இந்த உலகத்தில் ஒரே ஒரு கதைதான் உள்ளது என்கிறார் ஷோபாசக்தி.
அது சரியானது தான் என்பதை நாவல் சொல்லும்
ரத்தமும் சதையுமான எழுத்து என்று சிலரின் எழுத்துக்களை விமர்சகர்கள் முன் வைப்பார்கள். அதைச் சொல்ல வேண்டிய தேவையின்றி அதையும் தாண்டிய ஒரு பிக்ஷனை கண் முன் நிறுத்துகிறது ஸ்லாம் அலைக்!
தங்கையோடு நடந்து வரும் போது ஒரு விமானம் தரையிறங்கி மேல் எழுகிறது. அடுத்த நொடி தங்கையின் உடல் பிளந்து கிடக்கிறது. அண்ணன் அப்பா அக்கா எல்லோரும் சேர்ந்து தங்கைக்கு காரியம் செய்கிறார்கள். அக்காவும் அம்மாவும் வன்புணர்வு செய்யப்படும் கோரத்தை நிலத்தை அடித்தபடியே சொல்கிறது ஷோபாசக்தியின் எழுத்து. அனுபவத்தை நாவலாக்கும் போது அதில் கற்பனையைச் சேர்க்கணும். அப்போது தான் வாசிப்பின்பம் கிடைக்கும் என்பார்கள். அனுபவத்தை அப்படி எழுதலாம். ஆனால் அனுபவத்தில் உள்ள நிஜத்தை?
பிறந்த தேசத்தில் வாழ முடியாமல் பிற தேசத்தில், “அகதியாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்” என இறைஞ்சும் இடங்கள் நாவலின் எதார்த்த தடங்கள்.
ஜெபானந்தன் நாவலின் மையப்பாத்திரம். அக்கா அப்பா அம்மா கல்வி நிலம் என அனைத்தையும் இழந்து வேறோர் தேச ஏக மன்றாடி, இன்னொருவரின் அடையாளத்தை தன் அடையாளமாக்கி ஜஸ்ட் உயிர் வாழ்தல் போதும் என்ற ஜெபானந்தனின் பயணம் விசித்திரம் நிறைந்தது.
அயல்நாட்டில் ஜெபானந்தன் தன் நாட்டவரான உமையாள் என்றொரு பெண்ணை உறவாக்கி, குடியுரிமைக்காக இருவரும் போராடி, அப்போராட்டத்தோடே ஜெபானந்தனும் உமையாளும் ஒரு மகனையும் பெற்றெடுக்கிறார்கள். அந்த மகன் வளர்ந்து ப்ரான்ஸில் ராணுவ வீரனாகிறான். அதுவரையிலும் ஜெபானந்தனுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை. ஆனால் மகனுக்கு ப்ரான்ஸ் தேசம்
பிறந்த தேசமாயிற்று. ஒரு கட்டத்தில் அந்த மகன் சடலமாக வருகிறான். உமையாள் உடைந்து கிடக்கிறாள். ஜெபானந்தன் தன் மகனின் பேப்பர்களை அவளிடம் கேட்கிறான். அவனைச் சொல்லியாவது குடியுரிமை வாங்கலாமென.
இந்த உலகத்தில் ஒரே ஒரு கதை தான் உள்ளது. அது வாழும் கதை
வாழும் வாய்ப்பற்று இறந்து போனவர்களின் கல்லறைகளை கேட்டால் , வாழும் வாய்ப்பிற்கான சாத்தியங்களைத் தவறவிட்ட கதைகளையோ, தயங்கிவிட்ட கதைகளையோ வருத்தத்தோடுச் சொல்லும். சரியான சூழல் கூடி வந்தால் பல மனிதர்கள் தன் வாழ்தல் பொருட்டு எதையும் செய்வார்கள் என்பதை பாசாங்கற்று பேசியிருக்கிறார் ஷோபாசக்தி
ஜெபனானந்தனின் கனவில் இறந்து போன அக்கா வரும் ஒரு காட்சியுண்டு நாவலில். அப்படியொரு காட்சியை கனவிலும் காண இயலுமா?
விடுதலைப் புலிகள் மீதான விமர்சன குரல், ஈழத்தில் இந்திய ராணுவம் செய்த அவலத்தைச் சொல்லும் குரல், இந்திய ராணுவம் வந்ததும் யாழ்ப்பண உறவுகள் “இவர்கள் நம் தொப்புள்கொடி” என்று உருகி வழிந்த அறியாமை குரல், அதிகாரமும் இறுமாப்பும் ஏற்படுத்திய அவலத்தின் குரல் என நிறைய குரல்களை நம் கண்கள் வழி செவிக்குள் தள்ளி மனதுக்குள் இறக்குகிறது ஸ்லாம் அலைக் ..

