உள்கடல்- நூல் விமர்சனம்

“மணி சாரின் எழுத்தில் வாசித்த இரண்டாவது நூல் உள்கடல். அவரின் மதுர விசாரம் நூலை திரைக்கதையாக எழுதியிருந்தார். இந்த நூலில் இருபது கட்டுரைகளின் சாரமும் திரைக்கதைகள் பற்றித்தான். (கமல் மோகன்லால் பற்றிய கட்டுரைகளில் கூட திரைக்கதை நடிப்பிற்கு கொடுத்துள்ள இடத்தைத் தான் காட்டுகின்றன) அவரின் எழுத்து நடையைப் பற்றி தனியாக சொல்லவேண்டியதில்லை. அசலான தனித்த நடை..அங்கங்கே இனித்துக் கிடக்கிறது.

கமல் பற்றியும் திரை உலகில் கமல் நிகழ்த்தி காட்டிய அசாத்திய துவக்கங்கள் பற்றியும் எழுதிருந்த வரிகளில் எதிலும் முட்டு தென்படவில்லை. அதற்கான அவசியத்தை கமல் வழங்கவும் இல்லை. இந்த ரைட்டர் (மணி சார்) அதைச் செய்யவும் மாட்டார். கமர்சியல் படங்களிலும் கலை செய்யும் வேட்கை கமலிடம் இருந்தது; இருக்கிறது. (ட்ரூ)

உரைமொழி போலல்ல திரைமொழி. அசலான திரைக்கதைகள் பற்றி மணி சார் வியக்கும் போது அவருக்குள் ஓர் அதீத பேராவல் எழுந்து நிற்பதில் நல்ல சினிமா ரசிகன் தெரிகிறான். தமிழ்சினிமாவில் அரசியல் படங்களை அலசிய கட்டுரையில், அமைதிப்படை படத்தில் இருந்த திராவிட அரசியல் எள்ளலை அவர் சுட்டிக்காட்டிய விதம் சரியாக இருந்தது.
திராவிட அரசியலின் அந்தரங்க விசயங்களை கேலி செய்வதே அரசியல் படம் என்ற வேலையை இங்கு நிறையபேர் செய்தார்கள். இப்போதும் விமர்சனம் என்ற பெயரில் விசம் தூவும் வேலையும் நடக்கிறது. நல்லவேலை அந்த சதவிகிதத்தை குறைக்கும் அளவில் காத்திரமான அரசியல் படங்கள் வரும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. (எதுவும் விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டது அல்ல. இன்னும் சொல்லப்போனால் முடைநாற்றம் அடித்துக் கிடக்கிறது இப்போதுள்ள திராவிடம். ஆனால் அதை எதிர்க்கிற சாக்கில் வேறொன்றை உட்புகுத்தி விட எத்தனிக்கிறார்கள். அதை அனுமதிக்கக் கூடாது. இந்த நூலில் இந்த அரசியல் எல்லாம் இல்லை என்பது உபச்செய்தி)

மேலும் புதுப்பேட்டை, மெட்ராஸ் ஆகிய படங்களின் ஒப்பீடு மிகச்சரியாக இருந்தது!

தேவர்மகன், குணா, ஹேராம் படங்கள் பற்றிய கட்டுரைகளில் எதிர்பார்ப்பு நிறைய இருந்தது…என்ன செய்ய? பக்கங்கள் குறைவாகத் தான் இருந்தது. எனக்கு இது மட்டும் தான் குறையாக தெரிந்தது!

திரைத்துறை நண்பர்களுக்கு சியர்ஸ் சொல்லி இந்த நூலைப் பரிந்துரைக்கிறேன். சியர்ஸ் மணி சார்❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *