சிங்காரம்- விமர்சனம்

நரிக்குறவ மக்களின் வாழ்வின் துயரங்களையும் துயரம் தாண்டி அவர்கள் உயரம் செல்ல வேண்டிய அவசியத்தையும் பேசியுள்ள படம் சிங்காரம்

யோகிபாபு, அவரது தந்தை எம்.எஸ் பாஸ்கர், தங்கைகள் இருவர் உள்ளிட்ட அவரது இனக்குழு பஞ்சம் பிழைப்பதற்காக ஒரு ஊருக்கு வருகிறார்கள். ஊரின் பெரிய மனிதரான வேல.ராமமூர்த்தி அவர்களுக்கு இடமளித்து அடைக்கலம் கொடுக்கிறார். ஊரிலுள்ள சில ஆதிக்க வெறி கும்பல் அந்த நரிக்குறவ மக்களுக்கு பாலியல் ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் தொல்லை கொடுக்கின்றனர். இந்தத் தொல்லைகளை இனக்குழுவின் மூத்தமகனான யோகிபாபு எப்படிச் சமாளித்துச் சாதிக்கிறார் என்பதே படத்தின் கதை

நாயகனாக யோகிபாபு சில இடங்களில் மட்டுமே வேடத்திற்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கரின் வசன மாடுலேசனும் நடிப்பும் நரிக்குறவ முதியவரை அச்சு அசலாக பிரதிபலிக்கிறது. ஜாவா சுந்தரேசன் உள்ளிட்ட பிற நடிகர்கள் அனைவரும் ஓரளவு ஒகேவான நடிப்பைக் கொடுத்துள்ளனர். (நிறைய இடங்களில் பலரிடம் ஓவர் ஆக்டிங்)

இசையமைப்பாளர் பொருத்தமான இசையைக் கொடுத்துள்ளார். கதை நடக்கும் காலகட்டத்திற்கு ஏற்ற பாடல்களும் ஒகே. ஒளிப்பதிவாளர் தனக்கு கிடைத்த பட்ஜெட்டை வைத்து நல்ல விஷுவலை கொடுக்க முயன்றுள்ளார்

ஜெமினிகணேசன் கே.ஆர் விஜயா நடித்த குறத்தி மகன் படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க நரிக்குறவ மக்களின் வாழ்வைச் சொல்லும் படமாக இந்தப்படம் தான் அமைந்துள்ளது. இப்படியான விளிம்பு நிலை இனத்தின் கதையை கையிலெடுத்த இயக்குநர் கே.வி கதிர்வேலுவிற்கு பாராட்டுக்கள்! பின்பாதி திரைக்கதையில் எளியவன் அதிகாரத்தை நோக்கிச் செல்லும் காட்சிகளை சிறப்பாக கொண்டு வந்துள்ளார் இயக்குநர். நடிகர்களின் ஆக்டிங்கில் இருந்த செயற்கைத்தனத்தை மாற்றி, மேக்கிங்கில் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இந்தச் சிங்காரம் மனதில் நங்கூரம் பாய்ச்சிருக்கும்!

இப்படியான மக்களின் வாழ்வை படமாக எடுத்த அக்கறைக்கு வாழ்த்துகள்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *