செய் செய்யாதே- விமர்சனம்

தலைப்பை கண்டதும், “எதைச் செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது” என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதற்கு, “நல்லதைச் செய், அல்லதைச் செய்யாதே” என பாடமெடுத்துள்ளார் இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா

நேர்மையும் நோயாளிகள் மத்தியில் நன் மதிப்பும் கொண்டவர் மருத்துவர் சந்திரபோஸ். அவர் தான் படத்தின் நாயகன். அவரது மருத்துவச் சேவையில் நாடு மகிழ்ந்தாலும் வீடு மகிழவில்லை. அதனால் அவரது மனைவியே அவருக்கு சென்னைக்கு பணி மாற்றலாகும் சூழலை ஏற்படுத்துகிறார். சென்னை வரும் சந்திரபோஸ் ஒரு மெடிக்கல் கிரைமை கண்டுபிடிக்கிறார். அதன்பின் அவர் எடுக்கும் நல்ல முயற்சிகளே படத்தின் கதை

கதையின் நாயகனாக சந்திரபோஸ் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். மருத்துவமனையில் எல்லா நோயாளிகளிடமும் வாஞ்சையோடு பேசும்போதும், மனைவி குழந்தைகளோடு ஜாலியாக விளையாடும் போதும் இயல்பாக நடித்துள்ளார். முதல்வராக நடித்துள்ள ஹெச்.ராஜா கம்பீரமான வசனங்களைப் பேசியுள்ளார். குரு விஜய், தர்ஷினி ரெட்டி உள்ளிட்ட பிற நடிகர்களும் ஓரளவு நன்றாகவே நடித்துள்ளனர்

படத்தின் பட்ஜெட்டை நினைவூட்டும் ஒளிப்பதிவு என்றாலும் பெரிதாக மோசமில்லை. ஒளிப்பதிவாளர் ராம்நாடு வாசுவின் உழைப்பை பாராட்ட வேண்டும். இசைஞர் டாக்டர் எஸ்.ராஜா ஒகேவான இசையை வழங்கியுள்ளார்

மெடிக்கல் ஏரியாவிலுள்ள கிரைமை இவ்வளவு துல்லியமாக சமீப படங்களில் பார்த்ததில்லை. ஹார்ட் அட்டாக் ஏன் வருகிறது அதன் பின்னாலுள்ள சம்பவங்கள் எல்லாம் பகீர் ரகம். ஒரு பில்-ஐ பாஸ் செய்வதற்குப் பின்னால் அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் எவ்வளவு ஊழல் செய்கிறார்கள் என்பதையும் போல்டாக பேசியுள்ளார் இயக்குநர். ஆவணப்படம் போன்ற தோற்றத்தைத் தந்தாலும் நாம் ஆவணம் செய்யவேண்டிய படம்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *