மனித வாழ்வின் மகத்தான பாதையை மலிவான பாதையாக மாற்றுவதே போதை கலாச்சாரம் தான். அதன்பின்னணியில் ஒரு கதையைப் பின்னியுள்ளார் இயக்குநர் T.சமயமுரளி
எத்தகைய கொடுமையையும் நிகழ்த்திக் காட்டும் வல்லமை அளவற்ற வறுமைக்கு உண்டு. அப்படியொரு வறுமைக்குள் சிக்கியுள்ளனர் இரு இளைஞர்கள். அவர்களை தங்கள் வலைக்குள் போட்டு வளர்த்தெடுக்கத் துடிக்கிறார் சர்வதேச கடத்தல்காரர் ஒருவர். மேலும் நேர்மையான அதிகாரி ஒருவர் கடத்தல் கும்பலின் வேர்வரை சென்று வேரறுக்க நினைக்கிறார். இந்த முக்கோண கதாப்பாத்திரங்களின் பயணமே படத்தின் திரைக்கதை
ஜேடி சக்ரவர்த்தி இயல்பான நடிப்பால் கரை சேர்கிறார். லால் வழக்கம் போல தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ராதிகா சரத்குமார் தனது அனுபவ முதிர்ச்சியை நடிப்பில் வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேகா, காளிவெங்கட் உள்ளிட்ட ஏனைய நடிகர்களும் கவனம் ஈர்க்கிறார்கள்
கா.வின் பாஸ்கர் நல்ல விஷுவலை கொடுத்துள்ளார். சாம் டேனியல் நல்லிசையை பதிவு செய்துள்ளார்.
நாம் பார்த்திராத உலகத்தை காத்திரமாக படைக்க முயன்றுள்ளார் இயக்குநர். ஐடியாவாக நிறைய இடங்களில் படம் நம்மை ஈர்க்கவே செய்கிறது. திரைக்கதையின் ஓட்டத்திலும் காட்சியமைப்புகளிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். போதைக்கு எதிராக எந்தப்படம் வந்தாலும் வரவேற்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதால் இந்தப்படத்திற்கு பாசிட்டிவ் சிக்னல் கொடுக்கலாம்
3/5
-வெண்பா தமிழ்

