உலகின் ஆகச்சிறந்த திரைக்கதை கொண்ட படங்களில் இப்படமும் ஒன்று எனச் சொல்லி இத்திரைப்படத்தின் திரைக்கதை நூலை வாங்கித்தந்தார் Asif Meeran ஆசிப் மீரான் அண்ணாச்சி. “முதலில் படத்தைப் பார்த்துவிட்டு பின் நூலை வாசி” என்ற மணிஜி மணி ஜி அண்ணனின் அறிவுறுத்தலின் பேரில் படம் பார்த்தேன். சிட்னி லூமெட் இயக்கி 1953-ஆம் ஆண்டு வெளியான படம் இது. இந்தப்படத்தின் திரைக்கதையை தமிழில் மிக அழகாக மொழிபெயர்த்துள்ளார் கருணாநிதி சண்முகம்! நூலுக்கு அஜயன் பாலாவின் முன்னுரையும் சிறப்புச் சேர்த்துள்ளது
தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டதாக ஒரு சிறுவன் குற்றம் சாட்டுப்பட்டுள்ளான். அவன் தான் கொலைகாரன் என்பதற்கான எல்லா ஆதாரங்களும் பக்காவாக இருக்கிறது. இருப்பினும் நீதிபதி இந்த வழக்கில் ஒரு நிறைவைத் தன்மை இல்லாததை உணர்கிறார். அவரால் முடிவுக்கு வரமுடியவில்லை. அதனால் 12 பேர்கள் அடங்கிய ஒரு நடுவர் மன்ற குழுவிடம், ” இந்த வழக்கின் சாராம்சத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் 12 பேரும் என்ன சொல்கிறீர்களோ அதைத் தீர்ப்பாகச் சொல்லிவிடுகிறேன்” என்கிறார் நீதிபதி. மேலை நாட்டில் இவ்வழக்கம் உண்டுபோல. மேலும் சிறுவன் கொலைகாரன் என்றாலும் இல்லை என்றாலும் அதை 12 பேரும் ஒருமனதாகச் சொல்ல வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்கிறார் நீதிபதி
வெவ்வேறு வாழ்நிலைகளைக் கொண்ட 12 கனவான்களும் அமர்கிறார்கள். சாட்சிகளின் ஸ்ட்ராங்கான வாக்குமூலத்தின் அடிப்படையிலும் சிறுவனுக்கும் அந்தத் தந்தைக்குமிருந்த கசப்பான வாழ்வனுபவங்களின் அடிப்படையிலும் கூடியிருந்த எல்லோருக்கும் சிறுவன் தான் கொலைகாரன் என்ற முன் முடிவு இருக்கிறது. அதனால் நடுவர் மன்றக்குழுவின் விவாதம் பத்து நிமிடங்களில் முடிந்து விடும் என்றே நமக்குத் தோன்றும் படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
12 பேர்களில் ஒருவர் மட்டும், சிறுவன் கொலை செய்தான் என்பதற்கான சாட்சிகள் மீது தனக்குச் சந்தேகம் இருப்பதாகச் சொல்கிறார். ஏனைய 11 பேர்களும் அவரை வச்சி செய்கிறார்கள். ஆனால் அவர் வலுவான குரலோடு தன் வாதத்தை எடுத்து வைக்கிறார். மேலும், “சாட்சிகள் சொல்வது உண்மை என்று தீர்ப்பு சொல்கிறோம். அவர்கள் சொல்லும் உண்மையை தீவிரமாக ஆராய்வது அவசியம்” என்ற கட்டத்திற்கு அவர் செல்கிறார்.
அவரின் நேர்மையும் நேர்த்தியும் நிறைந்த பார்வை விவதாதத்தின் போக்கை மாற்றுகிறது. ஒவ்வொரு நபராக அவர் பக்கம் வருகிறார்கள். ஆனால் அதற்காக அவர் மேற்கொள்ளும் அணுகுமுறை அப்பழுக்கற்றதாக இருக்கிறது. படமாக பார்க்கும் போது விறுவிறு ஆங்கிலத்தை உள்வாங்குவதில் சிரமம் இருந்தது. இந்த நூலை வாசித்தபின் இப்படத்தின் மேன்மையை உள்வாங்க முடிந்தது.
“ஒரு உண்மை நம் உள்ளத்தை தொட்டுவிட்டால் அதை உலகத்திற்குச் சொல்ல தயங்கவே கூடாது. நம் அருகே யாரும் இல்லாவிட்டாலும் கூட உண்மைக்காக நாம் போராடிக்கொண்டே இருக்கவேண்டும். எப்படியும் நிஜத்திற்கு என்று ஒரு வலு உண்டு. அது இறுதியில் வெற்றியைத் தந்தே தீரும்” என்பதை உள்ளத்தில் அறைந்து சொல்கிறது ஆங்கிரி மென்
ஒரு திரைக்கதையை எப்படி அமைக்க வேண்டும் என்பதையும் இந்த நூல் கற்றுத்தருகிறது. அதனால் திரைக்கதை எழுத ஆர்வமுள்ளவர்கள் அவசியம் வாசிக்கலாம்
Best one

