எரியும் பனிக்காடு (Red Tea) ஒரு புத்தகம்- ஒரு பார்வை

“எவ்வளவு அழகான முகமூடி பூண்டிருக்கிறது இந்த நரகம்” என்ற ஷேக்ஸ்பியர் வார்த்தைகளும்,

“ஆனைமலைக்காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்…
நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும்
ஒவ்வொரு துளி தேநீரிலும்
கலந்திருக்கிறது எமது உதிரம்” என்ற Aadhavan Dheetchanya ஆதவன் தீட்சண்யாவின் கவிதையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது

ஆதவன் தீட்சண்யாவின் கவிதை தான் நம்மை நூலுக்குள் நடுக்கத்தோடு அழைக்கிறது. நிச்சயமாக ஒரு துயர்மிகு பதிவுக்குள் செல்கிறோம் என்றே 407 பக்கங்கள் கொண்ட இந்தத் தேயிலைத்தோட்டத்திற்குள் நுழைந்தேன். எப்போதுமே கற்பனையை விட நிஜம் கொடூரமானது. நிஜத்தின் வீரியத்தை கற்பனையில் கலந்து பி.எச். டேனியல் இந்நூலை எழுதியுள்ளார். பி.எச் டேனியல் 1940-ஆம் ஆண்டு வால்பாறை காரமடை எஸ்டேட்டில் தலைமை மருத்துவராக பதிவி ஏற்றார். அதன்பின் தான் தேயிலை எஸ்டேட்களில் நமது மக்களின் ரத்தம் உறிஞ்சப்படுவது உலகிற்கு ஓரளவு தெரியவந்தது. கூலிகளுக்காக தொழிற்சங்கம் அமைப்பதற்கு பெருந்துணை புரிந்தவர் பி.எச்.டேனியல். அவர் எழுதிய இந்தத் துயர்மிகு நூலை நமது ஊர்களின் வேர்பிடித்து இரா.முருகவேள் இரா. முருகவேள் தமிழ்ப்படுத்தியுள்ளார். ஆகச்சிறந்த மொழி பெயர்ப்பு. கதை துவங்குமிடம் எங்கள் நெல்லை என்பதால் இனி அந்த மொழியிலே எழுதுகிறேன்

1925 டிசம்பர்ல துவங்குது கதை. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மயிலோடை என்ற கிராமத்துல வயித்துக்குப் பத்தாத வாழ்க்கை வாழ்றாவ இளம் தம்பதிகளான கருப்பனும் வள்ளியும். கூடவே கருப்பனோட அம்மையும் கிடக்கு. கரைக்க ராகியும் இல்ல, செழிக்க மழையுமில்லன்ற காலம் அது. கயத்தாறுல கூடுத சந்தைக்குப் போனா எதாவது பொழப்பு கிடைக்கும்னு போறான் கருப்பன். அங்க வச்சி கங்காணி சங்கரபாண்டியைப் பாக்கான். கருப்பனோட வயிறை விசாரிச்ச கங்காணி அவனை தேயிலைத் தோட்ட வேலைக்கு வரச்சொல்லுதான். கருப்பன் ஊர்லே இருக்க வைரமுத்து என்ற ஒருத்தரு மலங்காட்டு வேலைக்குப் போயிதான் மலைபோல சொத்த சேத்துட்டதா கருப்பனுக்கு சொல்லப்படுது. ஊர்ல இருக்கவன் வளர ஒரு வழி இருக்கும்னா அந்த வழில தான ஊர் ஜனமும் போவ ஆசப்படும். அதனால கருப்பன் தான் அம்மய மாமியா வீட்டுல விட்டுட்டு இளம் பொஞ்சாதியோட தேயிலைத்தோட்டத்துக்குப் போறான். இவங்களோட சேர்த்து இன்னும் பெருங்கூட்டத்தை அள்ளிட்டுப் போறான் மேஸ்திரி சஙகரபாண்டி (கங்காணியை மேஸ்திரின்னும் சொல்வாகளாம்.) கோவில்பட்டில நிலக்கரி திங்க ரெயில்ல ஏறி, மதுரை போமுன்னே வாடி, திண்டுக்கல்லுல இறங்கி கஞ்சி குடிச்சிட்டு, பெறவு பொள்ளாச்சிப் போயி அப்புறமா காட்ட நோக்கி நடக்குவ பாவப்பட்ட ஜனங்க. இவங்கள வழி நடத்திக் கூட்டிட்டுப் போறான் சங்கரபாண்டியோட துணை மேஸ்திரியான வெள்ளையன். மலையில இருக்கு சொர்க்கம்னு சொல்லிக் கூட்டிட்டுப் போறானுவ. அதையும் மலை போல நம்பி போவதுக ஜனங்க. நாவல் துவங்கி 70-ஆம் பக்கங்களுலே இதெல்லாம் நடந்திருது. இதுக்குப் பெறவு நடக்குறதெல்லாம் எமபாதக செயலுங்க தான்

இனிச்ச வார்த்தைவ சொல்லிக் கூட்டிட்டுப் போன மேஸ்திரி சங்கரப்பாண்டியன் காட்டை அடைஞ்சதும் கூலிவளை படாதபாடு படுத்துதான். காச்ச வந்தாலும் வேலைக்குப் போணும். மாச்ச வந்தாலும் வேலைக்குப் போனாலும். குறிப்பா பொண்டாட்டி பிள்ளிய செத்தாலும் அடக்கம் பண்ணிட்டு அப்படியே வேலைக்குப் போணும். கொஞ்சம் பாக்க லட்சணமா இருக்கப் பொம்பளைவளை வெள்ளக்காரன் எங்க தொட்டாலும் சிரிக்கணும். லேசா முறைச்சா கூட கூட்டிப்போன மேஸ்திரிவ டின்னு கட்டிருவானுவ. கூலிங்க வேலை பாத்து வருசத்துக்கு 50 ரூபா சம்பாதிச்சா அதுல 15 ரூவா கமுசனா மேஸ்திரிக்குப் போயிரும். அதனால அவன்வ கூலிவளை வேலை செய் வேலை செய்னு விரட்டிட்டே இருப்பானுவ. ஒருவருசம் தாக்குப்பிடிச்சிட்டு எப்படியாவது தப்பிச்சிப் பேரலாம்னு நினைக்க கருப்பனும் வள்ளியும் படுத கொடுமைகளை எல்லாம் சொல்லி மாளாது.

தங்குற இடம், திங்குற உணவு, ஊசிபோடுத ஆஸ்பத்திரி எதுவுமே உருப்படி கிடையாது. ரொம்பக் கொடுமையான வாழ்க்கை எஸ்டேட் வாழ்க்கை. ஆபிரஹாம்னு ஒரு டாக்டர் மட்டும் கூலிகளுக்காக இரங்குதாரு. கூலிங்க தவிர அங்க எழுத்து வேலை செய்த இந்தியாக்காரன்வளும் பாவப்பட்டுப் போய் தான் கெடக்காங்க. ஆனா சூழல் கருதி கூலிங்களுக்கு இசைவா அவங்களால போமுடியல.

நாவலை முடிக்க வரைக்கும் கருப்பனும் வள்ளியும் எப்படியாவது திரும்பி மயிலோடைக்கு வந்திரணும்னு வேண்டிட்டே படிச்சேன். சதிக்குள்ள விதி மாட்டிக்கிட்ட கதையா போய்ட்டு முடிவு

ஸ்ட்ராங்க் டீ, லைட் டீ, மீடியம் டீன்னு நாம குடிக்கிற டீ சுவையில இவ்வளவு ரத்தமா?

அடிமை வாழ்வின் வலிகளை புரிந்துகொள்ள இந்த நூலை அனைவரும் வாசிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *