முதற்கனல்- விமர்சனம்

இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் அபாயம் போதை. அந்த போதை எனும் கொடூரத்திற்கு எதிரான ஒருபடம் இந்த முதற்கனல்

நாயகன் அஸ்வின் விஸ்வநாதன் வீட்டிலும் ஸ்கூலிலும் பேர்சொல்லும் பிள்ளை. சமத்து பையனான அவர் தன் தந்தையுடன் ஒரு ஊருக்குச் செல்கிறார். அங்கு அவருக்கு கிடைக்கும் நண்பன் ஒருவனால் கஞ்சா அடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிறார். அவரின் தீய நடவடிக்கை ஊர் திரும்பிய பிறகும் மாறவில்லை. வீடும் ஸ்கூலும் அவரின் மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சியாகிறது. ஒருமுறை ஆழமாக விழுந்தால் எழ முடியாத அந்தப் போதை வாழ்வு அவரை என்ன செய்தது? இல்லை அவர் மீண்டு வந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை

நாயகனாக அஸ்வின் விஸ்வநாதன் அளவான நடிப்பை வழங்கியுள்ளார். போகப்போக பாசிட்டிவான நடிப்பு அவருக்கு பிடிபடும். ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, அரி கரன், யோகேஷ், ஆர்.வெங்கடரமணன், டி.ராஜேந்திரன் உள்ளிட்ட பிற நடிகர்கள் ஒகே ரகம்

சிக்கனமான ஒளிப்பதிவு என்றாலும் பெரிதாக துருத்தாமல் காட்சிகளை படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் கந்தசுவாமி கோபால். இசையமைப்பாளர் மீராலால் பாடல்களில் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசைத்துள்ளார். பின்னணி இசை ஓரளவு படத்திற்கு மைலேஜ் கொடுத்துள்ளது

கதையாக அவசியமான ஒன்றை கையிலெடுத்துள்ளார் இயக்குநர் வெங்கடரமணன். திரைக்கதையாக அவற்றை மாற்றுகையில் அவருக்கு சில கன்பியூஸ் இருந்துள்ளது. மேக்கிங்கில் இன்னுமே மெனக்கெட்டிருக்கலாம். வழக்கமான வசனம் என்றாலும் இந்தப்படத்திற்கு கீழ்கண்ட வசனம் பொருந்தும்

“ஆக்கத்தில் குறையிருந்தாலும் நோக்கத்தில் குறையில்லை”

முதற்கனல்- சமூகப்புயல்
3/5
-வெண்பா தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *