மம்மட்டியான் ஸ்டார்ஸ்- விமர்சனம்

1990- கால கட்டத்தில் டிவியில் கிரிக்கெட் பார்ப்பது என்பது கடவுள் தரிசனம் போன்ற அபூர்வமானது. கிராமங்களிலிருந்து பக்கத்திலுள்ள நகரங்களுக்குச் சென்று கிரிக்கெட் பார்த்த காலமெல்லாம் உண்டு. அப்படி கிரிக்கெட் பார்க்கும் போது சில மூட நம்பிக்கைகள் உண்டு. அதாவது கிரிக்கெட் பார்க்கச் செல்லும் போது நாம் ஏதேனும் ஒரு சட்டை அணிந்திருப்போம். அன்று இந்தியா வென்றுவிட்டால் அதே சட்டையைத் தான் அடுத்த மேட்ச் பார்க்கச் செல்லும் போதும் அணிவோம். இந்த மம்மட்டியான் வெப்தொடரில், “இந்த ஜென்ஸி காலத்திலும் அது தொடர்கிறது” என்பதைப் பதிவு செய்துள்ளனர்

சரி கதைக்கு வருவோம். தென் மாவட்டத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வர் (ஒருபெண் உள்பட) சென்னைக்கு வந்து ஐபிஎல் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காக ஊரில் ஒரு திருட்டு வேலையைச் செய்து பணத்தை உஷார் செய்கிறார்கள். பணத்தை கையகப்படுத்திவிட்டு சென்னை வரும் இந்த நால்வரின் ஆசை நிறைவேறியதா? என்பதே நால்வரி கதை

ஜென்ஸி கிட்ஸின் உடல்மொழியை அப்படியே பிரதிபலித்து நடித்துள்ளனர் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட் பாலமுரளி, ஜகா ஆகிய நால்வரும். கதைக்கு நல்ல ஊட்டச்சத்து கொடுக்கும் அளவில் அசத்தியிருக்கிறார் விவேக் பிரசன்னா. மொட்டை ராஜேந்திரன் சில காட்சிகள் மட்டும் வந்து ஸ்கோர் செய்கிறார்

பட்ஜெட்டில் இருக்கும் சிக்கனத்தை உணர்ந்து வேலை செய்துள்ளார் ஒளிப்பதிவாளர். பின்னணி இசையில் மெனக்கெடல் எதுவுமே தெரியவில்லை. Why bro?

எல்லா இளைஞர்களுக்கும் கனெக்ட் ஆகும்படி எளிமையான கதையை கையிலெடுத்துள்ளார் இயக்குநர் சபீர் சுதாகர். ஐபிஎல் கிரிக்கெட்டின் டிக்கெட் மோசடி, ஐபிஎல்-ஐ வைத்து நடக்கும் பெட்டிங் மோசடி ஆகியவற்றை அழகாக சீரிஸில் பதிவு செய்துள்ளார். கூடுதல் எமோஷ்னலும், அந்த நால்வரின் மீது நமக்கு ஒரு பிணைப்பு ஏற்படாததும் ஒரு மைனஸ். அதைச் செப்பனிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்

ஜென்ஸி கிட்ஸ் ஒருமுறை பார்க்கலாம்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *