நரபலி தவறு என்ற பாடத்தை கமர்சியல் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் பிரபு சாலமன்
மலைவாழ் குடியிலுள்ள சிறுவன் தன் தாய் அன்பை பெறாதவன். அவனுக்கு அன்பும் நட்பும் கொடுக்க ஒரு யானை கிடைக்கிறது. அந்த யானையை தன் உடன்பிறப்பாகவே எண்ணுகிறான். சிறுவன் இளைஞனாகிறான். அவர் தான் ஹீரோ மதி. யானையும் மதியும் சந்தோசமாக திரியும் போது மதியின் தாய் அந்த யானையை மதிக்குத் தெரியாமல் விற்று விடுகிறார். மனம் உடைந்த மதியை 5 வருடங்களாக யானையைத் தேடுகிறார். ஒருவழியாக யானையைக் கண்டடையும் போது யானை பெரிய ஆபத்தில் சிக்கியிருப்பது தெரிகிறது. யானையை மதி காப்பாற்றினாரா என்பது படத்தின் மீதிக்கதை
பூமி என்ற கேரக்டரில் கதையின் நாயகனான மதி ஓரளவு நல்ல நடிப்பையே கொடுத்துள்ளார். எமோஷ்னல் காட்சிகளில் மட்டும் இன்னும் அவர் அழுத்தமாக பயணிக்க வேண்டியுள்ளது. ஷ்ரிதா ராவ் கேரக்டர் ஒகேவாக கடந்து செல்கிறது. ஆண்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பேரடி, ஸ்ரீநாத் ஆகியோர் கொடுத்த வேலைக்கு குறை வைக்காமல் நடித்துள்ளனர். அர்ஜுன் தாஸ் கொடூரமுகம் காட்டும் வில்லனாக அசத்தியுள்ளார்
சுகுமாரின் ஒளிப்பதிவில் மலை சார்ந்த இடங்கள் அற்புதமாக காட்சி தருகிறது. நிவாஸ்.கே பிரசன்னா கூடுமான வரை தரமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார். முதல் பாக கும்கி அளவிற்கு பாடல்கள் சோபிக்கவில்லை என்பது சின்ன சோகம்
படம் ஆரமித்து 20 நிமிடங்கள் நம்மை கட்டுப்போடுகிறார் இயக்குநர் பிரபு சாலமான். காத்திரமான திரைமொழி, அற்புதமான எமோஷ்னல் என முதல் 20 நிமிடம் படம் அட்டகாசம். ஆனால் அதன்பின் கதையில் நிகழும் சம்பவங்கள் நம்மோடு கனெக்ட் ஆக மறுக்கிறது. காரணம் சிரத்தையற்ற மேக்கிங் மற்றும் லாஜிக் அற்ற திரைக்கதை. சற்று மெனக்கெட்டிருந்தால் அழகான கன்டென்ட் வாய்த்திருக்கும். ஜஸ்ட் மிஸ்!
குழந்தைகளுக்குப் பிடிக்கும்படியான யானை காட்சிகள் சில இருக்கின்றன. குறிப்பாக யானையின் சண்டைக்காட்சிகள். இது குழந்தைகளை கவர வாய்ப்புள்ளது
2.75/5
-வெண்பா தமிழ்

