காயல்- விமர்சனம்

மனிதர்களின் உளவியலைப் பின் பற்றி பயணிக்கும் ஒரு படம்

இயக்குநர் தமயந்தியின் துணிச்சல் படத்தின் முதல் காட்சியிலே தெரிகிறது. படத்தின் மெயின் கேரக்டரின் இறப்பில் தான் கதை துவங்குகிறது. காயத்ரியும் லிங்கேஷும் காதலிக்கிறார்கள். காயத்ரியின் அப்பா ஒரு போலீஸ் உயரதிகாரி. அம்மா ஹவுஸ் வொய்ப். மகளின் காதலுக்கு அப்பா பச்சைக்கொடி காட்டுகிறார். ஜாதியைக் காரணம் காட்டி அம்மா எதிர்க்கொடி ஏந்துகிறார். அம்மாவின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார் காயத்ரி. ஆனால் வாழ்வு அவருக்கு ஆசீர்வாதத்தை வழங்கவில்லை. அதன்பின் லிங்கேஷின் வாழ்வு என்னவானது? சாதிய மனநிலையிலிருந்து காயத்ரியின் அம்மா மீண்டு வந்தாரா என்பதாக படம் பயணிக்கிறது.

நாயகன் லிங்கேஷ் தன் கேரக்டரின் கணம் உணர்ந்து இயல்பாக நடித்துள்ளார். காயத்ரி கதையின் நாயகி. நல்ல நடிப்பை கொடுத்துள்ளார். என்றாலும் அவர் எடுக்கும் முடிவை ஆமோதிக்க முடியாது. அமுதாவாக வரும் மற்றொரு நாயகியும் கவனம் ஈர்க்கிறார். காயத்ரியின் அம்மா கேரக்டரில் நடித்தவர் சிறப்பான தேர்வு. அப்பா கேரக்டரும் ஒகே ரகம்

படத்தை இசைவழியே அணுகும் போது நல்ல அனுபவம் கிடைத்தது. ஒளிப்பதிவாளரும் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்தியுள்ளார்

இலக்கிய உலகில் நல்ல பரிச்சயமுள்ள தமயந்தி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். வெறுமனே ஒருபடம் என்று அணுகாமல் ஒரு நல்ல அதிர்வை உண்டு பண்ண வேண்டும் என மெனக்கெட்டுள்ளார். சிறிய படங்களுக்கேயுள்ள சமரசங்கள் எட்டிப்பார்த்தாலும் கெட்டியான பேசுபொருள் நம்மை படத்தோடு ஒன்றச் செய்கிறது. குழந்தையை பிரிந்தும், மனைவியை மனதளவில் இழந்தும் தவிக்கும் பாத்திரத்தில் ரமேஷ்திலக்-ஐ பொருத்திய விதம் அபாரம். குறிப்பாக அவரை உளவியல் ஆலோசகராக வார்த்தது மேலும் சிறப்பு. காயத்ரியின் முடிவு பின்பற்றக்கூடாத முடிவு என்ற போதும், அதற்கும் படத்தில் விளக்கம் தந்துள்ளார் தமயந்தி. “ஒதுக்கும் குப்பை உயரும்” என்று கிராமங்களில் சொல்வார்கள். ஒதுக்க வேண்டும் என்ற நினைப்பு குப்பையை விட மலிவானது என இந்தக் காயல் சொல்கிறது. வணிகப்பட வரிசையில் இந்த மனிதப்படத்தையும் சேர்த்து வெற்றிபெற வைக்க வேண்டும்
3.5/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *