இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கு கையில் எடுத்தபிறகு இடையில் தொழில் சார்ந்து ஐந்து நூல்களை வாசிக்க வேண்டி வந்தது. அதனால் கேப்விட்டு விட்டு ஒரு மாதமாக வாசித்துச்சேர்த்தேன். 701 பக்கங்கள் கொண்ட மிக முக்கியமான நூல். ஆனால் மொழிபெயர்ப்பு வாசிப்பதற்கு பெரும் சிரமத்தைக் கொடுக்கிறது. இந்நூலின் மொழி பெயர்ப்பை பலரும் பாராட்டியிருக்கின்றனர். அடியேனின் சிற்றறிவில் ஏதேனும் சிரமம் இருக்கலாம். சில முக்கியமான புத்தகங்களுக்கு மொழி பெயர்ப்பில் சொதப்பி விடுகிறார்கள். “காதல் வரலாறு” என்ற ஒரு முக்கியமான நூலும் மொழி பெயர்ப்பால் உள்வாங்க முடியாமல் போயிற்று!
சரி நூலுக்குள் வருவோம்!
சாக்கிய சங்கத்தின் சேனாதிபதி சொல்கிறார், “யாகங்கள் புரிவது பிராமணர்களின் கடமை, போர்புரிவது சத்திரியரின் கடமை, வணிகம் புரிவது வைசியர் கடமை, தொண்டு புரிவது சூத்திரர் கடமை. ஒவ்வொரு வர்ணத்தாரும் தமக்குரிய கடமை புரிவதே அவர்கட்குப்பெருமை. இதுவே நம்முடைய சாத்திர விதிகளின் தன்மை” கோலியர்கள் மீது போர் தொடுக்க வேண்டி இப்படியான வாதத்தை அவர் சபை முன் வைக்கிறார். அதற்கு சித்தார்த்தர் பதிலளிக்கிறார், “பகைமையால் பகைமை ஒழியாதென்றறிவதே தர்மம் என்று நான் புரிந்து வைத்திருக்கிறேன். அன்பால் மட்டுமே அதை வெல்ல முடியும்”
புத்தராக மாறுவதற்கு முன்பே சித்தார்த்தன் புத்தராகவே யோசித்துள்ளார். வாழ்வைத் துவங்கும் போது அவருக்கு அன்பைப் பற்றிய புரிதல் இருந்துள்ளது. தொடர்ச்சியாக வாழ்வை ஊடறுத்துப்பார்க்கும் போது புத்தர் பெரிய பெரிய திறப்புகளை கண்டறிந்து மக்களுக்கு கடத்துகிறார். புத்தர் மீது அம்பேத்கர் கொண்ட பெருங்காதலுக்கான காரணம் “பிரிவினை கடந்த அன்பு” என்பதாக இருக்கலாம். இந்துமதம் மேல் கொண்ட கோபத்தை விட பவுத்தம் மேல் கொண்ட காதல் அம்பேத்கருக்கு அதிகம் என்பதை இந்நூல் வழி உணரமுடிகிறது, காரணம் பவுத்தம் கீழ்கண்டவற்றைச் சொல்கிறது
/பவுத்தத்தில் சடங்கு இல்லை – சாதியில்லை – மாயம் இல்லை – மந்திரமில்லை – பூஜை இல்லை – பிரார்த்தனை இல்லை – எல்லாவற்றிற்கும் மேலாய் தனியுடைமைச் சுரண்டல் இல்லை – இவைகளில் எதுவொன்றிருப்பதும் பவுத்தம் இல்லை. பவுத்தத்தில் அன்பு உண்டு – அறிவு உண்டு – சமத்துவம் உண்டு – சமதர்மம் உண்டு – ஒழுக்கம் உண்டு – இரக்கம் உண்டு – வீரம் உண்டு – விவேகம் உண்டு – இவைகளில் எதுவுமில்லாதது பவுத்தமில்லை/
புத்தர் தன்னை முன் வைக்காமல் தத்துவத்தை மட்டுமே முன் வைக்கிறார். தான் மறைந்த பின்னும் தம்மம் வாழ வேண்டும் என்ற உயர் நோக்கம் அவரிடம் இருந்துள்ளது. ஆதிக்க மனப்பான்மையை உடைக்கும் எல்லா வேலைகளையும் செய்துள்ள புத்தரை அம்பேத்கர் எப்படி கொண்டாடாமல் இருப்பார்?!
மேலும் அம்பேத்கர் வேறோர் நூலில் ஒரு முக்கியமான விசயத்தைக் குறிப்பிடுகிறார், “இந்துமதத்தில் ஒருமனிதன் இந்து மதத்தில் இருந்து விலகாமல் இருப்பதற்கான எல்லா நெகிழ்வுகளும் உண்டு. ஒரு தவறு செய்தால் அதற்கான பரிகாரம் செய்யவேண்டும் என்று சிம்பிளாக முடித்துவிடும் இந்துமதம். ஆனால் பவுத்த நெறிகளில்..முக்கியமாக ஒரு மனிதன் பிக்குவாக மாறவேண்டுமானால் ஏகப்பட்ட கண்டிசன் அப்ளே உண்டு. பவுத்தம் பரந்து விரியாமல் சென்றதற்கு இப்படியான கடுமையும் ஒரு காரணம்” என்ற பொருளில் ஒரு விசயத்தைச் சுட்டிச்செல்கிறார் அம்பேத்கர். உண்மை தான்!
இரக்கம் கொண்ட பவுத்தம் ஒழுக்கம் போதிக்கிறது. அதனாலே அது அடக்கமாக வளர்கிறது. அம்பேத்கரின் கொள்கைகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டியவர்கள் அம்பேத்கர் குறித்த எளிமையான நூல்கள் சிலவற்றை வாசித்தபின் இந்நூலுக்குள் நுழையலாம்

