கப்பிள் பிரண்ட்லி- விமர்சனம்

நீண்ட நாட்கள் கழித்து திரையில் ஒரு காதல் வேர் பிடித்து, கிளை விரித்து, நிழல் தந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த படம் அளித்த நிறைவை சமீபத்திய படங்கள் தரவில்லை என்பதே நிஜம்

நாயகன் வீடுகளுக்கு இன்ட்ரியல் வொர்க் கான்ட்ராக்ட் எடுத்து முன்னேறும் வேட்கையில் சென்னை வருகிறான். அவன் வாழ்வை வறுமை பிடித்தாட்டுகிறது. நாயகி ஐடி துறையில் வேலை செய்து முன்னேறும் கனவோடு வேலை தேடி அலைகிறாள். இந்த இருவரும் ஒரு இக்கட்டான சூழலில் சந்திக்கிறார்கள். நாயகி வந்தபின் அவனது கனவும் வாழ்வும் மேல்நோக்கிச் செல்கிறது. இருவரின் வாழ்வில் ஒளிபடரும் நேரத்தில் திடீரென ஒரு இருள்மேகம் இருவருக்கும் இடையில் புகுந்துகொள்ள, அந்த இருள்மேகம் கலைந்ததா என்பதே படத்தின் மீதி திரைக்கதையாக விரிகிறது

கதையின் நாயகனாக சந்தோஷ் சோபன் ஏற்றுக்கொண்ட கேரக்டரில் வாழ்ந்துள்ளார். தெலுங்கு நடிகர் என்றாலும் நான்கு ஷாட்களிலே நம்மூர் ஆளாக மனதிற்குள் ஒட்டிக்கொள்கிறார். நாயகி மானசா வரணாசி பேரதற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நம்மை கண்குளிர ரசிக்க வைக்கும் அவரே பின்பாதியில் கண் நிறைந்து அழவும் வைக்கிறார். யோகிபாபுவின் வரவும் இப்படத்திற்கு ஸ்வீட் மைலேஜை கொடுத்துள்ளது. சுனில்ரெட்டி உள்பட திரைதொட்ட எல்லா நடிகர்களும் அவரவர்களுக்குள்ள கேரக்டர்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர்

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருசோத்தமன் துளியும் எதார்த்தம் மீறாத காட்சிகளை கண்களுக்கு விருந்தாக தந்துள்ளார். ஆதித்யா ரவீந்திரனின் இசை இந்தப்படத்தின் மற்றொரு ஆன்மா. பின்னணி இசையும் பாடல்களும் மனதை நிறைக்கத் தவறவில்லை

மிக இயல்பாக பயணிக்கும் படம் நம் கண்களை எங்கும் அகல விடவேயில்லை. ஒரு பெண் தனியாக இங்கு சர்வைவல் செய்தவற்கு பெரிய மெனக்கெடல் தேவைப்பட்டாலும், நம்பிக்கை கொண்டு பயணித்தால் எதுவும் சாத்தியம் என்ற ஹோப் கொடுக்கிறது படம். அதுபோல உடனிருக்கும் சக துணையை மோட்டிவேட் செய்வதே வாழ்வின் பெருங்கடன் என்பதையும் படம் பேசுகிறது. ஒருவரின் உயரத்தின் போது அருகிருப்பதா காதல்.. துயரத்தின் போது உயிரோடு கலந்திருப்பதல்லவா காதல்? ஆஹா அருமையான முடிவு படத்தின் முடிவு. காலம் மாறுகிறது காதல் நாறுகிறது என்பவர்களுக்கு மத்தியில் காதலின் மேன்மையை உண்மையாப் பேசியிருக்கிறது கப்பிள் பிரண்ட்லி
4/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *