அடிக்க அடிக்க எழும் ஆக்சன் மேளா இந்த பீனிக்ஸ் வீழான்
படத்தின் கதைக்குள் செல்வதற்குள் ஒரு குறிப்பு:
எந்தப் பின்புலமும் இல்லாமல் முழுக்க முழுக்க தன் திறமை மற்றும் உழைப்பால் திரையுலகில் ஜெயித்தவர் விஜய்சேதுபதி. இன்றளவு எளிய பின்புலத்தோடு சினிமாவில் போராடும் இளைஞர்களுக்கு விஜே தான் இன்ஸ்பிரேசன். அவரின் ஆரம்ப நாட்களில் அவர் நடந்த எல்லாப் பாதைகளிலும் முற்களும் சொற்களும் அவரைத் தீண்டியிருக்கும். ஒரு நடிகனாக அது சகஜம் என அவர் கடந்து சென்றிருப்பார். ஆனால் ஒரு அப்பாவாக தான் சென்ற முள்பாதை தன் பிள்ளைக்கு வந்துவிடாக்கூடாது என்றே அவர் நினைத்திருப்பார். உலகில் உள்ள எல்லாத் தகப்பனும் நினைக்கக் கூடியது அது. அதனால் கடினம் தெரியாமல் தன் மகனை அவர் வளர்த்திருக்கலாம். அப்படி ஏற்ற இரக்கங்களைப் பார்க்காமல் வளர்ந்த அவரது பதின்ம வயதுப் பிள்ளை “இது இன்னதென தெரியாமலே” சில ஆட்டியூட்களைச் செய்திருக்கலாம். இவற்றை நாம் சுட்டிக்காட்டலாம். ஆனால் வளருமுன்பே வெட்டி வீசலாமா?
விஜய்சேதுபதியின் மகன் சூர்யா இந்தப் படத்தில் அவர் வயதுக்கு அதிகப்படியான உழைப்பையே கொடுத்துள்ளார். அது படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். ராஜா வீட்டு கன்று குட்டிக்கு இயல்பாகவே சில தலைமைத்தனம் இருக்கும். அதை தலக்கணமாக பார்க்க வேண்டியதில்லை. வரும் காலங்களில் நிச்சயமாக அந்தக் கன்று கற்றுக்கொள்ளும். முடிந்த வரை உரிமையோடும் அக்கறையோடும் நாம் கற்றுக்கொடுப்போம். நாளைக்கு நம் பிள்ளைகளுக்கும் அது உதவும்.
ரைட் விமர்சனத்திற்குள் செல்வோம்
சூர்யா சேதுபதி ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வை நடுரோட்டில் வைத்து வெட்டிக்கொல்கிறார். 17 வயது நிரம்பிய அவரை நீதிமன்றம் சிறார் ஜெயிலில் அடைக்கிறது. அங்கு வைத்து சூர்யாவை கொல்வதற்கு பல முயற்சிகள் நடக்கின்றன. அத்தனையையும் தான் கத்து வைத்துள்ள ஆக்சன் வித்தைகளால் தவிடுபொடியாக்குகிறார். சூர்யா யார், அவர் ஏன் எம்.எல்.ஏ-வை கொன்றார்? என்பதற்கான விடைகள் தான் பீனிக்ஸ்
அறிமுகம் சூர்யா சேதுபதி என்ற டைட்டில் கார்ட்-க்குப் பிறகு சூர்யாவின் நடிப்பில் அறிமுக நடிகனுக்கான தொனியே இல்லை. இயல்பாகவே நடித்துள்ளார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார். அவரைத் தொடர்ந்து ஆக்சன் மேளாவில் கலந்து கொண்ட கருணா உள்பட அத்தனை இளைஞர்களும் மாஸ் மாஸ். சம்பத், தேவதர்ஷினி, வரலலெட்சுமி என எல்லாக் காஸ்டிங்கும் பக்கா ஸ்கெட்ச்
படத்தின் அறிமுக ஹீரோ சூர்யா என்றால் தெறிமுக ஹீரோ சாம்.சி எஸ் தான். மனிதர் ஒவ்வொரு காட்சிக்கும் கொடுத்திருக்கும் உழைப்பு தரம். ஒளிப்பதிவாளர் பிரித்து மேய்ந்துள்ளார். அனல் அரசு ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால் பைட்களுக்கான ப்ரேமிங்ஸ் எல்லாமே வேறலெவல்
படத்தின் மெயின் கேரக்டர் வெற்றிபெற வேண்டும், அல்லது அது காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் ஆடியன்ஸுக்குள் வர வேண்டும். அதற்கு கேரக்டருக்கான ரைட்டிங்கும், திரைக்கதையின் பேஸ்மட்டமும் ஸ்ட்ராங்காக இருத்தல் அவசியம். அந்த இடங்களில் இயக்குநர் அனல் அரசு இன்னும் இறங்கி அடித்திருக்கலாம். படத்தை 2 மணி நேரத்தில் கச்சிதமாக முடித்தது ஒரு பாசிட்டிவ் அம்சம். ரத்தமும் யுத்தமுமாக இருப்பதால் இது நிச்சயமாக குழந்தைகளுக்கான படமல்ல. ஆக்சன் விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் படம் டபுள் ட்ரீட் கொடுக்கும்
3/5
-வெண்பா தமிழ்

