மதமாற்றம் குறித்த பிரச்சாரப் படமாக வந்துள்ளது பரமசிவன்
ஒருமலை சார்ந்த நிலத்தில் மூன்று மதப்பிரிவினர் மூன்று கிராமங்களாகப் பிரிந்து கிடக்கின்றனர். இதில் கிறிஸ்தவ கிராமத்திற்கும், இந்து கிராமத்திற்கும் அடிக்கடி சண்டை வருகிறது. இச்சூழலில் நாயகன் விமல் சாயாதேவியோடு இணைந்து கிறிஸ்தவ கிராமத்தில் ஒரு இளைஞரையும், இந்து கிராமத்தில் ஒரு இளைஞரையும் கொலை செய்கிறார். இந்தக் கொலைகளுக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பதே படத்தின் கதை
மதம் குறித்த படம், மேலும் பேய்படமும் கூட. இருந்தும் இக்கதைக்குள் தன்னை அழகாகப் பொருத்திக்கொண்டு நடித்துள்ளார் விமல். சாயாதேவி கொடுத்த வேலைக்கு குறை வைக்கவில்லை. கிறிஸ்தவ பாதராக வரும் எம்.எஸ் பாஸ்கர் நெல்லைத் தமிழில் பேசி கவனம் ஈர்க்கிறார். கூல் சுரேஷ், சுகுமார், மகேந்திரன், ஸ்ரீ ரஞ்சனி, வி.ஆர் விமல்ராஜ், காதல் சுகுமார், ஆறுபாலா, வீரசமர் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். இவர்களுடன் படத்தின் இயக்குநர் இசக்கி கார் வண்ணனும் ஒரு முக்கியக் கேரக்டரில் நடித்துள்ளார்
இசையில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளார் தீபன் சக்கரவர்த்தி. கேமராமேன் சுகுமார் திண்டுக்கல் மாவட்ட நிலப்பரப்பில் நடக்கும் கதை என்பதால் கொடைக்கானலை எபெக்டை கேமராவிற்குள் கொண்டு வந்துள்ளார்
படத்தின் பிரதான பிரச்சனையே கேரக்டர்கள் பேசிக்கொண்டே இருப்பது தான். சினிமா என்பதே காட்சிமொழி. அதை உணராமல் எல்லாவற்றையும் பேசியே சரிசெய்ய முயல்கின்றனர். அதனலே முயல்வேக கதை ஆமைவேக திரைக்கதையாக மாறிவிட்டது. ரைட்டிங் தான் ஒரு படத்திற்கு ஆதாரம். அதை உணர்ந்திருந்தால் இந்தப் பரமசிவனும் பாத்திமாவும் ரசிகர்களுக்கு நல்லருள் கொடுத்திருப்பார்கள்
2.5/5
-வெண்பா தமிழ்

