கணவன் மனைவிக்குள் நடக்கும் ஊடலும் கூடலும் தான் படம்
மதுரை அருகே புரோட்டா கடை நடத்துகிறார் விஜய் சேதுபதி. அவரது மனைவி நித்யாமேனென் அவரிடம் சொல்லாமலே புள்ளைக்கு குலதெய்வக் கோயிலில் மொட்டையடிக்கும் வைபோகத்தை நடத்துகிறார். இதை அறிந்த விஜய்சேதுபதி தன் குடும்பத்தோடு வந்து நித்யாமேனென் குடும்பத்திடம் சண்டை போடுகிறார் . இப்படிச் சண்டைபோடும் கணவன் எப்படி காதலாகி கசிந்துருகும் கணவனாக இருந்தார் என்பதற்குப் பின்னால் உள்ளது படத்தின் திரைக்கதை
விஜய்சேதுபதிக்கு கோபம் சிரிப்பு பாசம் ஊடல் காதல் என கலந்து கட்டி அடிக்கும் வாய்ப்பு இப்படத்தில். மிகச்சரியாகப் பயன்படுத்தியுள்ளார். அவருக்கு சற்றும் சளைக்காமல் நடித்துள்ளார் நித்யாமேனென். ரசிகர்களை கவரும் விதமான நடிப்பு அவருக்குச் சிறப்பாக வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு யோகிபாபு சிரிக்க வைத்துள்ளார். சரவணன் தீபா ஆர்.கே சுரேஷ் உள்பட பலரும் தங்கள் கேரக்டர்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்
மதுரையின் அழகியலை தன் கேமராவிற்குள் கொண்டு வந்து படத்திற்குச் சிறப்புச் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுகுமார். சந்தோஷ் நாராயணன் இசையில் ஆல்ரெடி பாடல்கள் ஹிட்! பின்னணி இசையும் படத்தை தூக்கி நிறுத்துகிறது.
பாண்டிராஜ் எப்போதும் வசனங்களில் ஏமாற்ற மாட்டார். இம்முறை ட்ரெண்ட் என நினைத்து எதையெதையோ எழுதி வைத்துள்ளார். படத்தில் எல்லோருமே அதிக டெசிபிலில் கத்துகிறார்கள். திரைக்கதை ஒருசில இடங்களில் நம்மை அதன் இஷ்டத்திற்கு வளைக்கிறது. அதனால் படம் மீதான ஒன்றுதல் நிகழவில்லை. கணவன் மனைவிக்குள் இருக்க வேண்டியது ஆழமான புரிதல். அதை திகட்டிப் போகும் பொரியலாக தந்து நம்மைத் திக்குத் தெரியாமல் சுற்ற விட்டுள்ளார் பாண்டிராஜ். இருந்தும் இருபெரும் கலைஞர்கள் தங்கள் நல்ல நடிப்பால் படத்தைக் காப்பாற்றுகிறார்கள். அதனால் தலைவன் தலைவியை ஒருமுறை வாழ்த்திவிட்டு வரலாம்
3/5
-வெண்பா தமிழ்

