ஒரு தாலியை வைத்து ஜாலி செய்ய முயன்றுள்ளது ரஜினி கேங்
அமைச்சரின் காரை திருடிவிடுகிறார் முனிஷ்காந்த். அந்தக் காரில் லிப்ட் கேட்டு ஓடி வருகிறார்கள் காதல் ஜோடியான ரஜினி கிஷனும், திவிகாவும். காதல் ஜோடியை ஊர் விரட்ட, காரை அமைச்சர் ஆட்கள் தேட, அதே காரில் தாலி உள்பட இதர நகைகள் பலவற்றையும் திருடி வந்த கல்கியை ஒரு கும்பல் தேட, கலகலக்கிறது திரைக்கதை. மேலும் கல்கி திருடி வந்த தாலியை ரஜினி கிஷன் தன் திவிகாவுக்கு கட்டியதால் தாலி ஏற்ற திவிகாவிற்கு பேய் பிடிக்கிறது. அதன் பிறகு கதை சூடு பிடிக்கிறதா என்பதும், படம் நமக்கு பிடிக்கிறதா என்பதுமாக ஓடுகிறது படம்
ரஜினி கிஷன் கலகலப்பாக நடித்துள்ளார். காமெடி அவருக்கு ஓரளவு வொர்க்கவுட் ஆகியுள்ளது. நாயகி க்ளாமர், ஆக்சன், காமெடி என பல ரூபத்தில் நடித்துள்ளார். முனிஷ்காந்த் பேராறுதலாக படத்தில் ஆங்காங்கே கிச்சுக் கிச்சு மூட்டுகிறார். போலவே கல்கி, மொட்டை ராஜேந்திரன் காமெடி செய்ய முயற்சித்துள்ளனர்
படத்தின் பாடல்களில் சின்னதாக எனர்ஜி இருப்பது உண்மை. அதே நேரம் ஜோஸ் ரோபர்டின் பின்னணி இசையில் பழைய படங்களின் வாடை. ஒளிப்பதிவாளர் சதிஷ்குமார் பேய்படம்& காமெடி படம் என்ற Feel உணர்ந்து லைட்டிங் செட் செய்துள்ளார்
காமெடி படம் என முடிவெடுத்துவிட்டதால், இயக்குநர் ரமேஷ் பாரதி திரைக்கதையை இஷ்டத்திற்கு எழுதியுள்ளார். தாலியை வைத்து ஜாலியாக ஒரு கன்டென்ட் பிடித்த இயக்குநர் காட்சிகளில் இன்னும் புதுமை காட்டியிருக்கலாம். டபுள் ஒகே இல்லை என்றாலும் ஓரளவு ஒகே என்ற கேட்டகிரியில் கரை சேர்கிறது இந்த ரஜினிகேங்
2.75/5
-வெண்பா தமிழ்

