பலி வாங்கும் நோக்கம் கொண்ட வில்லனை போலீஸ் ஹீரோ டீல் செய்யும் படம். முதல் வார்த்தையிலே ஒன்றைச் சொல்லலாம். படம் ஹிட்டு!
ஹீரோ அதர்வா ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். சக போலீஸ்களோடு ஜாலியாக உரையாடும் போது தனது காதல்கதையைச் சொல்கிறார். 20 நிமிட படம் அதிலே செல்கிறது. அந்த 20 நிமிடத்தில் அதர்வாவின் பெற்றோர் காதலி இலக்கு ஆகியவை யாவும் காட்டப்படுகிறது. அதன்பின் ஆறு கான்ஸ்டபிள்கள் ஒன்றிணைந்து ஒரு இரவில் ரோட்டில் ஜாலியாக பேசியபடி நடந்து செல்கிறார்கள். அப்போது டிரைனேஜ் வழியாக ஒருவன் எழுகிறான். அவனை ஆறுபேரும் துரத்துகிறார்கள். அவன் சிட்டிக்குள்ளிருக்கும் ஒரு ஸ்லம் ஏரியாவிற்குள் செல்கிறான். அதர்வா உள்ளிட்ட ஆறு போலீஸும் அங்கு செல்கிறார்கள். அங்கு நெட்வொர்க் வேலை செய்யவில்லை. அதன்பின் அங்கு ஒரு பெரும் ட்விஸ்ட்! அதைத் தொடர்ந்து படத்தில் அடுத்தடுத்த ஆச்சர்யங்கள்
சர்வ நிச்சயமாக அதர்வாவிற்கு மற்றொரு மாஸ்டர் பீஸ் படம். கதையின் தன்மை உணர்ந்து ஆத்மார்த்தமாக நடித்துள்ளார். எதிர்நாயகன் என்றாலும் கதையின் நாயகன் போல பரிணமித்துள்ளார் அஸ்வின். அவருக்குள் இப்படியொரு பெர்பாமன்ஸை எதிர்பார்க்கவே இல்லை. பக்காவாக நடித்துள்ளார். நாயகியும் தனக்கு வழங்கப்பட்ட வெளியில் ஸ்கோர் செய்துள்ளார். கான்ஸ்டபிள்களாக வரும் அனைவரும் அசத்தியுள்ளார். உண்மையை மட்டுமே பேசுவேன் என்ற உறுதிகொண்ட சர்பா எனும் இளைஞர் எமோஷ்னல் காட்சி ஒன்றில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்
தணல் எனும் பெயருக்கு ஏற்றாற்போல் ஒளிப்பதிவில் பெரும் அனலை பாய்ச்சியுள்ளார் ஒளிப்பதிவாளர். பின்னணி இசை ஆகச்சிறப்பாக அமைந்துள்ளது. சுரங்கத்திற்குள் போலீஸ் படை என்ட்ரியாகும் காட்சியை எலிவேட் பண்ணுகிறது இசை
வேளச்சேரியில் நடைபெற்ற போலி என் கவுண்டர் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதையைப் புனைந்துள்ளார் இயக்குநர். காட்சிகள் ஒவ்வொன்றும் எழுதப்பட்ட விதத்திற்கும் எடுக்கப்பட்ட விதத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை. எழுதிய யாவற்றையும் நேர்த்தியாக எடுத்து படத்தின் முடிவு வரை நம்மை இருக்கையோடு கட்டிப்போடுகிறார் இயக்குநர்.
ஒரு பாவத்திற்கு பரிகாரம் மற்றொரு பாவமாகாது என்பதை பக்காவான திரில்லர் மொழியில் சொல்லி ஒரு நல்ல திரையனுபவத்தைத் தந்துள்ளது இந்தத் தணல்
3.5/5
-வெண்பா தமிழ்

