ஆதி வாயில்- நூல் விமர்சனம்

“தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கும் தீயின் உடல் ஒருபோதும் மரிப்பதில்லை” இந்த வரிகளுக்காகவே இந்தநூலை உச்சிமுகராலம். தீ பற்றிய கவிதையில ஒரு பூவும், பூ பற்றிய கவிதையில தீயும் இருக்கும் குட்டிரேவதி கவிதைகளில். பொதுவா நவீனக்கவிதைகள்னா நமக்கு ரொம்ப அலர்ஜி. அதற்கான முக்கியக்காரணம் சாதாரணமா புரியாது அக்கவிதைகள். குட்டிரேவதி கவிதையும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த நூலில் உள்ள ஆறுநூறு கவிதைகளில் ஒருநூறு கவிதை தான் எனக்குப் புரிந்திருக்கும். மற்றவற்றை எல்லாம் புரிந்தது போல பாவ்லா பண்ணிக்கடந்து விட்டேன். ஏன் கவிதை என்ற பெயரில் புரியாமல் இப்படி வதை செய்கிறார்கள் என்று கேட்டதற்கு, காஞ்சிப்புர இலக்கிய வட்டத்தின் மாஸ்டர் புல்வெளிகாமராசன் சார் ஒரு விசயத்தைச் அவருக்கு மற்றொருவர் சொன்னதாகச் சொன்னார். “புதுக்கவிதைகளில் எல்லாம் வாசகனைத் தேடி கவிஞன் போனான். நவீனக்கவிதைகளில் வாசகன் தான் கவிஞனைத் தேடிப்போக வேண்டியதிருக்கிறது. இன்றைக்கு அப்படிப்போக யாரும் தயாராக இல்லை. அதனால் கவிதை வாசிப்பு மிகவும் குறைந்து வருகிறது. மேலும் நவீனக்கவிதைகள் கிட்டத்தட்ட பர்சனல் டைரி போலவும் இருக்கிறது. அதன் மொழி மிகவும் இறுக்கமாக இருப்பதாகவும் படுகிறது. அதற்கான காரணம் தற்போதைய வாழ்க்கைச் சூழலாகக் கூட இருக்கலாம்” என்றார்

நமக்கு ஒரு காட்சியை, ஒரு உணர்வை, காதலை, காமத்தை, பக்தியை, இயற்கையை, சமூகத்தை, வலியை என எதை உணர்த்தினாலும் அதை எளிமையாக உணர்த்த வேண்டும். அதுதான் பிடிக்கும். வைரமுத்து, வாலி, நா.முத்துக்குமார், மு.மேத்தா, அப்துல்ரகுமான், நா.காமராசன், சமகாலத்தின் அட்டகாச கவிஞன் நண்பன் கு.விநாயகமூர்த்தி இவர்கள் தான் நமது ஆல்டைம் பேவரைட்.

மற்றபடி 40 ஆண்டுகால கவிதை வாசிப்பனுபவம் உள்ளவர்களுக்கும், 40 ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கும் கவிதைகளை வாசித்து வருபவர்களுக்கும் குட்டிரேவதி போன்ற நவீனக்கவிஞர்களின் கவிதைகளை புரிந்து புளகாங்கிதம் அடையலாம். எனக்கு கொஞ்சம் தான் புரிந்தது. புரிந்தது வரையில் எல்லாமே சிறந்ததாக இருந்தது.

காத்திருப்பு என்ற தலைப்பில் ஒரு கவிதையை குட்டிரேவதி இப்படி முடித்திருக்கிறார்.

/வலிதாங்கும் இதய மெளனத்தின் ஒளி தீட்டும் பாடலுக்காக காத்திருக்கிறேன். வழியனுப்பினாலும் வரவின் அதிர்வை எதிர்நோக்கும் ஊமைத் தண்டவாளத்தின் இணையாக/ ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *