கல்ச்சர் ஹிப்டிங்-ஐ ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் புரிந்துகொள்ளவாவது வேண்டும். அதற்கான முயற்சியே பேட்கேர்ள்.
ரம்யா என்ற பதின்பருவ பெண்ணிற்கு சக பள்ளி மாணவன் மீது காதல் அரும்புகிறது. மிகவும் ஸ்ட்ரிக் ஆன பிராமணிய குடும்பப் பின்னணி கொண்ட ரம்யாவின் வீட்டில் அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்ப, ரம்யாவிற்கு முதல் காதல் தோல்வியில் முடிகிறது . அதன்பின் அவருக்கென ஒரு தனியான வாழிடம் தேடி வீட்டின் உறவைத் துறந்து தனித்து வாழ்கிறார் ரம்யா. அதன்பின் அவர் வாழ்வில் வந்து செல்லும் காதல்கள், இறுதியாக அவர் அடையும்..அல்லது உணரும், அல்லது உணர்த்த நினைக்கும் சுதந்திரம் சாத்தியமானதா என்பதாக பேட்கேர்ள் பயணிக்கிறாள்
ரம்யா என்ற கேரக்டராக மாறி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நாயகி அஞ்சலி சிவராமன். நிஜமாகவே மாஸான நடிப்பு. மூன்று கால கட்டங்களுக்கு ஏற்ற உடல்மொழியும் முகமொழியும் என அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்த்துள்ளார். அவரின் தாயாக வரும் சாந்திபிரியா ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட அனைத்து கேரக்டர்களும் இயல்பை மீறாது நடித்து கவனம் ஈர்த்துள்ளனர்
மூன்று கால கட்டங்களுக்கு ஏற்ப படத்தில் மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியுள்ளனர். மிகச்சிறந்த ஒளி வண்ணங்கள் படமெங்கும் நம்மை ஈர்க்கின்றன. பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி வொர்த்தி
மூன்று தலைமுறை பெண்களின் வாழ்முறைகளையும் அவர்களின் உளவியலையும் காட்சிமொழியாக்கி ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் வர்ஷா பரத். படத்தில் ஹீரோயினின் இலக்கு இதுதான் என்ற தீர்க்கமில்லை. அதனால் அவரின் கேரக்டரோடு பயணப்பட சற்று சிரமம் ஏற்படுகிறது. நாயகியின் அம்மாவிற்கு தனக்கு சுதந்திரம் இல்லை என்பதை உணரத்தெரியவில்லை. அதற்கு முந்தைய தலைமுறைக்கு அது என்னவென்றே தெரியவில்லை. இன்றைய தலைமுறைக்கு சுதந்திரத்தின் எல்லை தெளிவாக தெரிகிறது. அது முந்தைய தலைமுறைக்கே கூட ஒவ்வாமையைத் தருகிறது. இந்த விசயத்தை மிகவும் நேர்த்தியாகத் தொட்டிருக்கிறார் இயக்குநர் வர்ஷா பரத். சென்சார் படம் மட்டும் கொஞ்சம் கத்திரியை ஓரமாக வைத்திருந்தால் பேட்கேர்ள் தரமான அனுபவமாக மாறியிருக்கும். எனினும் எதார்த்தம் பேச வேண்டிய சூழலுக்குள் நம்மைத் தள்ளிவிட்ட வகையில் ஒரு தயாரிப்பாளராக வெற்றிமாறன் வெற்றி பெற்றுள்ளார்
3.5/5
-வெண்பா தமிழ்

