கவர்னர் தன் பக்கத்து வீட்டுச்சாவுக்குச் செல்கிறான். மறுநாள் சுதாகாரத்துறை வருகிறது. கவர்னரையும் அவன் அப்பா அம்மா உள்பட ஊரில் சிலரையும் வண்டியில் அள்ளிப்போட்டுச் செல்கிறது. அனைவருக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டு, கவர்னர் அவன் அப்பா அம்மா மற்றும் சிலருக்குத் தொற்று உறுதி செய்யப்படுகிறது. கவர்னரின் பொண்டாட்டி பிள்ளைகளோடு அம்மா வீட்டிற்குச் சென்றதால் தப்பிவிடுகிறாள். கொரானாவில் மூவரில் யார் தப்புகிறார்கள் என்பதாக இந்த நாவல் போகிறது. இமையத்தின் நாவல்கள் வரிசையில் சற்று அயர்ச்சியைத் தரும் நாவல் இது. என்றாலும் 4 வருடங்களுக்கு முன், கொரானாவால் நாம் கண்ட, கேள்வியுற்ற பலவற்றையும் ஒரு எளிய மனிதனின் வாழ்வோடு நினைவூட்டிச் செல்கிறார் இமையம். கவர்னர் வியப்பான கேரக்டராக இல்லாவிடினும், அவனது அம்மா முத்துக் கருப்பாயி, அப்பா சண்முகம் இருவரும் அழகானச் சித்திரம். உப்பு வியாபாரம் செய்து, தன் குடும்பத்தை கரையாமல் காப்பாற்றிய சண்முகத்தின் பின்கதை சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
சைக்கிளில் ஒரு மூட்டை வைத்துக்கொண்டு தெருத்தெருவாகச் சென்று, ‘உப்பே உப்பே’ என்று கத்தி வியாபாரம் செய்த நடைமுறை எனக்கும் நினைவிருக்கிறது. பாக்கெட் உப்பு கலாச்சாரம் வருவதற்கு முன்பு, உப்பு வியாபாரிக்கு என்று கிராமங்களில் ஒரு மாஸ் இருந்தது. எங்கள் ஊரில் உப்பு வியாபாரி வெள்ளையன் என்று ஒருத்தர் உண்டு. பன்ச் பிடிப்பதில் வல்லமையானவர். அவருக்கு ஒஹோவென உப்பு வியாபாரம் நடக்கும். ஒரு நாளைக்கு ஒரு மூட்டை விற்றால் போதும் என்றளவிலே திருப்தி கொண்டுவிட்டார். அந்த வியாபாரத்தை அவர் அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தவே இல்லை. அதனால் உப்பு வியாபாரம் மளிகைக் கடைகளில் பாக்கெட்களாக வந்தபின், அவர் கொத்தனார் கையாளாக கூலி வேலைக்குச் சென்றார். இந்தக் கதையில் சண்முகம் ஓரளவு விபரமாக இருந்திருக்கிறார்
நாவல் கொரானா காலச்சம்பவங்கள் பலவற்றை நினைவுப்படுத்துகிறது. லாக்டவுனால் எளிய மனிதர்கள் மனரீதியாக உறவுகள் வழியாக, அதிகாரிகள் சார்பாக எப்படியெல்லாம் பாதிப்புக்கு ஆளானார்கள் என்று நாவல் பேசியுள்ளது. ஆனால் லாக்டவுன் சமயத்தில் மனிதம் நிறைந்த எத்தனையோ சம்பவங்கள் நடந்தது. அதையும் இமையம் பதிவு செய்திருக்கலாம். திரும்பத் திரும்ப ஒரே வட்டத்திற்குள் கதை ரவுண்ட் அடிப்பதால், “இந்த நூலுக்கு 150 page போதுமே ஏன் 248 page?” என்றும் தோன்றியது
இமையத்தின் எழுத்தாற்றல் குறைகளை மறந்து வாசிப்பை அழகாக்கி விடுகிறது என்பது பேராறுதல்

