ஹோமர் எழுதிய கிரேக்க காவியமான ஒடிஸி எனும் புனைவுக்கதையை திரைக்காவியமாக்கி தந்துள்ளார் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்
ட்ரோஜான் போரை முடித்து விட்டு தன் படைகளோடு நாடு திரும்புகிறார் நாயகன் மேட் டாமன். அவர் வருவார் என எதிர்பார்த்து அவரது மனைவி ஆன் ஹாத்வே அரண்மனையில் அரசியாக காத்திருக்கிறார். அரசன் இனி வரமாட்டான் என நிறையபேர் அரண்மனையை தன்னகப்படுத்த துடிக்கிறார்கள். கூடவே அரசியை திருமணம் செய்துகொள்ளவும் வற்புறுத்துகிறார்கள். இந்தச்சூழலில் வரும்வழியெல்லாம் கடுமையான ஆபத்துகளைச் சந்திக்கிறார் மேட் டாமன். முடிவில் அவர் நாட்டிற்கு திரும்பினாரா என்பதே படத்தின் ஸ்லோவான திரைக்கதை
ஹீரோ மேட் டாமன் காத்திரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் முகத்தில் தோன்றும் பதற்றம், வீரம், பாசம், நம்பிக்கை என அத்தனை உணர்வுகளும் ஆகச்சிறப்பு. மேட் டாமனின் மகனாக நடித்துள்ள டாம் ஹாலண்ட் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். நாயகி ஆன் ஹாத்வே நம்பிக்கை நிறைந்த கேரக்டரில் நன்றாக நடித்துள்ளார். ராபர்ட் பேட்டர்சன், லூபிடா நியாங்கோ, சம்ந்தா மார்டன் உள்ளிட்ட பிறநடிகர்கள் எல்லோரும் ஆகச்சிறப்பாக நடித்துள்ளனர்
ஹாய்டே வான் ஹாய்டெமா தனது கேமராவை சுற்றிச் சுழலவிட்டு நம் கண்களுக்கு பெரு விருந்தைத் தந்துள்ளார். படம் கடத்தும் உணர்வுகளுக்கு ஏற்ற இசையை கச்சிதமாக வழங்கியுள்ளார் இசைஞர் லுட்விக் கோர்டான்சன்
படத்தின் உருவாக்கத்திற்காக நோலனின் திட்டமிடல் குறித்து இணையத்தில் பெரிதும் பேசப்பட்டது. அவரின் அத்தகைய திட்டமிடல் தான் இப்படியான நல்ல விஷுவல் குவாலிட்டியை நமக்கு காண கிடைத்துள்ளது. கடல் சீற்றம், ஒற்றைக்கண் அரசனின் கொடூர தாக்குதல் ஆகிய காட்சிகள் மிரட்டல் ரகம். படத்தின் மிதமான வேகம் ரசிகர்களுக்கு சற்று அயர்ச்சியைத் தரலாம். முதல் பாதியைப் பொறுமையாக கடக்கும் ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில் பலன் கிட்டும்
3/5
-வெண்பா தமிழ்

