கம்ப இராமாயணம்- நூல் விமர்சனம்

2023-ல் பன்னிரு திருமுறைகள் வாசித்து முடித்தேன். அதை முடித்த கையோடு ராமாயணத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் பிடித்து ஆட்டியது. அந்த ஆர்வத்தோடு, யாரின் உரை நன்றாக இருக்கும் என்று பலரிடமும் கேட்டேன். ரெயின்போ எப்.எமின் தமிழ் முகமான பேச்சாளர் நண்பர் மணி அவர்கள் பள்ளத்தூர் பழ.பழனியப்பன் அய்யாவின் உரை நிறைந்த ராமாயணத்தை பரிந்துரைத்தார்.
அப்படியே அய்யா அவர்களின் அலைபேசி எண்ணையும் பகிர்ந்தார். அய்யாவிடம் பேசிய இரண்டே நாளில் சலுகை விலையில் அலுவலகத்திற்கு கம்ப இராமாயணம் மொத்த தொகுப்பும் வந்தது. மற்ற புத்தகங்கள் நிறைய வாசிக்க வேண்டிய இருப்பதால் ராமாயணத்தை ஒரு நாளைக்கு பத்துப்பக்கம் மட்டுமே வாசிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டேன். சில நாட்கள் மிஸ் ஆனாலும் 7,088 பக்கங்களையும் இரண்டரை ஆண்டுக்குள் வாசித்துவிடலாம் என்பது என் எண்ணம். படப்பிடிப்பு தளம், திருப்பதி, பிரஸ்மீட் நிகழ்வுகள் நடக்குமிடம், தோட்டம், காடு என எங்கு பயணித்தாலும் ராமாயணம் என்னோடு வந்தது. ஆனாலும் சில காலம் வனவாசம் போனது போல நூலை விட்டுப் பிரிந்து நிற்க வேண்டியதாயிற்று. இருந்தாலும் விடாது முயற்சித்து இதோ மூன்றரை ஆண்டுகளில் வாசித்து முடித்துவிட்டேன். சர்வ நிச்சயமாக பள்ளத்தூர் பழ.பழனியப்பன் அய்யாவின் அருமையான உரை தான் என்னை ராமாயண உலகத்திற்குள் சுவையோடு உலவ வைத்தது. 33 ஆண்டுகள் வங்கிப்பணியில் இருந்த பழனியப்பன் அய்யா பணியில் இருக்கும் போதே ராமாயணத்திற்கு உரையெழுத பெரும் ஆவலோடு இருந்தார். அவ்வப்போது விடுப்பு எடுத்தும் அவர் இந்த பெரும்பணியில் ஈடுபட்டார். இதுவரை வந்த உரைகளில் பழனியப்பன் அய்யாவின் உரையில் அவ்வளவு எளிமை இனிமை! இதை பலரின் உரைகளை வாசித்த பலரும் உரைத்துள்ளனர். அய்யா அவர்களின் உரை கரங்களுக்கு நிறை நன்றி!

கம்பராமாயணத்தை போல ஒரு தேர்ந்த திரைக்கதை இருக்க முடியாது. அறிமுகமாகும் ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு பின்புலம், அவர்கள் பின்னால் செய்ய இருக்கும் வினைகளுக்கு முன்பே கொடுக்கும் லீட் என கம்பன் ஒரு தரமான திரைக்கதை ஆசிரியராக மிரட்டியிருக்கிறார். மேலும் ராமனை எல்லா இடங்களிலும் முதன்மை இடத்தில் நிறுத்த அவர் அமைக்கும் பாடல்கள் இருக்கிறதே அடடா!

எல்லா நல்ல செயல்களுக்கும் ராமனே காரணம். மேலும் பிறருக்கு நேரும் எல்லா நல்லவற்றுக்கும் காவிய நாயகன் ராமனே காரணம்.
உதாரணத்திற்கு வீடணன் இறந்தவர்களின் உடல்களை கண்டு துன்பம் கொள்கிறான். அவன் துன்பத்தை ராமன் விலக்கி வைக்கிறான். அதை கம்பன் சொல்கிறான் இப்படி..

“அந்தம் இல் இடர்ப்பாரம் அகற்றினான்”

வீடணுக்கு துன்பம் விலகவில்லை. ராமன் தான் விலக்கினான்

ராமனின் மனநிலையை துல்லியமாக அறிந்தவன் அனுமன். அதை உணர்த்தும் பாடலுக்கான உரையை பழனியப்பன் அய்யா சிறப்பாக எழுதியிருப்பார். சீதையைக் கண்டபின் அனுமன் ராமனிடம் வருகிறார். ராமனுக்கு இரண்டு சந்தேகம். ஒன்று சீதை உயிரோடு இருக்கிறாளா? மற்றொன்று கற்போடு இருக்கிறாளா?

இதை அனுமன் உணர்ந்ததால் தான், “கண்டெனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்” என்கிறான். ராமனும் ஐயம் தீர்ந்தான். இந்தப்பாட்டில் இன்னொரு வரியான “கண்களால் கண்டேன்” என்ற வரிக்கு ஒரு சிறப்புப் பொருளைத் தருகிறார் உரையாசிரியர்.

‘சீதையின் கண்களில் நீ இருந்தாய். அதன்பிறகு தான் அது சீதை என்று முடிவுக்கு வந்தேன்’ என்கிறான் அனுமன்! ராமன் உச்சி குளிர்ந்திருப்பான் தானே!

கைகேயின் சொல்லிலுள்ள விசம் தசரதனை அழித்தது. ஆனால் அவன் நாக்கு ராமனை உச்சரித்ததால் அவனுக்கு உயிர் மிச்சமிருந்தது..
அதன்பாடல் இது..

“ஓதக்கடல் நஞ்சனையால் உரை நஞ்சு ஒருவாறு அவிய காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான்”

ஆணுக்குள் எரியும் பெண்ணாசையை ஞானியாலும் வெல்ல முடியாது என்ற உண்மையை, “ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும் வீறுசேர் முலை மாதரை வெல்வரோ” என்று கம்பன் சொன்னதும் சிரித்துவிட்டேன்

என்னை ஈர்த்த மற்றொரு ஹீரோயிச பாடல். விஸ்வாமித்திரர் பாடுவதாக அமைந்த பாடல் இது:

“மை வண்ணத்து அரக்கி போரின்
மழை வண்ணத்து அண்ணலே
உன் கை வண்ணம் அங்கு கண்டேன்
கால் வண்ணம் இங்கு கண்டேன்”

உரை:
தாடகை எனும் அரக்கி மை வண்ணம் உடையவள். ராமன் மழை வண்ணம் உடையவன். இரண்டுமே கருப்பு தான். ஆனால் மை அழித்தல் பொருளாகவும், மழை மக்களுக்குப் பயன்படும் பொருளாகவும் உள்ளது. மேலும் ராமனின் கை வண்ணம் தீயவர்களை அழிக்கும். தாடகையை அழித்தது. ராமனின் கால்கள் நல்லோர்க்கு வாழ்வளிக்கும், ராமன் கால் பட்டதும் அகலிகை சாபம் தீர்ந்தாள்🤍 Wow

இப்படி இன்னும் நிறைய என்னை வியக்க வைத்த, விம்ம வைத்த, ரசிக்க ருசிக்க வைத்த பாடல்களும், காட்சிகளும் ராமாயணத்தில் கொட்டிக்கிடக்கிறது. கெட்டியான வாய்ப்பு வரும்போதெல்லாம் பயன்படுத்துவேன்

நிறைவாக 10451 பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடலை மட்டும் சொல்லி விடுகிறேன்..

அனுமன் ராவணனிடம் ராமன் யார் என்பதைச் சொல்லும் பாடல். தன் தலைவனின் எதிரியிடம் சென்று தன் தலைவன் யார் என்பதை இதைவிட மாஸ்-ஆக சொல்ல முடியுமா?

“பூத நாயகன், நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன், அப்பூ மேல் சீதை நாயகன், வேறு உள்ள தெய்வநாயகன், நீ செப்பும் வேதநாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன்” ஆஹா..ஆஹா..

*பூதநாயகன்* ஐம்பூதங்களை உள்ளடக்கியவன் ராமன்

*புவிக்கு நாயகன்* படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழிலையும் செய்வதால் புவியின் நாயகன் ராமன்

*பூ மேல் சீதை நாயகன்*
பூ மீது அமர்ந்திருப்பவள் லெட்சுமி. அவளின் வடிவமே சீதை. சீதைக்கு நாயகன் ராமன்

*வேறு உள்ள தெய்வநாயகன்*
வேறு தெய்வங்கள் உலகில் இருந்தாலும் அனைவரிலும் வேறுபட்டு செயல்படுபவன் ராமன்

*வேதநாயகன்*
நாம் ஓதுகின்ற வேதங்களில் இருப்பவனும் ராமன்

*விதிக்கு நாயகன்*
விதியெழுதும் பிரம்மனையே படைத்தவன் என்பதால் நமது விதிக்கும் one and only நாயகன் ராமன்😍

ராமாயணம் படித்தால் நிறைய நன்மைகள் உண்டு என்பார்கள். கம்ப ராமாயணம் படிப்பதே பெரு நன்மை என்பேன்🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *