பெண் பிள்ளை பெற்ற தகப்பன்களின் பெரும்பாசத்தை கண்முன் நிறுத்தி கண்கலங்க வைக்கிறது இந்த இருமுடி கட்டு
ஐயப்பனுக்கு மாலைபோடும் அந்த 41 நாள் தவிர்த்து மற்ற எல்லா நாட்களும் குடிக்கும் வழக்கம் உள்ள ரவிதேஜாவுக்கு இரு நல்ல பழக்கம் உண்டு! ஒன்று தன் மகளை எதற்கும் அஞ்சாமல் உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற பாடத்தை அன்றாடம் கற்பிப்பது. மற்றொன்று தன் மகளைப் போலவே அனைத்துப் பெண்பிள்ளைகளையும் பார்ப்பது. இப்படியான பெரும்பாசம் கொண்ட தகப்பனுக்கு பேரிடி விழுவது போல் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது. அந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்களை சம்ஹாரம் செய்ய கிளம்புகிறார் ரவிதேஜா. அவர் நடத்தும் அசுரவதமே க்ளைமாக்ஸ்!
ஹீரோவாக தன்னை முன் நிறுத்தும் பல காட்சிகள் இருந்தும் அடக்கி வாசித்தே ஸ்கோர் செய்கிறார் ரவிதேஜா. எரிமலையாய் வெடிக்கும் காட்சிகளில் சபரிமலை ஜோதியின் உக்கிரம் அவரிடம். பிரியா பவானி சங்கரிடம் நாம் என்ன நடிப்பை எதிர்பார்ப்போமோ அதை உணர்ந்து அவர் நடித்துள்ளார். சிறுமி நட்சத்திரா தான் இந்தப்படத்தில் வுமன் ஆப் தி மேட்ச்! அந்த இளம்பிஞ்சுவின் நடிப்பு பல காட்சிகளில் நம் கண்களை குளமாக்கி விடுகின்றன. சாய்குமார் தானொரு மிகச்சிறந்த நடிகர் என்பதை இந்தப்படத்திலும் உறுதி செய்துள்ளார். ஏனைய கேரக்டர்களில் வரும் மற்றும் பல நடிகர்களும் தரமாக நடித்துள்ளனர்
ஜிவி பிரகாஷ் இப்படத்தில் இசையால் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். விஷ்ணு ஷர்மா மிரட்டலான ஒளிப்பதிவை தந்துள்ளார். நைட் எபெக்ட் காட்சிகளில் லைட்டிங் மற்றும் ப்ரேமிங் அமர்க்களம்
ஒரு தெளிவான பார்வையோடு இந்தக் கதையை அணுகியுள்ளார் இயக்குநர் ஷிவா நிர்வனா. “பெண்கள் தந்தையிடம் எதையும் மறைக்கக் கூடாது என்பதையும், தங்கள் வருங்காலம் கருதி தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை சகித்துக்கொள்ள வேண்டிய அவசியம் பெண்களுக்கு இல்லை” என்பதையும் படம் போல்டாக பேசியுள்ளது. மேலும் குடியால் வரும் பேரிழப்பை ஒரு காட்சியில் தெளிவாக உணர்த்தியுள்ளார் இயக்குநர். ஒரு பெரும் பிரச்சனையை ஒரு கேரக்டர் ஹீரோவிடம் சொல்லும். ஹீரோ அப்போது Full போதையில் இருப்பார். அதனால் அந்த பிரச்சனை திசைமாறி அவல முடிவுக்குச் சென்றுவிடும். குடி நடத்தும் கொடூரத்தை நச்சென சொன்ன இயக்குநருக்கு தனிப்பாராட்டு!
பின்பாதியிலுள்ள அழுத்தம் முன்பாதியில் இல்லை. இருந்தும் இருமுடி கட்டு சரியான முடிவை எட்டும் போது நம் கண்களில் கண்ணீர் அபிஷேகம் நடக்கிறது!
இருமுடி கட்டு- வெற்றிக்கொடி நட்டு
3.25/5
-வெண்பா தமிழ்

