ரிவால்வர் ரீட்டா- விமர்சனம்

மிடில் கிளாஸ் பெண்கள் சந்திக்கும் மிரட்டல் அனுபவமே ரிவால்வர் ரீட்டா

அம்மா ராதிகா, மகள் கீர்த்தி சுரேஷ் இன்னும் இரு பெண்கள் என வாழும் இந்த எளிமையான குடும்பத்திற்குள் வேண்டாத பகையாளியாக சூப்பர் சூப்பராயன் நுழைந்து விடுகிறார். விலைமாது வீட்டிற்கு செல்வதில் வழிமாறி வந்த அவர், இவர்கள் வீட்டில் சேட்டை செய்ய அங்கு ஒரு அசம்பாவிதம் நடந்து விடுகிறது. அதன்பின் ரீட்டா சந்திக்கும் சிக்கல்கள் ஏராள தாராளம். அவற்றில் இருந்து தன் குடும்பத்தை ரீட்டா எப்படி மீட்டார் என்பதே கதை

கீர்த்தி சுரேஷ் எந்தப் பால் போட்டாலும் பவுண்டரிக்கு அனுப்பி ரசிக்க வைக்கிறார். ராதிகாவோ சிக்ஸர் விளாசுகிறார். அவர் அடிக்கும் காமெடி பந்து பெவிலியனைத் தாண்டுகிறது. சூப்பர் சூப்பராயன், ஜான்விஜய், ரெடின் கிங்ஸ்ட்லி, சுனில் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் கவனம் ஈர்க்கின்றனர்

தினேஷ் கிருஷ்ணன் B ஒளிப்பதிவில் தனிப்பதிவை சாத்தியப்படுத்த முயன்றுள்ளார். நிறைய காட்சிகளை அதன் சாட்சியாக சொல்ல முடியும். இசை அமைப்பாளர் ஓரளவு நல்ல அதிர்வை கொடுக்க முனைந்துள்ளார். இன்னும் இசையால் ரீட்டாவின் தோட்டா வலிமை பெற்றிருக்கலாம்

சின்னச் சின்ன ஐடியாக்கள் காட்சிகளாக ரசிக்க வைத்தாலும், பெரிய பெரிய ஐடியாக்களை வெறும் வசனங்களாகவே இயக்குநர் JK சந்துரு கடந்து போக வைப்பது பெரும் சோர்வைத் தருகிறது. மேலும் நிறைய கேரக்டர்களிடம் மிகையான நடிப்பை வாங்கியுள்ளார் இயக்குநர். அது படத்தின் நல்ல தருணங்களை சிதைக்கிறது. இருந்தாலும் ராதிகாவின் அட்டகாச கவுண்டர்களுக்காக ரிவால்வர் ரீட்டாவை ஒருமுறை ரசிக்கலாம்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *