் மகனின் இழப்பாக புரிந்துகொண்டு துரோணர் உயிர்விடுகிறார். பாரதப்போரில் ஒரு வார்த்தையால் உயிர் நீத்த வீரராக பதிவாகியுள்ளார் துரோணாச்சிரியார். இடும்பி என்ற பெண் மூலம் பீமனுக்கு பிறந்த கடோத்கஜன் கர்ணனால் கொல்லப்படுகிறான். நிறைய புத்திர இழப்புகள் பாரதப்போரில் நிகழ்கிறது புத்திர இழப்பின் வலியின் மூலம் யுத்தவெறுப்பை உணர்த்துகின்றனரோ என்னவோ? இல்லை
கத்தியின் துவக்கம் அதில் தான் முடியும் என்ற குறியீடா எனத் தெரியவில்லை

தர்மன் சகுனியிடம் பகடை விளையாட்டில் தோற்றகதை எல்லோருக்கும் தெரியும். அதற்கு முன் பகடை விளையாட்டிற்கு தர்மனை அழைக்கலாம் என்ற யோசனை சகுனிக்கு எப்படி வந்தது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது

யாசகன் ஒருவன் தர்மனிடம் சூதாட வருகிறான். சூதாட்டம் என்பதை தராதரம் இன்றி யாரும் யாரோடும் விளையாடலாம். அது அழிவின் முற்றம் அங்கு யாரும் அமரலாம். தர்மன் யாசகனோடு விளையாடி 21 வெண் பசுக்களை தோற்கிறான். வெற்றியோடு யாசகன் துரியோதனனிடம் செல்கிறான். துரியோதனன் பதினேழு வெண்பசுக்களை யாசகனிடம் சூதாடி இழக்கிறான். தோல்வியின் அவமானத்தைத் தாங்க முடியாமல் துரியோதனன் தவிக்கிறான். இதையறியும் சகுனி யாசகனை அழைத்து, “நீ பதினேழு பசுக்களை வென்றுள்ளாய். ஆனால் பதினெட்டு பசுக்களை ஓட்டிச் செல்கிறாய்” என்கிறான். யாசகன் இல்லை என்னிடம் பதினேழு பசுக்களே உள்ளன என்கிறான். “இதில் ஒரு பசுவின் வயிற்றில் சிசு உள்ளது. அதையும் கணக்கில் கொள்ளவேண்டும். ஒன்று நீ அந்தப் பசு வயிற்றிலிருந்து வெளிவரும் வரை இங்கேயிருக்க வேண்டும். அல்லது இந்தப்பசுவையும் வென்று செல்ல வேண்டும்” என்கிறான் சகுனி. யாசகனுக்கு சகுனியின் சூழ்ச்சி புரிகிறது. அவன் விளையாடச் சம்பதிக்கிறான். சகுனி சுலபமாக யாசகனை வெல்கிறான். யாசகன் வென்ற பசுக்கள் மொத்தத்தையும் இழந்து தன்னையும் இழக்கிறான். சகுனி இத்தனைப் பசுக்களை யாரிடம் வென்றாய் என கேட்க, யாசகன் தர்மன் என்கிறான். பாண்டவர்களை வீழ்த்த காரணம் கிடைத்தது என சகுனி சிரித்து மகிழ்கிறான். சகுனிக்கு கிடைத்த அற்புதமான துருப்புச் சீட்டாக யாசகனின் வருகை இருந்ததால் யாசகனுக்கு 100 பசுக்களை கொடுத்தனுப்புகிறான்.

எஸ்.ராவின் பாரதத்தில் ஈர்த்த இன்னொரு அம்சம்

யுத்தம் முடிந்தது. கெளரவர்கள் வீழ்ந்துவிட்டனர். திருதராஷ்டிரன் மற்றும் அவனின் மனைவி காந்தாரி இருவரும் துக்கம் மேலிட இருக்கிறார்கள். அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வருகிறான் பாண்டவர்களின் கேப்டனான தர்மன். உடன் கிருஷ்ணரும் வருகிறார். இவர்கள் வருமுன்பே ஆசிவாங்க வரும் தர்மனை கொல்ல வேண்டும் என தன் கணவன் திருதராஷ்டிரனிடம் கட்டளை போட்டிருப்பாள் காந்தாரி. அனைத்தையும் அறிந்த கிருஷ்ணன் முதலில் தர்மன் போன்ற ஒரு பொய்த்தோத்றத்தை ஆசி வாங்க அனுப்புகிறார். அந்தப் பொய்த்தோற்றத்தை திருதராஷ்டிரன் கொல்கிறார். ஆனால் கையில் ரத்தக்கறை இல்லை என்பதை உணர்ந்து இது கிருஷ்ணனின் விளையாட்டு என உணர்கிறார். ஆனால் மீண்டும் தர்மன் திருதராஷ்டிரன் ஆசியை வாங்குகிறார். பழிவாங்கத் துடிக்கும் மனித மனம் ஒரு கணம் அவ்வாய்ப்பைத் தவறவிட்டால் பின் தன்னிலை மீளும் என்பதை இவ்விடத்தில் உணர்ந்து நெகிழ்ந்தேன்

சொன்னபடியே மகாபாரதம் பெருங்கடல். அது நமக்கான படைப்பாற்றலை தரவல்லது. எஸ்.ரா தனது முதல் நாவலாக இதைத் தேர்ந்தெடுத்தது ஆகச்சிறப்பு

மகாபாரத கேரக்டர்களின் உளவியலை எஸ்.ரா எழுத்தில் வாசித்து முடித்ததும் எழுத்தாளர் பிரபஞ்சன் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது

“தர்மம் தான் வெல்லும் என்றாலும் அதுவும் சூழ்ச்சி செய்து தான் வெல்லும்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *