பசித்த மானுடம்- நூல் விமர்சனம்

ஐக்கிய உணர்வு இல்லாத உடல்தேவை இருக்குமானால் அங்கு சுயநலம் கொடிகட்டிப் பறக்கும். அப்படித்தான் பசித்த மானிடத்தின் நாயகன் கணேசனை அணுகுகிறாள் ஓர் மருத்துவச்சி. அவளுக்கான உடல் அவனை விட்டுப்போனதும் அதுவரை அவன் எச்சிலை உறிந்தவள் எச்சில் இலைபோல் உதறித்தள்ளுகிறாள்.

உடல்சார்ந்த மானுடப்பிறவியின் சுயநலத்தை புட்டுபுட்டு வைத்துள்ளார் ரைட்டர் கரிச்சான் குஞ்சு.
ஆண் உடல் மீது ஆண் கொள்ளும் மோகம் குறித்து இந்நூல் போல் நுட்பமாக யாரும் எழுதியதில்லை; அல்லது அடியேன் வாசித்ததில்லை.

உடல் பிரதானம் என்பதைத் தாண்டிய பேரன்பும் உண்டு என்பதை கண் தெரியாத பிச்சைக்காரி தொழுநோயாளியை தெரிந்தே தழுவும் இடத்திலும், சுந்தரி தன்னை மொத்தமாய் கணேசனிடம் கொடுக்கும் இடத்திலும் உணர முடிந்தது. அது ஆறுதலாகவும் இருந்தது

கிட்டா எனும் ஒரு கேரக்டர் நெகட்டிவாக சித்தரிக்கப்பட்டாலும் முழுக்க முழுக்க நிராகரிப்பை முழுங்கி வளர்பவனுக்குள் இருக்கும் நெருப்பை..தன்னை நெட்டித்தள்ளியவர்களை அண்ணாந்து பார்க்க வைக்க வேண்டும் என்ற வெறியை அந்தக் கேரக்டர் மூலமாக மிக அழகாக பதிவு செய்துள்ளது பசித்த மானிடம்.

காமம், அதிகாரம், செல்வம் ஆகியவற்றில் தீராப்பசி கொண்ட மனிதன் அதைத் தீர்த்துக்கொள்ள எத்தகைய லெவலுக்கும் இறங்குவான் என்பதைச் சொன்னதில் மட்டும் இந்நூல் ஜெயிக்கவில்லை. அப்படி அனைத்தையும் அடைந்து பின் முடிவிலோ அல்லது முதுமையிலோ அவன் அடையப்போவது என்ன? என்ற கேள்வியையும் எழுப்பியதில் தான் நாவல் ஜெயித்துள்ளது.

தனக்கு லாபமானது எல்லாம் நல்லது என்ற கோட்பாடு இங்கு எல்லா மனிதனுக்குள்ளும் உண்டு. பசித்த மானிடமும் அதைப் பற்ற வைத்து ஏற்கெனவே இருக்கும் அந்த எண்ணத்திற்கு வெளிச்சம் சேர்த்துள்ளது. அந்த வெளிச்சம் நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை.

ஆகச்சிறந்த நாவல் ❤️

பரிந்துரைத்த நண்பன் தினேஷ் ராம் அவர்களுக்கு நன்றி 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *