“நாம் வந்த வழித்தடம் தெரியாமல் குருட்டாம் போக்காக நடப்பவர்களுக்கு அதிர்ஷடமும் கிடையாது; சுபிட்சமும் கிட்டாது” நிகழ்காலத்தில் தெளிவாக நடைபோட கடந்தகாலம் பற்றி அறிதல் அவசியம். வால்காவிலிருந்து கங்கைவரை நூல், மனித வரலாற்றைத் தொட்டு 1940-வரையிலான காலம் வரை பயணிக்கிறது
வரலாற்றை கதை போன்று நகர்த்திச் செல்கிற இராகுல சாங்கிருத்தியாயனின் பாணியும், மூல எழுத்தை சிறப்பாக தமிழ்ப்படுத்தியுள்ள சி.எஸ் தேவநாதன், சிவகாமி நடராஜன் அவர்கள் பணியும் வாசிப்பை இலகுவாக்குகின்றன
செம்மையுற இந்த நூலை வடிவமைத்து, மக்கள் பதிப்பாக 150 ரூபாய்க்கு வெளியிட்டுள்ளது நற்றிணை பதிப்பகம்
காலம் கி.மு 6000
நிலப்பகுதி: இந்தோ- ஐரோப்பியர்கள்
நிஷா என்றொரு பெண். அவள் தலைமையில் தான் அவளின் குடும்பம் இயங்குகிறது. அவளது குகையில் ஒரு பெருங்கிழவி, 50 வயது ஆண், 24 வயது பெண், 24 வயது ஆண், 26 வயது ஆண், 16 வயது பெண்கள், குழந்தைகள் என பதினாறு பேர்கள் இருக்கிறார்கள்
பெருங்கிழவி குழந்தைகள் தவிர்த்து, நிஷா தலைமையில் அனைவரும் உணவிற்காக வேட்டைக்குச் செல்கின்றனர். மூன்று கரடிகளை போராடி கொல்கின்றனர். கரடியின் தோலை உரிக்கும் போது நிஷாவிற்கு 24 வயது இளைஞன் மீது காமம் எழுகிறது. அவள் அவனை அழைத்துச் செல்கிறாள். 26 வயது ஆண் 16 வயது பெண்ணை அழைத்துச் செல்கிறான். காமத்தில் மிருகங்களுக்கு எப்படி வரைமுறையோ பாகுபாடோ கிடையாதோ, அப்படியே நிஷா குடும்பத்திலும் மகன், கணவன், அண்ணன் தங்கை என்ற வரைமுறை கிடையாது. எல்லோரும் பருவம் வந்தால் உறவிற்குத் தக்கவர்கள். அதன் நீட்சி தான் இன்றும் காமவேட்டையில் சில மனிதர்கள் மிருகங்களாக இருக்கின்றனர் போலும்.
நிஷாவின் காமவேட்டை முடிந்த பின் தோலுரிக்கப் பட்ட கரடிகளைத் தூக்கிக்கொண்டு குடும்பம் குகை நோக்கி வருகிறது. செத்த உடல்களின் ரத்தவாடையை கண்டுபிடித்த ஓநாய்கள் நிஷா குடும்பத்தைச் சுற்றுகிறது. ஓநாய்களோடு கடுமையான போராட்டத்தை மேற்கொள்கின்றனர். அதில் நிஷா உறவுகொண்ட ஒரு மகன் இறக்கிறான். நிஷாவின் இன்னொரு மகனோடு உறவு கொண்ட, 16 வயது பெண்ணும் இறக்கிறாள். மிச்ச உயிர்களனைத்தும் அன்றிரவு கரடிக்கறியும் மதுவுமாக இரவைக் கழிக்கின்றனர். காலம் கடக்கிறது. நிஷாவிற்கு வயதாகிறது. அப்போது பெண்வழிச் சமூகம் என்பதனால் நிஷாவிற்கு அடுத்து குடும்பத் தலைமைக் கொள்ள, நிஷாவின் இளைய மகள் லேகா வருகிறாள். நிஷாவிடமிருந்த திடமும் ஆளுமையும் அவளிடம் சற்று அதிகமாகவே இருக்கிறது. மேலும் நிஷாவின் குடும்ப ஆண்கள் எல்லாம் லேகாவின் கண்ணசைவிற்கு கட்டுப்பட காத்திருக்கிறார்கள். இதையெல்லாம் கவனிக்கும் நிஷாவிற்கு பொறாமை பொங்குகிறது. தன் மகளான லேகாவை கொல்ல முடிவெடுக்கிறாள். நேருக்கு நேர் மோதி லேகாவை வெல்ல முடியாது என்பதால் ஒரு சூழ்ச்சிச் செய்கிறாள். லேகாவின் குழந்தை ஒன்றை எடுத்துக் கொண்டு வால்கா நதியோரம் சென்று விளையாடுகிறாள் நிஷா. விளையாட்டின் போக்கிலே அந்த விபரம் அறியாத பச்சிளம் குழந்தையை நதியில் விழ வைக்கிறாள். குழந்தை நதியில் ஆழ்கிறது. போலியாக கூச்சல் போடுகிறாள் நிஷா. பாய்ந்து வரும் லேகா நதிக்குள் குதித்து தன் குழந்தையை மார்போடு இணைத்துக் கொண்டு நீந்துகிறாள். குழந்தைக்கு மூச்சு வாங்குகிறது. மிகவும் சிரமேற்கொண்டு தன் குழந்தையைக் காப்பாற்ற லேகா நதியோடு மோதி மோதி மேல் எழுகிறாள். இதைக் கவனித்த நிஷா தண்ணீருக்குள் குதித்து லேகாவின் தலையைப் பிடித்து அமுக்குகிறாள். ஒருபுறம் குழந்தை, ஒருபுறம் நதி, மற்றொரு புறம் தாயான எமன். லேகா தடுமாறுகிறாள். முடிந்த வரை தன் குழந்தைக்காக போராடுகிறாள். முடிவில் மூவரையும் வால்கா நதி உள்ளிழுத்துக் கொண்டு செல்கிறது
இந்தோ-ஐரோப்பிய மக்களின் முதல் அத்தியாயமான இது நெஞ்சை உறைய வைக்கிறது. காட்டுவாசிகளாக இருந்த போது வாய்க்கப் பெற்ற கொடூரங்களும்,சிற்றின்ப வேட்கையும் இன்னும் நம்மிடம் மிச்சமிருக்கிறது என்பதை அடுத்தடுத்து வரும் எல்லா அத்தியாயங்களும் பறை சாற்றுகின்றன
இந்த நூலிலுள்ள காதல் எபிசோடுகள் அனைத்தும் பெரிதாக உணர்ச்சிவசப் பட வைக்கிறது
கி.மு 1500 ஆண்டில் சுதாஸ் என்ற பாஞ்சாலை இளைஞன் மத்ரர்களின் நிலப்பகுக்குச் சென்று அபாலா என்ற பெண்ணைச் சந்திக்கிறான். அவள் வீட்டிலே வேலைக்கும் சேர்கிறான். இருவருக்கும் பெருங்காதல் மலர்கிறது. தன் தாய்க்கு கொடுத்த வாக்கிற்காக ஒருமுறை தன் தேசம் சென்று வருகிறேன் என்கிறான் சுதாஸ். இங்கு வந்தால் அவனுக்கு அரச பொறுப்பு வருகிறது. முடியாட்சி செய்தாலும் குடியாட்சி நடத்த முயற்சிக்கிறான். அவன் முயற்சிகள் பெரிதாக வேலைக்காகவில்லை. “நீ வரும் வரை காதலோடு காத்திருப்பேன்” என்று தனக்கு உறுதியளித்த அபாலாவைக் காணச் செல்கிறான் சுதாஸ். அங்கு விதி வேறொன்றை நிகழ்த்தி வைக்கிறது.
கி.பி. 50-ல் அஸ்வகோஷன் பிரபா காதலும் அமரத்துவம் பெற்றது. பிராமண குல இளைஞன் அஸ்வகோஷன். யெவன அழகி பிரபா. பிரபாவின் மேலான அழகும் காதலும் அஸ்வகோஷனின் கவிதைகளுக்கு பெரு உரமாகவும் வரமாகவும் இருக்கிறது. இந்து மதத்தைச் சேர்ந்த அவனுக்கு புத்தம் மீது பெரும் ஈடுபாடு வருகிறது. “ஆன்மா அழிவற்றது”என்கிறது இந்து மதம். “இங்கு எதுவுமே நிரந்தரமில்லை” என்கிறது புத்தமதம். இவற்றில் புத்தமதம் மீது மொத்தமாக மையல் கொள்கிறான் அஸ்வகோஷன். அஸ்வகோஷனின் கவிதைகள் கூர்தீட்டப்படுவதற்கு தன் இளமை ஒரு காரணம் என நம்பும் அவனது காதலி பிரபா, “எக்காரணம் கொண்டும் அவன் தன் முதுமையைப் பார்த்து விடக்கூடாது. காலமெல்லாம் தன் அழகான இளமை மட்டுமே அவன் மனதில் இருக்க வேண்டும்” என்றெண்ணி, “நான் இறந்தாலும் நீங்கள் என்னை எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற சத்தியத்தை அஸ்வகோஷனிடம் வாங்கிவிட்டுச் செத்துவிடுகிறாள்.
இப்படி நூலெங்கும் நிறைய உணர்ச்சிக் கதைகள் நிரம்பியுள்ளன. வெள்ளையர்கள் வியாபாரத்திற்காக நம் நாட்டுக்கு வந்த பிறகு நடந்த மாற்றங்களையும அரசியலையும் விரிவாக பேசியுள்ளது நூல்
“அறிவுத் தொடர்ச்சி, அதிகாரத் தொடர்ச்சி, அடிமைத் தொடர்ச்சி, காமத் தொடர்ச்சி என நாம் தொடருகின்ற அனைத்துக்கும் ஒரு மூலம் இருக்கிறது. அதிலுள்ள நல்லத் தொடர்ச்சிகளை மட்டும் நாம் தொடர வேண்டும்”
‘வால்காவிலிருந்து கங்கைவரை’ நூலை வாசித்து முடித்ததும் இதுதான் தோன்றியது

