குறிஞ்சி மலர்- நூல் விமர்சனம்

65 வருடங்களுக்கு முன் வந்த நாவல். அதனால் அந்த காலத்து கலாச்சாரமும் மொழிநடையும் இப்போது வாசிக்கையில் சற்று அந்நியமாகத் தான் தெரிகிறது. இருப்பினும் கதையின் ப்ளோ அட்டகாசம்!

அறம் பிறழா எழுத்தாளரின் மகள் பூரணி. தாயும் தந்தையும் இரு தம்பிகள் ஒரு தங்கையை அவளிடம் விட்டுவிட்டு இ*றந்து போகிறார்கள். அதன்பின் தனியொருத்தியாக வாழ்வை எதிர்கொள்கிறாள் பூரணி. மீனாட்சி அச்சகத்தில் வேலை செய்யும் அரவிந்தன் எனும் மாசற்ற இளைஞன் பூரணியோடு நட்பாகிறான். பூரணியின் தமிழையும் குரலையும் நாடெங்கும் ஒலிக்கச் செய்யும் வேலையை முன்னெடுக்கிறான். மீனாட்சி அச்சக உரிமையாளரின் தூண்டுதலால் பூரணியை தேர்தலில் போட்டியிடவும் தயார் படுத்துகிறான் அரவிந்தன். ஆனால் எதிராளிகள் செய்யும் சதியை விதி முன்மொழிகிறது. அதனால் இழப்புகளும் வலிகளும் அவர்களை விடாமல் துரத்துகிறது. விக்ரமன் படத்தில் வரும் நல்ல கேரக்டர்கள் போல, முருகானந்தம், மங்களேஸ்வரியம்மாள் என நிறைய கேரக்டர்கள் நாவலில் வருகிறார்கள். அவர்களில் முருகானந்தம் கேரக்டரை நன்றாக ரசிக்க முடிந்தது

65 ஆண்டுகளுக்கு முன்பு வந்த நாவல் என்பதால் பெண் சுதந்திரத்திற்கு அளவுகோல் வைத்தே எழுதியிருக்கிறார் நா.பார்த்தசாரதி. நிறைய பக்கங்கள் குதிரைவேகத்தில் ஓடுகிறது. நாவலின் முடிவில் வலிந்து திணிக்கப்பட்ட எமோஷ்னல் அப்போது பயங்கரமாக வொர்க் ஆகியிருக்கும். இப்போது அவ்வளவு டெப்த்தாக தெரியவில்லை.

“நல்லதைச் செய்ய நான்கு அடி எடுத்து வைத்தால், அதை ஏன் செய்கிறாய் என நான்குபேர் அடிப்பார்கள்” என்பதை ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார் நா.பார்த்தசாரதி. இந்த ஒரு மேட்டர் மட்டும் இப்பவும் பொருந்துகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *