அடுத்த நொடி ஆச்சர்யமா..ஆபத்தா..ஆனந்தமா என்பதை கணிக்க முடியாத சர்ப்ரைஸ் தான் வாழ்க்கை. அப்படி உலகத்திற்கே சர்ப்ரைஸ் கொடுத்த ஒன்று கொரொனா பெருந்தொற்று. 2020 மார்ச்சிற்குப் பிறகு உலகின் சமநிலையில் நிறைய கேள்விகள் உருவானது. அந்தக் கேள்விகளின் வீரியம் நிறைய மனிதர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கியது.
பெருந்தொற்றில் அல்லல் பட்டவர்களின் வாழ்வை தான் இந்த நாவலில் பதிவு செய்துள்ளார் புதியமாதவி
இந்தியாவிலே அதிக தொற்று மும்பையில் தான் என்ற தகவலை எல்லாத் தொலைகாட்சிகளும் சொல்லியது. எழுத்தாளர் புதியமாதவி மும்பை தாராவியில் வசிப்பவர் என்பதாலும், அவரின் வேர் திருநெல்வேலி என்பதாலும், மும்பையில் வசித்த ஒரு திருநேல்வேலிக் காரியின் வாழ்வு நாவலில் விரிகிறது
வீட்டின் எதிர்ப்பை மீறி காதலனோடு மும்பைக்கு வந்து வாழ்கிறாள் தனம். காதலின் பரிசாக இரு குழந்தைகள் அவளுக்கு. 10க்கு 15 அடி வீடுதான் என்றாலும் மனதுக்கு அதிக பசியில்லாத வாழ்வு அவளுக்கு. எல்லோர் வாழ்விலும் சிறு உடைப்பை ஏற்படுத்திய கொரொனா அவள் வாழ்வில் பேரிடியை இறக்கியது. கிராமம் துறந்து மும்பையில் வாழ்ந்த இந்த பத்து வருட வாழ்வை அர்த்தமற்றதாக்குகிறது கொரொனா. அவளின் பேரன்புக் காதலனான கணவனை கொரொனா கொண்டு போக, பத்து வயது பெண் பிள்ளை ஒன்றோடும், 4 வயது ஆண் பிள்ளை ஒன்றோடும் திருநெல்வேலிக்கே செல்ல முயற்சிக்கிறாள் தனம். ஈ பாஸ் இல்லாமல் பயணிக்கும் அவளின் அந்தப் பயணம் தரும் வலி மிகவும் பெரியது. அதன்பின் அவளுக்கு ஏற்படும் சம்பவம், அதன்பின் அவளின் பத்து வயது மகள் நான்கு வயது தம்பியோடு கிராமத்திற்குச் சென்று படும் அவஸ்தைகள் சொல்லில் அடங்காதவை
இந்த நாவலில் மைனி என்றொரு கதாப்பாத்திரம் உண்டு. வாழ்வின் மீதும், அன்பின் மீதும் நம்பிக்கை கொள்ள வைக்கும் கேரக்டர் அது. தனத்தின் பிள்ளைகள் உறவுகளால் நிராகரிக்கப்படும் காலத்தில், “அய்யோ இந்தப் பிள்ளிய அந்த மைனிட்ட போய் சேரக்கூடாதா?” என்று எண்ண வைக்கும் அளவிற்கு நாவலில் மைனி உயர்ந்து நிற்கிறார்.
கிராமத்தில் உள்ள ரத்த உறவுகளுக்குள் இருக்கும் சுயநலத்தை, குரூரத்தை, பேராசையை எல்லாம் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார் புதியமாதவி
நமக்காக எல்லோரும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை நிச்சயமாக மறுபரிசீலனை செய்தே ஆகவேண்டும். எல்லா மனிதனுக்கும் முதல் முக்கியம் அவன் மட்டும் தான் என்ற உளவியல் உண்மையை நாவல் சுட்டியுள்ளது. நமக்காக அவள் வருவாள், இவன் தருவான் என்ற எண்ணத்தை அடியோடு அகற்றிக் கொண்டு மனதை நிஜவழிக்கு கொண்டு செல்ல வேண்டும். அதுதான் வலியற்ற வாழ்விற்கு வழி
நாவலில் பல எமோஷ்னல் காட்சிகள் உள்ளது. அதை விவரிப்பது வாசிக்க இருப்பவர்களுக்கு ஸ்பாய்லர் ஆகும் என்பதால் எழுதாமல் விடுகிறேன். நல்லதொரு நாவல்

