கிணற்றில் விழுந்து இறந்தவள் மூன்றாம் நாள் மிதக்கிறாள்.. திறந்த அவள் முதுகில் ஒரு தவளை அமர்ந்திருக்கிறது..அந்தத் தவளையின் அசைவுகள் செத்தவளை உயிரோடிருப்பவள் போல் எண்ண வைக்கிறது..
இறந்தவளின் மகன் காசி இதை கிணற்றுக்கு மேல் நின்று பார்க்கிறான். அப்பா திடீரென உடுத்த ஒரு புடவை, அம்மா உடுத்த ஒரு புடவை, சவளைப் பிள்ளையாய் இருந்து மரித்த ஒரு சகோதரி போர்த்தியிருந்த ஒரு புடவை என மூன்று புடவையோடு காசி பெயருக்கேற்றாற் போல சுற்றுகிறான். அவன் முடியும் இடத்தில் கதை முடிகையில் ஒருவித சிலிர்ப்பும் கசப்பும் வந்துவிடுகிறது..
மரிய புஷ்பத்தின் சைக்கிள் என்ற இன்னொரு கதையில் புஷ்பத்தின் கசங்கல் வாழ்வை கண்முன் நிறுத்தி கலங்க வைக்கிறார் நரன்..
ஸ்தபதி மானேந்தி ஒரு பெண் வேட்டையை சிற்ப வேலைப்பாட்டின் லாவகத்தோடு கையாண்டு முடிக்கும் கதையில் இருக்கும் கற்பனாத்திறன் …”அட இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா?” என்ற ஏங்க வைத்தது
இந்த நூலில் உள்ள 11 கதைகளும் உள்ளபடியே உள்ளம் தொடும் வீரியம் மிக்கவை
வாழ்வில் கெடு பலன்களையே கண்டவர்கள் தான் கதையெங்கும் நிறைந்திருக்கிறார்கள். இங்கு எல்லோருக்கும் “நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்கும்” வாழ்வு அமைந்து விடுவதில்லை என்ற எதார்த்தத்தை கேசத்தின் கதைகள் மனதில் அறைந்து சொல்கின்றன

