“வாழ்வில் எல்லா வடிவங்களையும் மரியாதையுடன் அணுகுங்கள். முக்கியமே இல்லாத அற்பத்திலும் கூட மிக முக்கியத்திற்கான திறவுகோல் மறைந்திருக்கும்” இந்த நூலில் மிர்தாத் அருளியிருக்கும் மிக முக்கியமான தரிசனம் இது. வாழ்வில் எல்லாவற்றையும் கவனத்தோடு அணுகும் போது, நமக்குள் ஆற்றல் மிகுந்த விழிப்புணர்வு வசப்படும். விழிப்புணர்வில் நிச்சயமாக கடவுள் வசிப்பார்.
சரி யாரிந்த மிர்தாத்?
விவிலியத்தில் வரும் நோவாவின் கட்டளைப்படி மலைச் சிகரம் ஒன்றில் மடாலயமும் பலிபீடமும் அமைக்கப்படுகிறது. ‘அந்த மடாலயத்தில் ஒன்பது துறவிகள் மட்டுமே இயங்க வேண்டும். ஒன்பது பேர்களில் ஒருவர் இறந்து விட்டால், அடுத்த ஒரு நபரை இறைவனே தேர்வு செய்து அனுப்புவார்’ என்பது நோவா தன் மகனுக்கு இட்ட கட்டளை. நோவாவின் மகன் மடாலயத்தை துவங்குகிறான். அவன் காலத்திற்குப் பின் ஒன்பது துறவிகள் மடாலயத்தை நிர்வகிக்கிறார்கள். சமாதம் என்பவரே தலைமைத் துறவி. அவர் மடாலயத்தை செல்வச் செழிப்பு கொண்டதாக வளர்த்தெடுக்கிறார். மடாலாயம் வளமை பூண்டு நிற்கிறது. மடாலயத்திற்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விட்டுச் சம்பாதிக்கிறார் சமாதம். இச்சூழலில் ஒன்பது துறவிகளில் ஒருவர் இறந்துவிடுகிறார். இப்போது இறைவன் ஒருவரை அனுப்ப வேண்டும். யாரும் உடனே வரவில்லை.
சிறிது காலம் சென்றதும் ஒரு இளைஞன் மடாலயத்திற்கு வருகிறான். அழுக்கடைந்த கோலத்தோடு மடாலயத்தில் தன்னை ஒரு துறவியாகச் சேர்த்துக் கொள்ளச் சொல்கிறான். அவனது உருவமும், தோற்றமும் சமாதத்தால் அவனை நிராகரிக்கச் செய்கிறது. சமாதம் அவனைச் சேர்த்துக்கொள்ள மறுக்கிறார். இளைஞன் விடாமல் போராடுகிறான். பின் ஒருவழியாக அவனை வேலைக்காரனாகச் சேர்த்துக்கொள்கிறார் சமாதம். ஏனைய துறவிகளும் அவனை வேலைக்காரனாகவே பாவிக்கிறார்கள். சமாதம் கூடுதலாக அவனை கீழ்மை நிறைந்தவனாக கருதி வருகிறார். ஏழு ஆண்டுகள் கடக்கும் நிலையில் இளைஞன் தனது சொற்களை வெளிப்படுத்துகிறான். அவனது சொற்களில் இருக்கும் ஆன்ம அதிர்வு மடாலயத்தின் ஏனைய துறவிகளை புருவம் உயர்த்த வைக்கிறது. சமாதம் மட்டும் அவனுடையச் சொற்களில் பொய்மையும், கற்பனையும், எதார்த்தமின்மையும் உள்ளது என வாதிடுகிறார். ஆனால் அந்த இளைஞன் பேசும் வார்த்தைகளில் கடவுள் இருக்கிறார் என்பதை மற்றவர்கள் உணர, மடாலயம் அந்த இளைஞன் கைக்கு வருகிறது. அந்த இளைஞன் எல்லோரின் இதயத்திற்குள்ளும் வருகிறான். அந்த இளைஞன் தான் மிர்தாத். அவன் தனது சொற்களை நூலாக்கி சமாதம் கைகளில் ஒப்பிவித்து,”150 ஆண்டுகள் கடந்து இங்கு ஒருவன் வருவான் அவனிடம் இந்த நூலைக் கொடு” என்று சொல்கிறார். அதேபோல் நடக்கிறது.
மிர்தாத் சொன்னபடியே மடாலயம் இருக்கும் மலையில் ஒரு இளைஞன் ஏறி வருகிறான். சமாதம் அவனிடம் இந்த நூலை வழங்குகிறார். அவனிடம் சமாதம் சொல்லும் சம்பவங்கள் தான் மேலே குறிப்பிட்டுள்ளவை.
நாவல் வடிவத்தில் அமைந்த ஒரு “ஆன்மிக தத்துவ நூல்” இது. மனிதனுக்குள் இருக்கும் திரைகளை அகற்றினால் மனிதனுக்குள் இருக்கும் கடவுள் வெளிப்படுவார் என்கிறார் மிர்தாத். எனக்கு அய்யா வைகுண்டர் சொன்ன, “கண்ணாலே மனக்கண்ணாலே காணுமப்பா வழியது தான்” என்ற வாக்கியமும், “தன்னை அறிந்ததுண்டால் தலைவனை நீ அறிவாய்” என்ற வாக்கியமும் நினைவில் வந்தது.
நமக்குள் நாம் எவ்வளவு கடந்து செல்கிறமோ, அவ்வளவு கடவுளை நெருங்கிச் செல்ல முடியும். மேலும் மிர்தாத் தத்துவங்கள் பொரிந்து வைக்கப்பட்ட பந்து அல்ல. அவிழ்த்து விடப்பட்ட நிர்வா*ண்ம்.
நான் அதிகம் வியக்கும் ஓஷோ அதிகம் வியந்த நூல் இது.
ஒரு மரத்தின் இலையை நேசிக்கும் போது, இலையைத் தாங்கியுள்ள கிளையை மறக்கிறோம். கிளையைக் கொண்டுள்ள மரம், மரத்தை தாங்கும் வேர், வேரைக் காப்பாற்றும் மண், மண்ணுக்கு இரையளிக்கும் நீர் என யாவும் அந்த ஒரு இலைக்குள் உண்டு. ஆக நாம் நேசிப்பது ஒன்றாக இல்லாமல் மொத்தமாக இருக்க வேண்டும் என்கிறார் மிர்தாத். மேலும் அன்பு மேல் அவர் கொண்டுள்ள நம்பிக்கை அபாரமானது. எவற்றையும் சாத்தியப்படுத்தும் ஆற்றல் அன்பிற்கு மட்டுமே உண்டு. இதை நம்பி வாழ்விற்குள் கொண்டு வருவதற்கு மிகப்பெரிய ஆன்மிக முதிர்ச்சி தேவை. அதற்கான பாதையை இந்த நூல் காட்டும் என நம்புகிறேன். ஓஷோ இந்த நூலை பல்லாயிரம் முறை படிக்க வேண்டும் என்றிருக்கிறார். எனக்கு இன்னும் இலகுவாக விளங்கிக்கொள்ள மிர்தாத் புத்தகத்தை இன்னும் பலமுறை படிக்க வேண்டும் என்று ஆசை.
மிகச்சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார் புவியரசு. இந்த நூலை வாசிக்க பரிந்துரைத்தவர், இயக்குநரும் நடிகருமான அண்ணன் சுப்பிரயமணிய ஷிவா . Subramaniam Shiva அவருக்கு அன்பும் நன்றியும்

