டைரியைப் திருப்பிப் பார்ப்பது ஒரு வாழ்வை திரும்பிப் பார்ப்பது போல. கடந்தகாலத்தில் நடந்த இனிமையான நிகழ்வு மட்டுமல்ல..கடந்த காலத்தில் நடந்த துன்பியல் சம்பவங்கள் கூட நினைத்துப் பார்க்கும் போது சுகமான வலியைக் கொடுக்கும். ரசிகர்களுக்கு அப்படியொரு வலியை கடத்திய படம் சேரனின் ஆட்டோகிராஃப்
நாயகன் தன் திருமண அழைப்பிதழோடு தன் வாழ்வில் வந்துபோன உறவுகளையும், வாழ்வாகவே வந்து சென்ற உறவுகளையும் நேரில் சந்திக்கச் செல்கிறான். ஒவ்வொரு இடத்திற்கு அவன் செல்லும் போதும் அங்கு அவனுக்கு நிகழ்ந்த அனுபவங்கள் காட்சிகளாக விரிகிறது. இதுதான் ஆட்டோகிராஃப் படத்தின் திரைக்கதை
பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் இந்தக் கதையைக் கேட்டு டேட் காரணமாக மிஸ் பண்ணியது வரலாறு. ஒரு கட்டத்தில் தானே நடிப்பது என்ற துணிச்சலான முடிவை சேரன் எடுத்தார். முடிவை காப்பாற்றும் படி சிறப்பாகவே நடித்தார். இல்லை வாழ்ந்தார். கோபிகா, சிநேகா, மல்லிகா, மோனிகா, ராஜேஷ் உள்பட படத்தில் யாரும் நடிகர்களாக தெரியவில்லை கேரக்டர்களாகவே மிளிர்ந்தார்கள்
பரத்வாஜின் இசை பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. ஞாபகம் வருதே பாடல் மயிலிறகால் நம்மை வருடியது என்றால், ஒவ்வொரு பூக்களுமே பாடல் நமக்குள் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியது. பின்னணி இசையும் படத்தை உயர்த்தி காட்டியது. நான்கு ஒளிப்பதிவாளர்கள் அசத்தியிருந்தார்கள்
2004-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் திரைமொழி அதுவரை தமிழ்சினிமா பார்த்திராத ஒன்று. மிகவும் காத்திரமான விமர்சனங்களோடும் வரவேற்போடும் வெற்றிபெற்ற அற்புத காவியத்தை சேரன் மீண்டும் ரீ ரிலீஸ் செய்துள்ளார். நிச்சயமாக புதுப்பொலிவோடு படம் நம்மை வசிகரீக்கிறது. 21 வருடங்களுக்கு முன்பு என்ன உணர்வை படம் தந்ததோ..அதே உணர்வை இப்போதும் தருகிறது. தயவுசெய்து தவறவிடாமல் குடும்பத்தோடு தியேட்டரில் சென்று பாருங்கள்.
ஆட்டோகிராஃப் படம் மட்டுமல்ல. நினைவில் வைத்துப் போற்ற வேண்டிய பொக்கிசம்
4.5/5
-வெண்பா தமிழ்

