பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதைச் சொல்லியுள்ள மற்றொரு சமூகநீதி படம்
தூய்மைப் பணியாளர் அபர்ணதியின் மகன் மாஸ்டர் அஸ்வின். அவனுக்குப் படிப்பை விட செஸ் விளையாட்டு மீது அதீத ஆர்வம். ஏற்றத்தாழ்வை மூச்சாக கொண்டுள்ள நம் சமூகம் அவனது திறமைக்கு பல தடைகளைப் போடுகிறது. செஸ் சொல்லிக்கொடுக்க சிறுவன் அஸ்வினுக்கு யாருமில்லாததால் அபர்ணதியே சொல்லிக்கொடுக்கிறார். அப்படியானால் அபர்ணதி செஸ் ப்ளேயரா? அவரின் பின்கதை என்ன? அஸ்வின் செஸ்ஸில் சாதித்தானா? என்பதாக படத்தின் திரைக்கதை விரிகிறது
கதையின் நாயகியாக அபர்ணதி மிக ஆழமான உணர்வுகளை தன் நல்ல நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் நடிப்பு படத்திற்கு பேருதவி செய்துள்ளது. சிறுவன் அஸ்வின் படத்தின் மற்றொரு தூண். அவன் ஆசிரியரை போலீஸ்டேசனில் வைத்து செஸ் விளையாட அழைக்கும் காட்சியில் கைத்தட்டல் வாங்குகிறான். லிங்கேஷ் ஏற்றுக்கொண்ட கேரக்டரை சிறப்பாகச் செய்துள்ளார். வெற்றிச் செழியன், சுரேஷ் மேனென், தமிழரசி, அன்பு உள்ளிட்ட எல்லா நடிகர்களும் இயல்பை மீறாமல் நடித்துள்ளனர்
தினேஷ் ஆண்டனியின் இசை கதைக்குப் போதுமான மைலேஜை கொடுத்துள்ளது. தீரமான உழைப்பை வழங்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ரவி.
திறமை தான் காலத்திற்கும் நிற்கும் என்றாலும், திறமையை நிரூபிக்கும் சூழல் எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. இந்த விசயத்தை கமர்சியல் அம்சத்தோடு பேச முயற்சித்துள்ளார் இயக்குநர் வெற்றிச்செழியன். கதையில் இருக்கும் ஆழம் திரைக்கதையில் இல்லை. நகரும் காட்சிகளில் ஆர்கானிக் தன்மை இல்லாதது பெரும் மைனஸ்! வஞ்சிக்கப்படும் சிறுவன் ஜெயிக்க வேண்டும் என காவல்நிலையத்தில் எல்லோரும் உதவும் காட்சி உள்பட சில தரமான காட்சிகள் படத்தை உயிர்ப்போடு வைக்கின்றன. “ஓடுறவனுக்கு பலவழி இருக்கு. ஆனா துரத்துரவனுக்கு ஒரு வழிதான் இருக்கு.” போன்ற நச் வசனங்களும் அசத்தல். குட்டிக்குட்டி குறைகள் இருந்தாலும் கெட்டியான கருத்தைச் சொன்னமைக்காக மாஸ்டருக்கு ஒரு சல்யூட்!
தி கிராண்ட் மாஸ்டர்- சமூகநீதி வாத்தியார்
3/5
-வெண்பா தமிழ்

