தமிழ்நாட்டில் புதிய அரசு சிங்கப்பெண் திட்டத்தை அமல்படுத்தியுள்ள இந்நேரத்தில் பெண்களே முதன்மை சக்தி என்ற கருவோடு வந்துள்ளது ஆட்டி திரைப்படம். ரசிகனை படம் ஆட்டி பார்க்கிறதா?
1970-களில் கதை நடக்கிறது. மலைப்பகுதி ஒன்றிற்கு காவல் அதிகாரியாக வருகிறார் இசக்கி கார்வண்ணன். அந்தப்பகுதியில் எந்தக்குற்றமும் நடக்காமல் இருக்கிறது. ஹீரோவுக்கு அது ஆச்சர்யத்தை தருகிறது. இச்சூழலில் ஒரு ஆசிரியர் கொல்லப்படுகிறார். மேலும் பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களை ஐந்துபேர் கொண்ட முகமூடி குழு கொலை செய்து வருகிறது என்பதும் ஹீரோ இசக்கி கார்வண்ணனுக்கு தெரியவருகிறது. அதன்பின் அவர் விசாரணையைத் துவங்குகிறார். விசாரணையின் முடிவு என்ன என்பதே படத்தின் மீதிக்கதை
இசக்கி கார்வண்ணன் இன்னும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கலாம்..பில்டப் ஓவராக இருந்தாலும் அபி நட்சத்திரா நடிப்பில் ஒரு நேர்த்தி தெரிகிறது. காதல் சுகுமார் காமெடி பெரிதாக எடுபடவில்லை. பிரவீன் பழனிசாமி ஓரளவு கவனம் ஈர்க்கும்படி நடித்துள்ளார். செளந்தர், செல்வகுமார், கரன் சக்ரவர்த்தி, அலன் கிருஷ்ணா உள்ளிட்ட மற்றும் பலர் ஓரளவு கொடுத்த வேலையைச் செய்துள்ளனர். சிலரிடம் மிகையான நடிப்பு வெளிப்பட்டதும் மறுப்பதற்கில்லை
சிபிசதாசிவம் தனது ஒளிப்பதிவை ஓரளவு திறம்பட செய்துள்ளார். இசையமைப்பாளர் தீசன் பின்னணி இசையால் கவனம் பெறுகிறார்.
இயக்குநரின் நோக்கம் சிறப்பானதாக இருந்தாலும் படத்தின் ஆக்கத்தில் நிறைய குறைபாடுகள் உள்ளன. திரைக்கதையை வலுப்படுத்தி காட்சிகளை இன்னும் அழுத்தமாக அமைத்திருக்கலாம். ரசிகனை ஆட்டிப்பார்க்க வேண்டியதை கதையை, ரிமோட் இருந்தால் கொஞ்சம் ஓட்டிப்பார்க்கலாமே என யோசிக்க வைத்துவிட்டார் இயக்குநர். இருப்பினும் பெண்கள் சார்ந்து யோசித்த அந்த நல் எண்ணத்திற்காக பாராட்டுக்கள்
2.5/5
-வெண்பா தமிழ்

