பட்டறை- நூல் விமர்சனம்

லேத்துப் பட்டறை தொழிலார்களின் வாழ்விலுள்ள எல்லாப் பக்கங்களையும் காட்டியுள்ள மிக முக்கியமான புத்தகம் இது.

சென்னை திருநீர்மலை அருகேயுள்ள லேத்துப்பட்டறையில் அலுமினியத்தில் வேகும் வாழ்வு தங்கத்தின் வாழ்வு. அவனின் வாழ்க்கைப் பயணம் போலவே பட்டறையில் இன்னும் சிலரின் வாழ்வும் இருக்கிறது

ஆயுதபூஜையை எதிர்பார்த்து பரிசுக்காக காத்திருக்கிறார்கள் அங்கு வேலை செய்யும் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள். உழைப்பை உரிஞ்சி எடுக்க அஞ்சாத முதலாளி & கோ பரிசை எடுத்துக்கொடுக்க லாஜிக் பேசி தடுக்கிறது. தொடர்ந்து மூன்று வருடம் அங்குள்ள தொழிலாளர்கள் ஆயுதபூஜை போனஸுக்காகவும் பரிசுக்காகவும் ஏங்கி நிற்கிறார்கள். இதற்கிடையில் அங்கு இந்தத் தொழிலாளர்கள் அங்குலம் அங்குலமாக உருக்கப்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தங்கம் 15 வயதில் வேலைக்குச் சேர்ந்து 35 வயதில் ஒடிந்து போகிறான். அப்போது அவனுக்கு வரும் இயலாமையும், கோபமும் சொல்லில் அடங்காதவை

இந்த நூலில் ரத்தம் உரிஞ்சும் அட்டையாக வரும் மேனஜர் நாகராஜ் கேரக்டர் அங்காடித் தெரு படத்தின் வெங்கடேஷ் கேரக்டர் போன்றது. அவருக்கும் பீகார் தொழிலாளியான பிருஷி என்பவனுக்குமான காதலும் காமமும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. ‘பொதுப்புத்தி’ தன்மையோடு நாவலிலுள்ள கேரக்டர்கள் அனைத்தும் அந்த ஆண்&ஆண் காதலை மூர்க்கமாக அணுகுவதை சற்று மாற்றி அமைத்திருக்கலாம்

இரும்பு சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு ஆயுதபூஜை என்பது பெரும் வரத்திற்கு ஒப்பானது. காஞ்சிபுரத்தில் கயிலான் கடையில் ஏவாரம் செய்யும் போது, எங்கள் முதலாளி சிவாண்ணன், எங்கள் எல்லோரின் சைக்கிளையும் அலங்கரித்து எங்கள் மனசு நிறையும் படி கை நிறையத் தருவார். அப்படியான முதலாளியை ஈசியாக காண முடியாது. இந்தக்கதையின் முதலாளி கொடூரராக்கும்

பத்தாம் கிளாஸ் பாஸ் செய்து ஜுனியர் இன்ஜினீயர் ஆகிவிடலாம் என்ற ஆசையை தங்கம் தனக்குள்ளே வைத்துப் புழுங்கித் திரியும் காட்சிகள் பெருவலியைத் தந்தன. கதையில் வரும் ஒரு பெண் கம்பெனியை விட்டுச் செல்கையில் தங்கத்திடம் ஒரு வார்த்தைச் சொல்லும். அந்த வார்த்தை இன்னமும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது

“எப்படியாவது படிச்சிடுண்ணா…அது ஒன்னு தான் நம்ம கண்ணுக்கே தெரியாம நம்மள கட்டிப்போட்டுக்குற எல்லாத்துல இருந்தும் பிச்செறியும்” 🤍 சத்திய வார்த்தை அல்லவா! எழுத்தாளர் பரத்ராஜ் ரவிதாஸுக்கு வாழ்த்துகள். பொஸ்தகம் வாங்கித் தந்த அண்ணன் கபிலனாருக்கு லவ்வாங்கிஸு🥰 Kabilan Krs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *