இந்திரா செளந்தர்ராஜன் நூல்களில் (நாம் வாசித்த வரையில்) இது பெஸ்ட் என்பேன்! கதையெங்கும் ஆன்மிக மேஜிக் மிகையாகச் சொல்லப்பட்டாலும், கதையினூடே தெளிக்கப்பட்டுள்ள தத்துவங்கள் வாவ் ரகம்
மரகதலிங்கபுரம் என்ற கிராமம். அங்குள்ள சிவன் கோவிலில் பூஜை செய்யும் பட்டரின் மகள் பாரதியை மணம் முடிக்க அவரின் சொந்தக்காரனான ராஜ் நாராயணன் என்ற இளைஞன் வருகிறான். வெளிநாட்டு ரிட்டர்ன் ஆன அவனுக்கு ஆன்மிக நம்பிக்கை துளியும் கிடையாது. பரம நாத்திகனான அவன் வந்தபிறகு அந்த ஊரிலும் கோவிலிலும் பல அற்புதங்களும், சர்ச்சைகளும் நடக்கிறது. இவையெல்லாத்திற்கும் இறைவன் தான் காரணம் என்கிறார் அங்குள்ள தீட்சிதர். அனைத்துமே எதார்த்தம் என்கிறான் ராஜ் நாராயணன். அவனால் கோவிலின் சுரங்கமும், அங்குள்ள விலை மதிப்பற்ற சிலையும் கண்டுபிடிக்கப் படுகிறது. அந்தச் சிலையை கொள்ளையடிக்க சிலர் பெருந்திட்டம் தீட்டுகிறார்கள். பாரதிக்கும் அவனுக்குமான கல்யாணம் என்னானது? நாத்திக வாதமும், ஆத்திக வாதமும் எப்படியான முடிவை எட்டுகிறது என ரொம்ப இன்ட்ரெஸ்டிங்காக போகிறது நாவல்
மனித வாழ்வின் இயக்கம் பற்றி இந்திரா செளந்தர்ராஜன் சொல்லியிருப்பது சிறப்பாக இருந்தது!
சிதம்பரம் குறித்து சொல்லப்பட்டிருக்கும் செய்தி சிலிர்க்க வைத்தது. சிவாலயங்களில் பிரதானமாக லிங்கத்தோற்றத்தில் இருக்கும் சிவன், சிதம்பரத்தில் மட்டும் நடராஜராக (ஆடும்) இயங்கும் தோற்றத்தில் இருக்கிறார். அதற்கான காரணம். ஆட்டம் என்பது இயக்கம். இயங்கினால் தான் இருப்பது அனைத்தையும் உணர முடியும். ஆக இருப்பதும் இயக்கமும் சிவமாய் இருப்பதை உணர்த்துகிறார் நடராஜர். நூலில் இந்த ஏரியாவை வாசிக்கையில்
“நீ பிறவாத பிறப்பில்லை. உன்னைப் பிறப்பித்தார் எவருமில்லை” என்ற பாரிபாடல் வரிகளும் மனதிற்குள் வந்து போனது
கடைசிவரை நாத்திகத்திற்கு எதிரான நூலாக இதை இந்திரா செளந்தர்ராஜன் வழிமொழியவில்லை என்பது ஆச்சர்யம்! அவரவரது தர்க்கம்..அவரவரது மார்க்கம். இதில் குறைசொல்ல ஒன்றுமில்லை என முடித்தது சிறப்பு

