நடுத்தர குடும்பங்களின் கனவுகளை முன் வைத்து எளிமையாகச் சொல்லப்பட்டுள்ள கதை
சரத்குமாரின் வாழ்க்கைக் கனவாக இருக்கிறது சென்னையில் சொந்த வீடு வாங்கவேண்டும் என்பது. அதற்காக எதையும் சகித்துக் கொள்ளும் பொறுமையுடைய அவருக்கு, அடுத்தடுத்து இன்னல்கள் வந்து சேர்கின்றன. பெரும்பாலான சங்கடங்கள் மகனான சித்தார்த் மூலமாகவே வருகிறது. மிடில் க்ளாஸ் குடும்பங்கள் கடக்கும் எல்லாச் சங்டங்களையும் தாண்டி சரத்குமாரின் வீடு கனவு நிறைவேறியதா என்பதே படத்தின் கதை
கதாநாயகன் சித்தார்த் என்றால் கதையின் நாயகனாக நிமிர்ந்து நிற்கிறார் சரத்குமார். எதையும் சகித்துக் கொண்டு வாழும் தலைமுறையின் சாட்சியாக வாழ்ந்துள்ளார் சரத்குமார். சித்தார்த் பின்பாதி படத்தை முழுவதுமாக தாங்கியுள்ளார். குடும்பத்திற்காக தனக்குப் பிடிக்காததைச் செய்த போதும், தனக்குப் பிடித்ததைச் செய்து அதன் எல்லைக்குள் குடும்பத்தை வைத்துக் கொள்ளும் போதும் சித்தார்த் நிறைவான நடிப்பால் நிறைகிறார். தேவையானிக்கு படத்தில் பெரிய வெளி இல்லாவிட்டாலும் கிடைத்த இடங்களில் கவனம் ஈர்க்கிறார். மீதா ரகுநாத் சிறப்பாக நடித்துள்ளார். அவர் கேரக்டருக்கான ரைட்டிங்கிலும் அவ்வளவு மெச்சூரிட்டி. சைத்ரா கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார். யோகிபாபு வருகை பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை
அமிர்த் ராம்நாத் படத்திற்கு தேவையான இசையை கொடுத்துள்ளார். பாடல்கள் பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜிதின் பெரும்பாலும் வீட்டிற்குள்ளே சுற்றும் கதை என்பதால் கடும் சவால்களைச் சந்தித்து நல்ல ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளனர். எடிட்டர் கணேஷ் சிவா இயக்குநரோடு போராடி படத்தில் வரும் நிறைய காபிபேஸ்ட் காட்சிகளை கத்திரித்திருக்கலாம்
எளிய குடும்பங்கள், மென் உணர்வு கொண்ட மனிதர்கள் முன் நிற்கும் கடினமான வாழ்வை கண்முன் நிறுத்தியுள்ளார் இயக்குநர் ஸ்ரீகணேஷ். ஒரு ஸ்கிரீன்ப்ளே ரைட்டராகவும், வசனகர்த்தாவாகவும் பல இடங்களில் கைத்தட்டல் வாங்குகிறார் ஸ்ரீ கணேஷ். சிற்சில இடங்களில் படம் மெயின் கதையிலிருந்து அந்தியப்படுவது போல் தெரிந்தது. ஆனால் உடனே அதை நேர்செய்து விடுகிறார் இயக்குநர். சென்னையில் வாழும் பெரும்பான்மை மக்களுக்கு சொந்த வீடு என்பது பெருங்கனவு தான். ஆனாலும் வீடு ஒன்றே வெற்றி மற்றும் மகிழ்ச்சி என்று நிறுவும் முடிவு தான் பெரும் நெருடல். வீடற்ற எத்தனையோ மனிதர்களுக்கு சின்னதாக குற்றவுண்ர்ச்சியை இந்தப் படம் ஏற்படுத்துமோ என்ற அச்சவுணர்வும் ஏற்படுகிறது. “உன்னால் முடியும்” என்ற உத்வேகம் தருவதற்கும், “இதைச் சாத்தியப்படுத்தினால் தான் மகிழ்ச்சி” என்ற பிரசரைத் தருவதற்கும் வேறுபாடு உள்ளது. மேலும் படமெங்கும் தியாகம், தடைகள் ஆகியவை திரும்பத் திரும்ப வருவதும் அயர்ச்சி. படத்தின் மெயின் கதாப்பாத்திரம் தன் இலக்கை நோக்கி முன்னேறும் போதெல்லாம் தடைகள் வரும் என்பது இன்ட்ரெஸ்டிங் பேக்டர் தான். ஆனாலும் அத்தகையத் தடைகள் இப்படித்தான் வரும் என்பதை ரசிகர்கள் மனதில் முன்னமே அமர்ந்து கொண்டால் படம் பார்க்கும் போது பெரிய சுவாரஸ்யம் ஏற்படாதல்லவா? கெடு வாய்ப்பாக இப்படத்தில் அது நிகழ்ந்துள்ளது.
இப்படியான குறைகள் இருந்தாலும்,
கைப்பிடித்து அழைத்துச் செல்லும் கார்த்தியின் வாய்ஸ் ஓவர், மிதமான அதேநேரம் இதமாக நெஞ்சை வரும் நடிகர்களின் நடிப்பு, சற்று நேரம் ஒரு குடும்ப்த்தோடு நாமும் பயணித்த உணர்வு ஆகியவற்றால் இந்த 3BHK இளைப்பாறுதல் தருகிறது
3/5
-வெண்பா தமிழ்

