யயாதி/ ஒரு புத்தகம்- ஒரு பார்வை

இயற்கை மனிதனுக்கென்று வழங்கப்பட்டுள்ள வாழ்வின் சுழற்சியை மாற்ற நினைப்பது வாழ்வை கடினப்படுத்தும் செயல் என்பதை யயாதி எடுத்துரைக்கிறது

இளவரசன் புருவின் வருகைக்காக அரண்மனை காத்திருக்கிறது. அரசன் யயாதி அரண்மனையின் அந்தப்புரத்தை அலங்கரிக்கும் படி ஆணையிட்டிருக்கிறான். அரசி தேவயானி தன் பணிப்பெண்ணான சர்மிஷ்டையோடு உரையாடுகிறாள். சர்மிஷ்டை பணிப்பெண்ணாக இருந்தாலும், தேவயானிக்கு ஒரு காலத்தில் தோழி. தேவையானி ஆரியகுல அரசி. சர்மிஷ்டை அரக்கர் குல பெண். இருவருக்குமான நட்பில் ஒரு கீறல் விழுகிறது. கோபத்தில் சர்மிஷ்டை தேவயானியை கிணற்றில் தள்ளிவிடுகிறாள். அரசன் யயாதி தேவயானியை காப்பாற்றி தன் மடி சேர்த்துக்கொள்கிறான். சர்மிஷ்டையின் அப்பா, “காலமெல்லாம் நீ தேவயானிக்கு பணிப்பெண்ணாக இருக்க வேண்டும்” என்று அவளை அனுப்பி விடுகிறார்.

தோழியாக இருந்த சர்மிஷ்டை இப்படித்தான் பணிப்பெண்ணாக அரண்மனைக்குள் வருகிறாள். தேவயானிக்கு சர்மிஷ்டை மீது தோழி என்ற நட்பிருந்தாலும் எங்கு இவள் தன் கணவனான அரசனை கவர்ந்து விடுவாளோ என்ற பயமும் இருக்கிறது. சர்மிஷ்டை எப்போதும் நாவில் விஷம் வைத்துள்ளவள். நாளெல்லாம் அவள் தேவயானியை சொற்களால் குத்துவாள். சர்மிஷ்டை என்ன பேசினாலும் அவள் எனது கட்டளைக்கு உட்பட்டவள் என்ற கர்வம் தேவயானிக்கு இருக்கும். அந்தக் கர்வத்தை தக்க வைக்கவே சர்மிஷ்டை வீசும் வார்த்தைகளை அவள் அனுமதித்தாள். ஆனால் தன் கணவன் யயாதியோடு அவள் உறவு வரைக்கும் செல்வாள் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை. .அது நிகழ்ந்தே விடுகிறது. தேவயானியின் அப்பா சுக்காராச்சாரியார் யயாதிக்கு மாறாத இளமை என்ற வரத்தை அளித்திருப்பார். தன் மகள் தேவயானிக்கு யயாதி சர்மிஷ்டையோடு இணைந்து துரோகமிழைத்ததால் வரத்தைத் திரும்பப் பெற்றுவிடுவார்.

மாறாத இளைமைக்காக எதையும் ஏற்று வாழ்ந்தவன் யயாதி. அதனால் அவன் சுக்கிராச்சாரியாரிடம் மன்றாடுகிறான். அவர் உன் முதுமையை யாராவது பெற்றுக்கொண்டால் உனக்கு இளமை திரும்ப் வரும் என்கிறார்.

தன் முதுமையைப் பெற்றுக்கொள்ள ஆள் தேடுகிறான் யயாதி. யாரை பலி கொடுக்கலாம் என யயாதி யோசிக்கிறான். திருமணம் முடித்து மனைவியோடு வரும் இளவரசன் புரு தன் தந்தையின் முதுமையைப் பெற்றுக்கொள்கிறான்.

பெற்றுக்கொள்ளும் முன்பு
யயாதியின் முதல் தாரத்திற்கு பிறந்த புரு, “தன் வாழ்வை தந்தையான யயாதி தான் அமைத்து வந்துள்ளான் என்றும், என் வாழ்வை நானல்லா தீர்மானிக்க வேண்டும்” என்று புரு தந்தையிடம் பேசுகிறான். அது மிகச்சிறந்த உரையாடலாக அமையப்பெற்றுள்ளது.

அதன்பின் யயாதி இளைஞனாக மாற, அவன் மகன் புரு முதியவனாக மாறுகிறான். இதில் புருவின் இளம்மனைவி சித்திரலேகாவைப் பற்றி யாருமே யோசிக்கவில்லை. யயாதியிடம், “உன் மகன் தியாகத்திற்கு என் வாழ்வு எப்படி பலியகலாம்?” என்று கேட்கிறாள் சித்திரலேகா. இந்த உரையாடலின் ஆழம் நிறைய யோசிக்க வைக்கிறது

பெண்களின் கற்பை யோசிக்கும் ஆண் வர்க்கம் அவளின் விருப்பத்தை யோசிப்பதே இல்லை.

இந்நாடகம் முடியும் போது நமக்குள் ஒரு திறப்பு கிடைக்கிறது. யெஸ். “பிறர் வாழ்வைத் தட்டிப் பறித்தால் நம் வாழ்வு கெட்டுப் போகும்”

நோட் பண்ணி வைத்துக்கொள்ளும் அளவில் மிகச்சிறந்த வசனங்கள் நிறைந்த நாடக நூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *