ஒரு புத்தகம்- ஒரு பார்வை! தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்

தஞ்சை ப்ரகாஷ் கதைகள் பற்றி நிறைய வாசித்துள்ளேன். அவர் கதைகளை இதுவரை வாசித்ததில்லை. வெளிக்காட்டாத, வெளிக்காட்ட முடியாத காமம் ஏற்படுத்துகிற குழப்பங்களையும், அலைக்கழிப்புகளையும் கண்ணெதிரில் தஞ்சையாரின் எழுத்து காட்டுகிறது

மகள் போன்று பாவிக்க வேண்டிய பெண் மீது சலனம் ஏற்படுகிறது ஒரு ரிட்டயர்ட் அதிகாரிக்கு. வறுமை தின்னும் குடும்பத்தைச் சேர்ந்த அந்த பதினெட்டு வயது பெண்ணை, அவளது அம்மா, ‘விசயம்’ தெரிந்தே அந்த அதிகாரியின் வீட்டுக்கு அனுப்புகிறாள். எப்போதும் உரிமையாய் தோளேறும் அந்தப் பெண், அதிகாரியின் சீண்டலுக்கு அப்புறம் வெளிப்படுத்தும் உடல்மொழியில் அத்தனை வித்தியாசம். மற்றொரு பையனோடு முன்னமே அவளை தனிமையில் அவர் பாத்திருப்பதும், இவரிடம் அவள் தஞ்சம் அடைந்தபின் அவள் கர்ப்புறுவதுமாய் பயணிக்கும் கதையின் முடிவில் நிஜத்தின் வலியை உணர முடியும்.

‘கடைசிக் கட்டி மாம்பழம்’ என்ற ஒரு கதை. என்னவொரு எமோஷ்னல் ஸ்கிரீன்ப்ளே..

பத்து பெண்களை பெற்றெடுக்கிறாள் மதுராம்பா. அவள் வீட்டிற்கு அவளில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் வயது குறைந்த கலியராஜன் விருந்தாளி போல வருகிறான். கணவனை இழந்த மதுராம்பாவிற்கு எல்லா உதவிகளையும் செய்கிறான். ஒரு கட்டத்தில் அவன் கண்ணசைவுக்கு குடும்பமே கட்டுப்படுகிறது. அவன் மீது மதுராம்பாவிற்கு ஏற்படும் ஆசையை, தன் வளர்ந்த மகள்களின் பால் அடக்குகிறாள். தன் மூத்த மகளை கலியராஜன் திருமணம் செய்துகொள்வான் என நம்புகிறாள். மகளை தூண்டவும் செய்கிறாள். கலியராஜனை திருமணம் செய்தகொள்ள மூத்த மகள் மட்டுமின்றி, அத்தனை மகள்களும் ஏங்குகிறார்கள். அவனது அதிகாரத்தில் கூட, அத்தனை நேர்த்தியும் ஒழுங்கும் அக்கறையும் இருக்கும். திடீரென்று ஒருநாள் அவன் அத்தனை பெண்களுக்கும் மாப்பிள்ளை பார்த்துவிட்டு திருமணத்தை உறுதி செய்வான். இனி இவன் யாரை திருமணம் செய்வான்? என்ற கேள்வி நமக்கு எழும்.

அன்று இரவு மதுராம்பாவிடம் இவன் குடித்துவிட்டு வந்து பேசுவான். மனதின் பெரும் ஓலத்தோடு அந்தக் கதை முடியும். நேற்று இரவு சிறப்பு காட்சியில் மெய்யழகன் படம் பார்த்துவிட்டு தினேஷ்ராமிடம் இந்தக் கதையைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தேன்.

சாம்பலாகும் உயிர்களின் சிறு வலிகளைப் புரிந்து, சாம்பல் நாள் வரையிலும் அன்பை பகிர்ந்து வாழ்தலே அறம். என்பதாக எங்கள் பேச்சு நீண்டது.

தஞ்சை ப்ரகாஷின் கதைகள் பெண்களின் உடல் எப்படி சுயநலங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தப் படுகிறது என்பதையே பேசுகிறது. தோல்வியுற்ற மனிதர்களின் அன்பும், காமமும், தியாகமும், துரோகமும் வாழ்வின் பாடங்கள். அந்தப் பாடங்களை படம் போட்டுக் காட்டுகிறது இச் சிறுகதைகள்

நல்ல வாசிப்பனுபவம்

டிஸ்கவரி புக்பேலஸ் வெளியீடு! Good one

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *