ஆறுமுகம்- நூல் விமர்சனம்

மோகமுள் நாவலில் ‘எல்லாம்’ முடிந்த பின் பாபுவிடம் யமுனா சொல்வாள், ‘எல்லாம் இதுக்குத்தானா’ என்று. அவள் சொல்லும் அந்த ஒருவரி வசனம் மொத்த மனித வாழ்வின் ஆக்க நோக்கங்களையும் சொல்லும்

அதேபோல் இமையத்தின் இந்த ஆறுமுகம் நாவலில் தனபாக்கியம் தன் மகனான ஆறுமுகத்திடம் ஒரு வார்த்தைச் சொல்கிறாள். அந்த வார்த்தையிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை

ஒத்தைக்கு ஒரு மகளான தனபாக்கியத்தை ராமன் என்ற விவசாய உழைப்பாளிக்கு கட்டிக்கொடுக்கிறார் தனபாக்கியத்தின் தகப்பன். வாழப்போன மகள் ஒரு மகனை பெற்றெடுத்துவிட்டு புருசனை சாவு கொடுக்கிறாள். மகனை புருசன் போல் கூலியாக்கி விடக்கூடாது என நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்க்கிறாள். தன் ஊன் உயிர் மொத்தமும் ஆறுமுகம் என வாழ்கிறாள் தனபாக்கியம். அவன் அற்ற பயணம் இறுதிப்பயணம் மட்டும் தான் என்ற உறுதி கொள்கிறாள். அந்த இள வயது தனபாக்கியத்தை அவளின் உடலும், சில கண்களும் சும்மா விடவில்லை. மனசு வேற உடம்பு வேற என்பது நிதர்சனம் அல்லவா? தான் வேலை செய்யும் ஆரோ மில் வெள்ளைக்கார அதிகாரிக்கு தன் உடலை துணியை அகற்றி கொடுக்கிறாள் தன பாக்கியம். பள்ளிக்கூடம் சென்ற ஆறுமுகம் ஒரு மாணவன் வண்டியில் அடிபட்டுச் செத்ததால் வீட்டுக்கு இடையிலே வருகிறான். அம்மாவின் உடையற்ற மேனியில் இன்னொருவன் உடையற்று இருப்பதைக் கண்டு ஓடுகிறான்.. அந்தத் ஓட்டம் பல வருடங்களாக தொடர்கிறது.. ஓட்டத்தின் முடிவை வாசித்துச் செறிக்கவே முடியவில்லை..அப்படியொரு கனமான முடிவு

பாண்டிச்சேரி செக்குமேட்டில் இரவு பாலியல் தொழிலாள பெண்களுடன் ஆறுமுகத்தின் வாழ்வு நகர்கிறது. அம்மாவை வேறோருவனோடு காண சகிக்காத ஆறுமுகம் தன் வாழ்வை மொத்தமும் அப்படியான பெண்களின் நடுவே கழித்து வருகிறான். அவர்களின் வாழ்வின் தேவைகளையும் கண்ணீரையும் கூட இருந்து பார்க்கிறான். முடிந்தால் தேற்றுகிறான்

இந்த உலகின் ஆகப்பெரிய சக்தி காமம். இந்த உலகின் ஆகப்பெரிய நிம்மதி காம நிறைவு. தன்னிறைவு என்பதை பணம்&உடல் என இரண்டாகச் சிலர் பிரித்தாலும் பணத்தைத் தாண்டி ஓங்கி நிற்பதும் ஒலிப்பதும் உடல் தான்

உடல்கள் ஏற்படுத்தும் பதற்றங்களும், பக்குவங்களும், சந்தோசங்களும், துயரங்களும் சொல்லில் அடங்காதவை. பூக்கடைக்கு நிகராக வாசம் வீசும் சின்னப்பொண்ணு இரவு விபச்சார தகராறின் காரணமாக சாக்கடையில் பிணமாக மிதக்கிறாள். நாயுடு சாதியில் ஒசந்த வாழ்வு வாழ்ந்த வசந்தா கசந்த உலகில் சுழல்கிறாள். அபிதா, தங்கமணி, பாக்கியம் என இத்தனை பெண் கேரக்டர்களும் வெறும் உடல்கள் போலவே கதையில் இருக்கிறார்கள். அவர்களின் உயிர் பற்றி வாசிக்கும் போது மனதில் தீ பிடிக்கிறது

இங்கு சிரித்துக்கொண்டே வாழும் எல்லோர் வாழ்வும் வெற்றிகரமான வாழ்வில்லை. வாழ்கிறோம் என்பதே வெற்றி என்ற கருத்தை அடியொற்றி வாழும் மக்கள் இங்கு அநேகம். அப்படியான மனிதர்களை இந்த ஆறுமுகம் அறிமுகம் செய்கிறான்.இமையத்தின் மற்றொரு ஆகத்தரமான படைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *