பணக்காரத் தந்தை ஏழைத்தந்தை- நூல் விமர்சனம்!

பொருளாதரம், சேமிப்பு, முதலீடு குறித்து மிக முக்கியபாடம் எடுக்கும் புத்தகம் இது!

ஒன்பது வயதில் இரு சிறுவர்களுக்கு பெரும் பணக்காரர்கள் ஆகவேண்டும் என்ற ஆசை வருகிறது. அதிலொரு சிறுவனின் தந்தை ஏழை. மற்றொரு சிறுவனின் தந்தை ஆல்ரெடி பணக்காரர். இருவருக்கும் பணக்கார தந்தை பாடமெடுக்கிறார். ஏழைத்தந்தை தன் வாழ்வை பாடமென நம்பிக் கொண்டு உழைக்கிறார்.

கடின உழைப்பு மட்டும் பணத்தை ஈட்டுமா? நிச்சயமாக ஈட்டும்! ஆனால் அதுக்கு ஒரு வரையறை உண்டு. உழைப்பால் வந்த பணத்தை நமக்காக உழைக்க வைத்தால் மட்டுமே பெரும் பணக்காரர் என்ற நிலைக்கு உயர முடியும் என்பதை எல்லா லாஜிக்கோடும் வாழ்வியல் தரவுகளோடும் அடுக்கிச்செல்கிறார் ராபர்ட் கியோஸாகி! இப்படியான தனிமனித முன்னேற்ற காரணிகளைச் சொல்லும் நூல்களை தொடர்ந்து மொழிபெயர்த்து வரும் நாகலெட்சுமி சண்முகம் தான் இந்நூலையும் மொழி பெயர்த்துள்ளார். நல்ல மொழிபெயர்ப்பு!

சரி பணத்தை எப்படி நமக்காக உழைக்க வைப்பது?

ரொம்ப சிம்பிள்! செலவு போக சேமிப்பதை விட சேமிப்பது போக செலவழிப்பது நல்ல உத்தி! ஆனால் அந்தச் சேமிப்பு எதிலிருக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்ளச்சொல்கிறார் ராபர்ட்
கியோஸாகி

எங்க தாத்தா 8 வயது முதலே பெரும் உழைப்பாளி. காணி நிலம் கையில் இல்லாத தாத்தா தனது 30 ஆவது வயதில் ஒரு வீடும் ஒரு தோட்டமும் வாங்கினார். அதற்கு அயராத உழைப்பு மட்டும் காரணமல்ல. உழைத்துச் சேரும் பணத்தில் கொஞ்சம் கடனை வாங்கி எதேனும் துண்டு நிலம் வாங்குவார். பின் கடனை அடைத்துச் சேர்க்குமுன் நிலத்தின் மதிப்பு உயரும். அதன்பின் அடுத்தக்கடனுக்கு அடி போடுவார். 64 வயதில் அவர் ம*ரணிக்கும் போது, ஒரு வீடு, ரெண்டு மனை, ஒரு தோட்டம், ஒரு ப்ளவர்மில், ஒரு வயல் ஆகியவற்றை உருவாக்கி இருந்தார். வரும் பணத்தை வட்டியில்லாத உண்டியலில் போடாமல் வட்டி தரும் அம்சங்களில் முதலீடு செய்ததால் அவரால் சாதிக்க முடிந்ததை நாங்கள் கண்ணெதிரிலே பார்த்தோம்!

எங்க அம்மா 40 வண்டல் பீடி சுத்துவார். வாராவாரம் கணேசன் பீடிக்கடையில் கரெக்டாக கணக்குப் போட்டு சம்பளம் வாங்குவார். பாஸ்புக் போட்டு பீடி சுற்றும் கால வரம்பு முடிந்தபின் சேமிப்பு பணம் வந்தது. உழைத்தே பழக்கப்பட்ட ஜீவன் என்பதால் எங்க அம்மா பாஸ்புக் இல்லாமல் மறுபடியும் பீடி சுத்தத்துவங்கினார். சுற்றும் பீடி வண்டல்களை பிற பெண்களுக்கு கடனாக கொடுத்தார். அதாவது பீடி பண்டலுக்கு குறைவான தண்டல்! அம்மாவின் அந்தப் புத்திசாலித்தனம் தான் என் அக்காவின் திருமணக்கடனை அடைக்கவும், என் கடைசித்தம்பியின் படிப்புச் செலவைக் சரிக்கட்டவும் உதவியது. அம்மாவின் அந்த அடிப்படை பொருளாதார புத்திசாலித்தனம் தான் இன்று என் தம்பி பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலையில் அமர காரணம்! இப்போது என் தம்பி பிறந்தநாளை கொண்டாடுவதற்கு தனியாக வெளிநாடு சென்றான். எங்க அம்மா அதற்கு ஒரு கமெண்ட் அடித்தார். “இந்த ரூவாயை முதலீடா வச்சி இந்த ரூவாயில இருந்து வர்ற வருமானத்தில டூர் போவணும். அதான் சம்பாத்தியம்” என்றார். ஆக நம்ம வீட்டுலயும் பொருளாதர வல்லுனர்கள் இருக்கிறார்கள். சமீபத்திய தாய்கிழவி படமும் அதை உணர்த்தியது!

பகட்டுக்காக நாம் முதலீடு செய்யும் வீடு உள்ளிட்ட அம்சங்களை வலுவான ஆதாரங்களோடு விமர்சிக்கிறார் ராபர்ட் கியோஸாகி!

பணம் என்பது வாழ்வின் மிகப்பெரிய நம்பிக்கை. அது வரும்போது கவனமாக கையாள வேண்டும் (நமக்குலாம் இன்னும் வரல..But வரும்) ஒருகோடி பம்பர் பரிசு ஜெயித்தவர்கள் சில ஆண்டுகளில் மீண்டும் வறுமைக்கு வந்த கதையும் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. ‘உலகத்தில் பணம் தரும் நம்பிக்கையை யாராலும் தரமுடியாது” என்ற வசனத்தை ஸ்ட்ராங்காக நினைவூட்டும் புத்தகம் இது

நல்ல புத்தகம்👍

புத்தகம் பரிசளித்த அன்னலெட்சுமிக்கு நன்றி! 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *